நாம் தற்போது ஷஃபான் மாதத்தில் இருந்துக் கொண்டிருக்கின்றோம். கண் மூடி விழிப்பதற்குள் இந்த மாதம் வந்துவிட்டது. சிலவேளைகளில், அல்லாஹ் நமக்கு அருளியுள்ள காலத்தின் மதிப்பை நாம் உணரத் தவறி விடுகிறோம். நாம் அதிக காலம் வாழ்வோம்; வரும் ஆண்டில் ஷஃபான் மற்றும் ரமலானின் வாய்ப்புகளைப் பெறுவோம்; அவற்றில் நாம் சில திட்டங்களை நிறைவேற்றிக் கொள்ளலாம் என்று பலர் நினைக்கிறார்கள்.
தனது இறுதி காலத்திலோ அல்லது மரண தருவாயிலோ காலத்தின் மதிப்பை உணரும் நபர்களில் ஒருவராக நாம் ஆகி விடக் கூடாது. அல்லாஹ் திருக்குர்ஆனில் கூறுகின்றார்:
முடிவாக அவர்களில் ஒருவருக்கு மரணம் வந்து விட்டால் “ என்னுடைய இறைவனே! நான் விட்டு வந்ததில் நற்செயலை நான் செய்வதற்காக என்னை உலகத்திற்குத் திருப்பி அனுப்புவாயாக!”என்று கூறுவார். ஆனால் விஷயம் அவ்வாறல்ல, நிச்சயமாக அது அவர் கூறுகின்ற (வெறும்) வார்த்தையேயாகும். அவர்களுக்கு முன்னால்-அவர்கள் எழுப்படுகின்ற நாள் வரை (பர்ஜக் எனும்) ஒரு தடுப்பு இருக்கின்றது” (அல்-முஃமின் :99-100 )
அல்லாஹ் நமக்கு அருளியுள்ள காலத்தின் அருமையை நாம் உணர்வதற்கு, அல்லாஹ் உடனான நமது தொடர்பின் நிலை எவ்வாறுள்ளது எனச் சிந்திக்க வேண்டும். அல்லாஹ்வுக்காகவும், அவனிடம் பிரார்த்தனை புரிவதற்காகவும் போதுமான நேரத்தை நாம் ஒதுக்கியுள்ளோமா? எனச் சிந்திக்க வேண்டும்.
நபி (ஸல்) அவர்கள் ஷஃபான் மாதம் முழுவதையும் எவ்வாறு நற்செயல்களால் நிரப்பினார்கள் என்பதை அறிந்து, அதன்படி செயல்பட்டு, அல்லாஹ்வின் நெருக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள ஷஃபான் மாதத்தைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். நபி(ஸல்) அவர்கள் இப்படி நவின்றார்கள்:
“ரஜப் மற்றும் ரமலான் மாதங் களுக்கு இடையிலுள்ள ஷஃபான் மாதத்தின் விஷயத்தில் ஜனங்கள் அக்கறையற்று இருக்கிறார்கள். ஆனால், அம்மாதத்தில் தான் பிரபஞ்சத்தின் ரட்சகனாகிய அல்லாஹ்வின் பக்கம் நமது செயல்பாடுகள் உயர்த்தப்படுகின்றன. நான் நோன்பாளியாக இருக்கும் நிலையில் அல்லாஹ்விடம் எனது செயல்பாடுகள் உயர்த்தப்படுவதை விரும்புகிறேன்”
நாம் இவ்வாண்டு முழுவதும் செய்த செயல்பாடுகளின் அறிக்கை எவ்வாறிருக்கும்? நம்மைப் படைத்தவனாகிய அல்லாஹ்வின் முன்னிலையில் நமது செயல்பாடுகளின் புத்தகம் சமர்ப்பிக்கப்படும் போது நமது மதிப்பு என்னவாக இருக்கும்? நமது செயல்பாடுகளின் புத்தகங்கள் இன்று நமக்கு காண்பிக்கப்பட்டால் நாம் மகிழ்ச்சியாக, பெருமைப்படும் விதத்தில் அவை இருக்குமா? அல்லது தர்மசங்கடமான நிலையில் இருப்போமா? நாம் இன்னும் அதிக நற்காரியங்களைச் செய்திருக்க வேண்டுமே எனக் கவலைப்படுபவர்களாக இருப்போமா? என்றெல்லாம் நாம் சிந்திக்க வேண்டும். நபி(ஸல்) அவர்கள் பாவங்கள் அனைத்தும் மன்னிக்கப்பட்டவர்களாக இருந்தும்கூட ஷஃபான் மாதத்தில் வணக்க வழிபாடுகளில் ஈடுபடுவதில் ஆர்வமிக்கவர்களாக இருந்துள்ளார்கள்.
ரமலான் மாதம் மிகவும் அருகில் உள்ளது என்பதை முன்னறிவிப்பு செய்வதாக ஷஃபான் மாதம் உள்ளது. இம்மாதத்தில் நமக்கு விடுக்கப்பட்டுள்ள கடமைகளில் ஒன்று, இம்மாதத்தின் அதிக நாட்களில் நோன்பு நோற்பதாகும். நபி (ஸல்) அவர்களின் அன்பு மனைவியாகிய ஆயிஷா (ரலி) அறிவிக்கின்றார்கள்:
“நபி (ஸல்) அவர்களை, (ரமலான் மாதத்தை அடுத்து) ஷஃபான் மாதத்தில் அதிக நோன்புகளை நோற்றதைப் போன்று வேறு எந்த மாதத்திலும் அதிகமாக நோன்பு நோற்பவர்களாக நான் காணவில்லை” (ஹதீது நூல்கள்: புகாரி, முஸ்லிம்)
ஷஃபான் மாதத்தில் அதிகமாக நோன்பு நோற்கும் படி நாம் ஆர்வ மூட்டப்படுவதற்கான தத்துவங்களில் ஒன்று, ரமலான் மாதத்தில் நற்காரியங் களைச் செய்வதற்கு நாம் தயாராக வேண்டும் என்பதாகும். ரமலான் மாதத்தில் நாம் நிறைவேற்றும் மற்ற அமல்களையும் ஷஃபான் மாதத்திலும் நிறைவேற்றும்படி நாம் ஆர்வமூட்டப்பட்டுள்ளோம்.
இறை கடமையாக உள்ள வணக்க வழிபாடுகளை, நற்காரியங்களை முறைப்படி செய்வதற்கு மிகச் சிறந்த பயிற்சிப் பாசறையாக ஷஃபான் மாதம் திகழ்கிறது. இம்மாதத்தில் பயிற்சி களை எடுத்துக் கொள்ளும்போது ரமலான் மாதத்தில் அது போன்ற நற்காரியங்களை அதிகமாகச் செய்வது மிக எளிதாகி விடுகிறது.
சன்மார்க்க அறிஞர்களில் ஒருவராகிய அபூபகர் அல்-பல்கி (ரஹ்) பின்வருமாறு கூறினார்கள்:
“ரஜப் மாதம் விதைகளை விதைக்கப்படும் மாதமாகும். ஷஃபான் மாதமாவது செடிகளுக்குத் தண்ணீர் ஊற்றும் மாதமாகும். ரமலான் மாதமோ பழங்களை அறுவடை செய்யும் மாதமாகும்” (நூல்: லதாயிஃபுல் மஆரிஃப்)
இறை நம்பிக்கையாளர்களாகிய நாம் நமது வணக்க வழிபாட்டுச் செயல்களின் மூலம் ஆன்மீக ரீதியில் நம்மை நாம் தயார் செய்து கொள்வதோடு, அறிவுப்பூர்வமாக முன்னேற்றம் காண்பதற்கு அதிகமானக் கல்வியறிவைத் தேடுவது அவசியமாகும் என்பதையும் உணர வேண்டும். ஒவ்வொரு வருடமும் நமது சமுதாயத்தில் சிலர், நோன்புக் காலங்களில் தாம் செய்த தவறுகளைப் பற்றி கேள்வி கேட்கின்றார்கள். அவர்களின் நோன்பு சரியான நிலையில் உள்ளதா அல்லது முறிந்து விட்டதா என்ற விஷயத்தில் அவர்களிடம் நிச்சயமற்ற சிந்தனைகள் ஏற்படுகின்றன.
எனவே, ஒவ்வொரு இறை நம்பிக்கையாளரும் நோன்பு சம்பந்த மான இஸ்லாமியச் சட்ட திட்டங்களை அறிவது அவசியமாகும். உதாரணமாக, ஒருவர் நோன்பு நோற்கும் போது எந்தெந்தச் செயல்களைச் செய்யுமாறு ஆர்வமூட்டப்பட்டுள்ளார்; எவ்வித விஷயங்களெல்லாம் நோன்பை முறித்து விடும்; நோன்பின் மூலம் பெற வேண்டிய பாடங்கள் என்ன போன்றவற்றையெல்லாம் அறிவது அவசியமாகும். கல்வியறிவால் நம்மை நாம் ஆயத்தப்படுத்திக் கொள்ளும்போது நோன்பை முறிக்கின்ற அல்லது நோன்பின் நன்மைகளைக் குறைக்கின்ற செயல்களிலிருந்து நம்மை நாம் பாதுகாத்துக் கொள்ளலாம்.