ஆன்மிகம்

சமணம்: மோகம் இல்லவர் நல்ல முனிவரே

செய்திப்பிரிவு

மோகம் எனும் காற்றால் அலைக்கழிக்கப்பட்டு மனித இனம் படும் பாடு எண்ணில் அடங்காது. மலர்ச் சோலையில் மறைந்திருந்து கடிக்கும் பாம்பு போல, உடலில் மறைந்திருக்கும் நோயும் ஒரு நாள் தாக்க மனிதன் இறந்து போகிறான். ஆனால் அதைப்பற்றி கொஞ்சமும் எண்ணாது நூறு ஆண்டுகளுக்கும் மேலாக வாழப்போவதாக எண்ணி, மோகத்தினால் மனிதன் செய்யும் ஆரவார ஆர்பாட்டங்கள் அனைத்தும் இரங்கும்படியாகவே அமைகின்றன.

அறியாமை எனும் விதையில் பிறந்து, மோகம் எனும் வேர் மண்ணில் ஆழ இறங்கி, செழித்தோங்கி, காதல், இன்பம் போன்ற கிளைகளை விட்டு வருத்தம் என்கிற மலர் மலர்ந்து, துன்பம் எனும் காய் காய்த்து, மரணம் எனும் கனியைப் பெற்று மனித உடல் போகிறது.

மோகமே உயிரை நரக, விலங்கு, தேவ, மனித கதியாகிய நாற்கதிகளில் மீண்டும் மீண்டும் பிறந்து பெரும் துன்பத்தை அடைய வைக்கிறது. மனம், சொல், செயல், பொய்க்காட்சி முதலானவற்றை அடக்காமல் இன்னல்களுக்கு வழிவகுக்கிறது. மனிதர்களை விட்டில் பூச்சிகளாகவும் வலையில் சிக்கும் மான்களாகவும் ஆக்கி, மோகம் வீழ்த்துகிறது. மோக வலையில் சிக்கி உயிர், பேரழிவைச் சந்திக்கிறது.

மோகம் பிறவிக்கு வித்து. துன்பங்களுக்குத் தாய். அறிவை மறைக்கும் கோரப் பேய். முக்தியைத் தடுக்கும். பாவத்தைச் சேர்த்து அறத்தை அழிக்கும். மூன்று உலகிலும் வலிமையானது. துறவிகளுக்கும் தொல்லை தருவது. அதனால் மோகம் அற்றவரே நல்ல துறவி ஆவார்.

ஆகவே மோகத்தைத் தவிர்த்தால் துன்பங்களை தவிர்த்து பேரின்பக் கடலில் திளைக்கலாம். இதனைத்தான் சமணத்தின் மேரு மந்திர புராணம் தெரிவிக்கிறது.

மோகமே பிறவிக்கு நல்வித்தது

மோகமே வினை தன்னை முடிப்பது

மோகமே முடிவைக் கெட நிற்பது

மோகமே பகை முன்னை உயிர்க்கெல்லாம்

மோகமே திரியக்கிடை உய்ப்பது

மோகமே நரகத்தில் விழுப்பது

மோகமே மறமாவது முற்றவும்

மோகமே அற மாசுற நிற்பதும்

மோகமே நிறையா நிறை யாயது

மோகமே மூவுலகின் வலியது

மோகமே முனிமைக் கிடையூறது

மோகம் இல்லவர் நல்ல முனிவரே.!

SCROLL FOR NEXT