ஆன்மிகம்

குருப்பெயர்ச்சி பொதுப் பலன்கள்: மேஷ ராசி வாசகர்களே (13.11.2021 முதல் 13.4.2022 வரை)

செய்திப்பிரிவு

ஆழமாக யோசிக்கும் நீங்கள், அநாவசியமாக அடுத்தவர்கள் மீது பழிசுமத்த மாட்டீர்கள். உங்கள் ராசிக்கு உத்தியோக ஸ்தானமான பத்தாம் வீட்டில் அமர்ந்துகொண்டு அடுக்கடுக்கான வேலைச்சுமையையும், உங்களைப் பற்றிய அவதூறுப் பேச்சுக்களையும், கௌரவக் குறைவான சம்பவங்களையும் அவமானத்தையும் ஏற்படுத்திய குருபகவான் 13.11.2021 முதல் 13.4.2022 வரை ராசிக்கு 11-ம் வீட்டில் அமர்வதால் இப்போது என்னவாகுமோ, அடுத்தது என்ன நடக்குமோ என்று அச்சத்தால் கூனிக்குறுகி, ஒதுங்கியிருந்த நீங்கள், இனி வெளியுலகத்துக்கு வருவீர்கள். எந்த வேலைகளையும் முழுமையாக முடிக்க முடியாமல் தடுமாறினீர்களே! குடும்பத்திலும் சின்னச் சின்ன விஷயங்களுக்கெல்லாம் பிரச்சினை வந்ததே! இனி அவற்றுக்கெல்லாம் லாப ஸ்தான குருபகவான் நல்ல தீர்வுகளைத் தருவார். கடினமான காரியங்களையும் எளிதாக முடித்து வெற்றி பெறுவீர்கள். பணப்புழக்கம் அதிகரிக்கும்.

கைமாற்றாகவும், கடனாகவும் வாங்கியிருந்த பணத்தையெல்லாம் திருப்பித் தருவீர்கள். பழைய பிரச்சினைகளுக்கு மாறுபட்ட அணுகுமுறையால் தீர்வு கிடைக்கும். பிரபலங்கள், அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். பணப்பற்றாக்குறையால் தடைப்பட்டிருந்த வீடு கட்டும் பணியைத் தொடங்குவீர்கள். வங்கிக் கடன் உதவி கிட்டும். திருமணம், சீமந்தம், கிரகப் பிரவேசம் போன்ற சுப நிகழ்ச்சிகளால் வீடு களை கட்டும்.

கணவன் மனைவிக்குள் நெருக்கம் அதிகரிக்கும். மூத்த சகோதர வகையில் இருந்த மனக்கசப்பு நீங்கும். புது வேலைக்கு முயற்சி செய்தீர்களே! நல்ல பதில் வரும். ஏளனமாகவும், இழிவாகவும் பேசியவர்கள் எல்லாம் இனி உங்களைப் பாராட்டுவார்கள். திருமணம் தள்ளிப் போனவர்களுக்கு கூடி வரும். மனைவிவழி உறவினர்கள் மத்தியில் இருந்த சலசலப்புகள் நீங்கும். புதிய பதவி, பொறுப்புகள் தேடி வரும். தாமதமாகிக் கொண்டிருந்த அரசாங்க விஷயங்களெல்லாம் நல்ல விதத்தில் முடிவடையும். வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் குறையும். புதிதாக வாகனம் வாங்குவீர்கள்.

உங்கள் ராசிக்கு மூன்றாம் வீட்டை குரு பார்ப்பதால் மனோபலம் கூடும். தன்னிச்சையாக, தைரியமாக முடிவுகள் எடுக்கத் தொடங்குவீர்கள். வீடு மனை வாங்குவது, விற்பது லாபகரமாக முடியும். இளைய சகோதரர் வகையில் அனுகூலம் உண்டு. டி.வி., ஃப்ரிட்ஜ், வாஷிங் மெஷின் போன்ற சாதனங்கள் வாங்குவீர்கள். குரு ஐந்தாம் வீட்டைப் பார்ப்பதால் மனத்தில் இருந்த குழப்பங்கள் நீங்கி இனித் தெளிவு பிறக்கும்.

குழந்தை பாக்கியம் உண்டு. மகளுக்கு எதிர்பார்த்த குடும்பத்திலிருந்து நல்ல வரன் அமையும். மகன், கூடாப்பழக்கங்களிலிருந்து விடுபடுவார். உங்கள் அருமையைப் புரிந்துக் கொள்வார். குடும்பத்தினருடன் குலதெய்வக் கோயிலுக்குச் சென்று நேர்த்திக்கடன் செலுத்துவீர்கள். பூர்வீகச் சொத்துப் பங்கை கேட்டு வாங்குவீர்கள். குரு, ராசிக்கு ஏழாம் வீட்டைப் பார்ப்பதால் சோர்வு, சலிப்பு நீங்கி உற்சாகமடைவீர்கள். பணவரவு உண்டு. புதிய திட்டங்கள் நிறைவேறும். வி.ஐ.பிக்களின் வீட்டு விசேஷங்களில் கலந்து கொள்வீர்கள். மனைவி வழியில் ஆதாயமடைவீர்கள். விலையுயர்ந்த ஆபரணங்கள் வாங்குவீர்கள்.

13.11.2021 முதல் 30.12.2021 வரை செவ்வாயின் அவிட்டம் நட்சத்திரத்தில் குருபகவான் செல்வதால் சவால்களில் வெற்றி பெறுவீர்கள். திடீர் பணவரவு உண்டு. தைரியமாக சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். பேச்சில் கம்பீரம் பிறக்கும். வீடு, மனை வாங்குவது, விற்பது லாபகரமாக அமையும். சகோதரர்கள் உங்களைப் புரிந்து கொள்வார்கள்.

31.12.2021 முதல் 02.03.2022 வரை சதயம் நட்சத்திரத்துக்கு குருபகவான் செல்வதால் வீண் சந்தேகம், ஈகோ பிரச்சினையால் கணவன் மனைவிக்குள் பிரிவு ஏற்படக்கூடும்.

02.03.2022 முதல் 13.04.2022 வரை குருபகவான் தன் நட்சத்தி ரத்தில் செல்வதால் குடும்பத்தில் நல்லது நடக்கும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். நீண்ட நாட்க ளாகத் தரிசிக்க நினைத்த புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று வருவீர்கள்.

வியாபாரத்தில் பற்று வரவு உயரும். சந்தை நிலவரத்தை தெரிந்துகொண்டு குறைந்த முதலீடு செய்து லாபம் ஈட்டுவீர்கள். வியாபார ரகசியங்கள் யார் மூலம் கசிகிறது என்பதை அறிந்து புதிய முடிவு எடுப்பீர்கள். வாடிக்கை யாளர்கள் விரும்பி வருவார்கள். புதுக்கிளைகள் தொடங்குவீர்கள். உத்தியோகத்தில் வேலைச்சுமை, மறைமுக அவமானம், எதிர்ப்புகள் இருந்ததே! உங்க ளுக்கு எதிராக சில அதிகாரிகளும், சக ஊழியர்களும் வேலை பார்த்தார்களே! அந்த நிலையெல்லாம் மாறும். அலுவலக சூட்சுமங்களைக் கற்றுக்கொள்வீர்கள். உங்களை உருக்குலைய வைத்த மேலதிகாரி வேறிடத்துக்கு மாற்றப்படுவார். மூத்த அதிகாரிகள் உங்களைக் கலந்தாலோசித்து சில முக்கியமான முடிவுகளை எடுப்பார்கள். அவரிடமிருந்து அலுவலக ரகசியங்களை அறிந்து கொள்வீர்கள். இந்த குருமாற்றம் பதுங்கியிருந்த உங்களைப் பிரபலமாக்குவதுடன், பண வசதி, சொத்துச் சேர்க்கையையும் தருவதாக அமையும்.

பரிகாரம்: காஞ்சிபுரம் அருகிலுள்ள தக்கோலம் சென்று அங்குள்ள ஈசனையும், ஸ்ரீதட்சணாமூர்த்தியையும் பூசம் நட்சத்திரம் நடைபெறும் நாளில் சென்று வணங்குங்கள். முதியோர்களுக்கு உதவுங்கள். நல்லது நடக்கும்.
ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.
SCROLL FOR NEXT