ஓசைப்படாமல் பூக்கள் மலர்வதைப் போல, ஆரவாரம் இல்லாமல் அடுத்தவர்களுக்கு உதவுவீர்கள். சுற்றுப்புறச் சூழ்நிலையை புரிந்துக் கொண்டு அதற்கேற்ப காய் நகர்த்துவதில் வல்லவர்கள் நீங்கள். இதுவரை உங்கள் ராசிக்கு 12-ம் வீட்டில் அமர்ந்து உங்களுக்கு வீண் அலைச்சல், விரயச் செலவுகள், ஏமாற்றங்கள், தூக்கமின்மையை தந்துக் கொண்டிருந்த குருபகவான் 13.11.2021 முதல் 13.4.2022 வரை உங்கள் ராசிக்குள் நுழைந்து ஜென்ம குருவாக அமர்வதால் பொறுப்புகளும், வேலைச்சுமையும் அதிகரிக்கும்.
ஒரு தேடலும், நிம்மதியற்றப் போக்கும் அதிகரிக்கும். அதிகாரப் பதவியில் இருப்பவர்களை எதிர்ப்பீர்கள். அவசரப்பட்டு வாக்குறுதி தந்து அதை நிறைவேற்ற முடியாமல் திணறுவீர்கள். யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீர்கள். சொத்து ரீதியான பிரச்சினைகளுக்கு நீதிமன்றம் செல்ல வேண்டாம். பேச்சுவார்த்தை மூலமாகத் தீர்வு காணப்பாருங்கள். ஜென்ம குருவாக இருப்பதால் அவ்வப்போது கோபப்படுவீர்கள். யாரிடமாவது சண்டைபோட வேண்டுமென நினைப்பீர்கள். உங்களைப் பற்றித் தவறாக எப்போதோ எங்கேயோ யாரோ சொன்னதெல்லாம் இப்போது நினைவுக்கு வந்து புலம்புவீர்கள். சாப்பாட்டில் உப்பைக் குறையுங்கள். ரத்த அழுத்தம் அதிகமாகும். பெரிய நோய் இருப்பதாக நினைத்து பயம் வரும். மருத்துவக் காப்பீடு எடுத்துக் கொள்ளுங்கள்.
குரு உங்கள் ராசிக்கு ஐந்தாம் வீட்டைப் பார்ப்பதால் குழந்தை பாக்கியம் உண்டு. பூர்விகச் சொத்துப் பிரச்சினைகள் கொஞ்சம் கொஞ்சமாக தீரும். சிலர் தங்களது பங்கை விற்று நகரத்தை ஒட்டி இடம் வாங்குவீர்கள். தியானம், பொது சேவையில் மனம் ஈடுபாடு கொள்ளும். மகளுக்கு நல்ல வரன் அமையும். குரு ஏழாம் வீட்டைப் பார்ப்பதால் தள்ளிப் போன திருமணம் கூடி வரும். போட்டிகளில் வெற்றி பெறுவீர்கள். கணவன் மனைவிக்குள் சச்சரவு இருந்தாலும் பாசம் குறையாது.
13.11.2021 முதல் 30.12.2021 வரை அவிட்டம் நட்சத்திரத்துக்கு குருபகவான் செல்வதால் எதையும் சமாளிக்கும் சாமர்த்தியம் பிறக்கும். பணவரவு அதிகரிக்கும். வாகனம் வாங்குவீர்கள். சகோதரர்கள் உறுதுணையாக இருப்பார்கள். சின்ன இடமாவது வாங்க வேண்டுமென நினைப்பீர்கள்.
31.12.2021 முதல் 02.03.2022 வரை சதயம் நட்சத்திரத்தில் குருபகவான் செல்வதால் ஒருவித படபடப்பு, எதிர்காலம் குறித்த பயம், தாழ்வுமனப் பான்மை வந்துச் செல்லும். வேற்றுமதத்தவர்கள் உதவிகரமாக இருப்பார்கள்.
02.03.2022 முதல் 13.04.2022 வரை குருபகவான் தன் நட்சத்திரமான பூரட்டாதி நட்சத்திரத்துக்குச் செல்வதால் புதிய முயற்சிகள் வெற்றியடையும். நவீன ரக மின்னணு, மின்சார சாதனங்கள் வாங்குவீர்கள். அரசு காரியங்கள் நல்ல விதத்தில் முடியும். திருமணம், சீமந்தம், கிரகப் பிரவேசம் போன்ற சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். குழந்தைகளின் படிப்பில் அதிசயத்தக்க முன்னேற்றம் ஏற்படும். தாய்வழிச் சொத்துகளால் ஆதாயமடைவீர்கள். உத்தியோகத்தில் நாளுக்கு நாள் வேலைச்சுமை கூடிக் கொண்டேப் போகும். அலுவலக ரகசியங்களை வெளியே சொல்ல வேண்டாம். உங்களின் திறமையைப் பயன்படுத்தி வேறு சிலர் முன்னேறுவார்கள்.
வதந்திகளில் சிக்கிக் கொள்வீர்கள். வேலையில் நீடிப்போமோ, நீடிக்க மாட்டோமோ என்ற சந்தேகம் தினந்தோறும் எழும். நீங்கள் எவ்வளவு உழைத்தாலும் நற்பெயர் கிடைக்காது சின்ன சின்னக் குறைகளை மேலதிகாரி சுட்டிக் காட்டிக் கொண்டேயிருப்பார். சக ஊழியர்கள் செய்யும் தவறுகளை மேலிடத்துக்குத் தெரிவித்துக் கொண்டிருக்காதீர்கள். முறைபடி தேர்வெழுதி வெற்றி பெற்றும் பதவி உயர்வு, சலுகைகள், சம்பள உயர்வைப் பெறப் போராட வேண்டி இருக்கும். இந்த குரு மாற்றம் ஆரோக்கிய குறைவையும், வேலைச்சுமையையும், எதிர்மறை எண்ணங்களையும் தந்தாலும் அனுபவ அறிவையும், தன்னைத் தானே உணரும் சக்தியையும் தரும்.
| பரிகாரம்: தஞ்சாவூருக்கு அருகிலுள்ள திருக்கருகாவூரில் அருள்பாலித்துக் கொண்டிருக்கும் ஸ்ரீமுல்லைவனேஸ்வரரையும், அங்குள்ள ஸ்ரீதட்சணாமூத்தியையும் மகம் நட்சத்திரம் நடைபெறும் நாளில் சென்று வணங்குங்கள். இரத்த தானம் செய்யுங்கள். அந்தஸ்து பெருகும். |
| ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல. |