ராமானுஜர் ஆதிசேஷனின் அம்சம் என்று கருதப்படுகிறார். அதையொட்டி ஒரு அழகான கதை உள்ளது. அறிஞர்கள் சிலர் சமய தத்துவ விசாரத்திற்கு, ராமானுஜரை சவால் விட்டு அழைத்தனர். ராமானுஜரும் இதனை ஏற்றுக் கொண்டார். இதில், தான் கலந்து கொள்ள வேண்டும் என்றால், தனது ஒரு விதிமுறையை ஏற்க வேண்டும் என்றார்.
தனக்கும், எதிர் வாதம் புரியும் அறிஞர்களுக்கும் இடையே ஒரு திரை இருக்க வேண்டும் என்றும், வாதம் முடியும் வரை திரையை விலக்கக் கூடாது என்றும் அவர் கூறினார். இதற்கு அந்த அறிஞர்கள் ஒப்புக் கொண்டனர். விவாதம் தொடங்கியது. அங்கு ஆயிரம் அறிஞர்கள் கூடி ஒவ்வொருவராக கேள்வி கேட்டனர். ராமானுஜரும் சரியான பதிலளித்து வந்தார்.
ஒரு குறிப்பிட்ட நேரத்தில் ஆயிரம் அறிஞர்களும் ஒரு சேர, ஆயிரம் கேள்விகள் கேட்க, அந்த ஆயிரம் கேள்விகளுக்கும் ஒரே நேரத்தில் ராமானுஜர் பதில்கள் அளித்தார்.
திகைத்துப் போயினர் அறிஞர்கள். `புஸ், புஸ்` என்று திரைக்குப் பின் இருந்து சத்தம் வரவே ஆர்வம் தாங்காமல் திரையை விலக்கிப் பார்க்க, அங்கே ராமானுஜர் ஆயிரம் தலைகள் கொண்ட ஆதிசேஷனாக காட்சி தந்தாராம்.