ஆன்மிகம்

ஜென் கதை: திருடனும் ஜென் குருவும்

ஷங்கர்

ஒரு பின் மாலையில், ஜென் குரு ஷிசிரி கோஜன், சூத்திரங்கள் சொல்லி பிரார்த்தித்துக் கொண்டிருந்தார். அப்போது, ஒரு திருடன் கையில் கூர்மையான வாளுடன் ஆசிரமத்துள் நுழைந்து, பணம் கொடு அல்லது உயிரை எடுப்பேன் என்று அச்சுறுத்தினான். கண்விழித்த ஷிசிரி, “தொந்தரவு செய்யாதே. அந்த மேஜையைத் திறந்து எடுத்துக்கொள்” என்று சொல்லிவிட்டுத் தனது பிரார்த்தனையைத் தொடர்ந்தார்.

அந்தத் திருடன் சற்று அதிர்ந்துபோனான். ஆனாலும் அவன் சுதாரித்துத் தனது வேலையைக் கவனிக்கத் தொடங்கினான். பணத்தை எடுத்து மூட்டைகட்டிக் கொண்ட பின் வெளியேற நினைத்தான். அப்போது அவனை குரு நிறுத்தி, “ அத்தனை பணத்தையும் எடுத்துவிடாதே. நாளை ஊர்வரி கட்ட வேண்டும். அதற்குக் கொஞ்சம் மிச்சம் வைத்துவிட்டுச் செல்” என்றார்.

திருடன் அவர் வேண்டுகோளை ஏற்று கொஞ்சம் பணத்தை மேஜையில் விட்டுவிட்டு மீண்டும் கிளம்ப எத்தனித்தான்.

“என் பணத்தை எடுத்துச் செல்லும் நீ ஒரு நன்றி கூடச் சொல்லாமல் போகிறாயே. அது நாகரிகம் இல்லை” என்றார் குரு. திருடன் உண்மையிலேயே திடுக்கிட்டுப் போனான். குருவின் துணிச்சலைப் பார்த்து அவனுக்கு வியப்பு ஏற்பட்டது. அவன் நன்றி கூறி அந்த இடத்தில் இனியும் இருக்கவே கூடாதென்று நினைத்து ஓடியே விட்டான்.

அடுத்த நாள் தன் நண்பர்களிடம் பேசியபோது அந்தத் திருடன் முந்தின நாள் இரவு நடந்த சம்பவங்களைக் கூறி, தன் வாழ்க்கையில் இதைப் போல அச்சப்பட வைத்த மனிதர் வேறு யாருமல்ல என்பதை நினைவுகூர்ந்தான்.

அடுத்த சில நாட்களில் திருடன் பிடிபட்டான். ஜென் குரு வீட்டில் திருடியதையும் ஒப்புக்கொண்டான். காவலர்களால் சாட்சிக்காக ஜென் குரு ஷிசிரி அழைக்கப்பட்டார். “இவன் என்னிடமிருந்து எதையும் திருடவில்லை. அவனுக்கு நான் கொஞ்சம் பணம் கொடுத்தேன். அவன் என்னிடம் நன்றியும் கூறிச் சென்றான்” என்றார். ஆனால் அத்திருடனோ வேறு குற்றங்களுக்காகச் சிறையில் அடைக்கப்பட்டான்.

சிறிது காலம் கழித்து திருடன் விடுதலை ஆனான். ஷிசிரியின் சீடன் ஆனான். ஞானநிலை அடைந்தான்.

SCROLL FOR NEXT