வசிஷ்டர் ஒரு பிட்சுவின் கதையைச் சொல்லலானார்.
ராமா! சதா சர்வகாலமும் சமாதியில் ஆழ்ந்திருந்த ஒரு பிட்சுவின் கதையைச் சொல்வேன் கேள்.
அவன், தான் விரும்பிய உருவு தாங்கும் சக்தி பெற்றவன். ஒரு சமயம் அவன் தன் சங்கல்பத்தால் ‘ஜீவன்’ என்ற நாமத்தோடு ஒரு வடிவு கொண்டான். அவன் தன் கனவில் தன்னை ஓர் அந்தணனாகப் பார்த்தான். அந்த அந்தணனோ இளவரசனாக மாறினான். இளவரசனோ கனவில் தன்னை அரசனாகக் கண்டான்.
இவ்வாறு பல வடிவங்களைத் தாங்கி இறுதியில் ஒரு வண்டாகத் தன்னைக் கண்டான். அந்த வண்டோ, ஒரு யானையைக் கண்டது. தானே ஒரு யானையாகியது. யானை, தன் நெற்றியில் ஒரு வண்டைக் கண்டு, அது மீண்டும் வண்டாகியது. அருகில் ஓர் அன்னப்பறவையைக் கண்டு, அதுவாகவே மாறியது. பின்னர் அது அங்குமிங்குமாக அலைந்து, பிரம்ம தடாகத்தை அடைந்தது. அங்கு ருத்ரனைக் கண்டதால் ‘நான் ருத்ரன்’ என்று தீர்மானித்தது.
எனவே, அதற்கான உயர்ந்த ஞானம் அதற்கு ஏற்பட்டது.
அதனால், தனது பிறவிகளுக்குக் காரணம் மாயையே என அறிந்து வியந்தது. இறுதியில்தான் தன் சுயவடிவான ‘ருத்ரன்’ என அறிந்து அதிசயித்தது. பின்னர் அந்த ருத்ரன், தான் நூறு பிறவிகளில் அலைந்துவிட்டு இப்போது ருத்ரனாக இருக்கிறேன். என்னால் ஏற்படுத்தப்பட்ட அனைவரையும் எழுப்புகிறேன் என்று சொல்லி அந்தப் பிட்சு இருந்த இடத்திற்குச் சென்று அவரை எழுப்பி, தன் மனதுடனும் சைதன்யத்துடனும் சேர்த்துவைத்தார்.
எழுந்தவரும் தன்னை ருத்ரனாகக் கண்டார்.
பின்னர் இருவரும் ஜீவனுடைய இருப்பிடம் சென்று அவனையும் எழுப்பினர். பிறகு மூவரும் சேர்ந்து பிராமணன், சிற்றரசன், அரசன் முதலிய யாவரையும் எழுப்பினர். அவர்கள் அனைவருமே ஒளிமிக்க, ருத்ராம்சங்களாகத் திகழ்ந்தனர். இறுதியில் உடல்களை நீக்கி ருத்ரராயினர். எனவே, “ராமா! அனைத்தும் சைதன்யத்தில் அடங்கியுள்ளதென்றும், மன ஒருமை கண்டவர்க்கு சங்கல்பித்ததனைத்தும் சித்திக்கும் எனவும் அறிக.”
அந்தப் பிட்சுவால் சங்கல்பிக்கப்பட்ட ஜீவர்களும் ருத்ரர்களானார்கள். சங்கல்பத்தால் எதுவும் செய்ய இயலும் என்பதே இதன் பொருள். “பகவானே தனது சங்கல்பத்தால் அம்சாவதார லீலைகளைச் செய்து உலகை நடத்துகிறார்” என முடித்தார் வசிஷ்டர்.
இந்தக் கதை, உறுதியான ஒருமுகப்பட்ட சங்கல்பம் எதனையும் சாதிக்கும் என்பதை விளக்குகிறது.
யோக வாசிஷ்டம்: ஞானத்தின் நுழைவாயில்
தமிழில்: சிவராமகிருஷ்ண சர்மா
நர்மதா பதிப்பகம்
10, நானா தெரு, பாண்டிபஜார்
தியாகராய நகர், சென்னை-17
தொலைபேசி: 044-24334397
விலை: ரூ. 125.00