ஜப்பானைச் சேர்ந்த புகழ்பெற்ற ஜென் துறவி டோஜென் ஜென்ஜி. அந்த நாட்டில் ஜென் தத்துவங்களைப் பரப்பியதிலும் அது குறித்த சிந்தனைகள், விவாதங்களைக் கிளறி விட்டதிலும் இவருக்கு முக்கியப்பங்கு உண்டு.
சின்ன வயதிலிருந்தே டோஜென் ஜென்ஜிக்குத் தியானம், வாசிப்பு, சிந்தனை போன்றவற்றில் ஆர்வம் பிறந்துவிட்டது. தான் ஞானத்தை அடைவதற்கு வழிகாட்டக் கூடிய ஒரு குருநாதரைத் தேடி பல இடங்களில் அலைந்தார். கடைசியாக அவர் சீனாவுக்கு வந்து சேர்ந்தார்.
அப்போது சீனாவில் ஜென் சிந்தனைகள் செழித்து வளர்ந்து கொண்டிருந்தன. ஆனால் அங்கிருந்த ஜென் குருமார்கள் ஒரேமாதிரி சிந்திக்கவில்லை. ஒருவர் மற்றவருடைய சிந்தனைகளை, வழிமுறைகளை ஏற்றுக் கொள்ளவில்லை. வெவ்வேறு பிரிவுளாகத்தான் ஜென் பாடம் சொல்லித் தரப்பட்டது.
இதனால் டோஜென்னுக்கு குழப்பம். ‘இதில் எந்தப் பிரிவில் நாம் சேர்வது? ஒன்றில் சேர்ந்தால் இன்னொன்றை மறுக்க வேண்டுமோ? வெறுக்க வேண்டுமோ? அது எப்படி நியாயமாகும்? எல்லாம் ஜென்தானே?’. இப்படி யோசித்துக் கவலைப்பட்ட டோஜென் எந்தப் பிரிவிலும் சேரவில்லை. என்ன செய்யலாம் என புரியாமலே சுற்றிச் சுற்றி வந்தார்.
அப்போதுதான் அவர், டெண்டோ ந்யோஜே ஜென்ஜி என்ற ஜென் மாஸ்டரைப் பற்றிக் கேள்விப்பட்டார்.
“ஐயா, நீங்கள் எந்தப் பிரிவைச் சேர்ந்தவர்?” என்று விசாரித்தார்.
“எந்தப் பிரிவும் இல்லை”
“அப்படியா? நிஜமாகவா சொல்கிறீர்கள்?”
“ஆமாம், எனக்குத் தெரிந்ததெல்லாம் தியானம் செய்வது, என்னுடைய உடலாலும் மனத்தாலும் புத்தரை உணர்வது, அவ்வளவுதான்” என்றார்.
டோஜென் ஜென்ஜி சட்டென்று அவருடைய காலில் விழுந்தார்.
“ஐயா, இவ்வளவு நாட்களாக உங்களைத்தான் தேடிக் கொண்டிருந்தேன். என்னைச் சீடனாக ஏற்றுக்கொள்ளுங்கள்.”
ஜென் கதைகள்
ப்ரியா பாலு
கண்ணப்பன் பதிப்பகம்
4/20, திருவள்ளுவர் தெரு, அம்பாள் நகர்,
ஈக்காடுதாங்கல்
சென்னை- 600 032
தொலைபேசி: 044-22250905
விலை: ரூ.200/-