ஆன்மிகம்

நபிகள் வாழ்வில்: ஒற்றை வரி நல்லுரை

இக்வான் அமீர்

தம்மைச் சீர்த்திருத்திக்கொள்ள முன்வருவோர் வரிசையாக ஒவ்வொரு அறிவுரையையும் பின்பற்றி நல்லவராக நலம் பெறுவார். இது உலக வழக்கு.

ஆனால், நபிகளாரின் திருச்சபையில் வந்து நின்றவர் ஒற்றை வரியில் ஒரு அறிவுரையை வேண்டி நின்றார். அதை மட்டுமே அவரால் பின்பற்ற முடியும் என்றார்.

“இறைவனின் தூதரே, என்னிடம் ஏராளமான தீய பழக்கங்கள் உள்ளன. ஒரே ஒரு பழக்கத்தை மட்டும் விட்டுவிடத் தயாராக இருக்கின்றேன். எதை விடச் சொல்கிறீர்கள்?”

“நல்லது சகோதரரே! இன்றிலிருந்து நீங்கள் பொய் சொல்வதை மட்டும் விட்டுவிடுங்கள். எப்போதும் உண்மையையே பேசுங்கள்!” என்று பதிலுரைத்தார் நபிகள்.

அந்த மனிதர் அப்படியே செய்வதாக வாக்குறுதி அளித்தார்.

இரவு வந்தது. அவர் வழக்கம் போல திருடுவதற்குத் தயாரானார். அப்போது அவருக்கு நபிகளாரிடம் அளித்த உறுதிமொழி ஞாபகம் வந்தது.

“இரவு என்ன செய்தீர்கள்?” என்று இறைத்தூதர் கேட்டால் நான் என்ன சொல்வது?அப்படிச் சொன்னால் என்னை யார்தான் மதிப்பார்கள்? அத்துடன் திருடியதற்கும் தண்டனையல்லவா கிடைக்கும்! அதே சமயம் பொய் சொல்லவும் கூடாது.!” என்று பலவாறு யோசித்தார்.

கடைசியில் இனி திருடுவதில்லை என்று தீர்மானித்தார். அந்தத் தீய பழக்கத்தை அவர் விட்டு விட்டார்.

அடுத்த நாள். மது அருந்துவதற்குக் குவளையை எடுத்தார். அதை வாயருகே கொண்ட செல்லும் நேரத்தில் நபிகளாரின் திருமுகம் நினைவில் எழுந்தது.

“பகலில் என்ன செய்தீர்கள் சகோதரரே?” என்று நபிகளார் கேட்டால் என்ன செய்வது என்று தயங்கினார். முஸ்லிம் எப்போதும் மது அருந்தக் கூடாது. அது தண்டனைக்குரிய குற்றச் செயல். இது என்ன சிக்கல் என்றெல்லாம் நெடுநேரம் யோசித்தவர் மது அருந்தும் பழக்கத்தையும் விட்டுவிட்டார்.

இப்படி தீயசெயலில் ஈடுபடப்போகும் போதெல்லாம் உண்மையையே பேச வேண்டும் என்ற நபிகளாரின் நல்லுரை அவரது எல்லா கெட்டப் பழக்கங்களைம் விட வைத்தது.

நாளடைவில் அவர் நல்ல பண்புள்ள ஒழுக்கசீலரான மனிதராக மாறிவிட்டார். எப்போதும் உண்மையைப் பேசுவது வாழ்வில் நன்யைமையத் தரும் என்பதை அவர் புரிந்து கொண்டார்.

நபிகளாரின் ஒற்றை வரி நல்லுரையின் வலிமை இதுதான்.

SCROLL FOR NEXT