கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்தில் ஐப்பசி பவுர்ணமியை முன்னிட்டு, மகா சமுத்திர தீர்த்த ஆரத்தி வழிபாடு நடைபெற்றது. இதில், கரோனா கட்டுப்பாடுகளுக்கு மத்தியில் பக்தர்கள் திரண்டு வழிபாடு நடத்தினர்.
காசி, ராமேஸ்வரத்தை போன்று கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்தில் கடந்த ஆண்டு முதல் மகா சமுத்திர தீர்த்த ஆரத்தி வழிபாடு நடத்த குமரி மாவட்ட இந்து திருத்தொண்டர் பேரவை முடிவு செய்து அதற்கான ஏற்பாடுகளை செய்தது.
ஆனால், கரோனா கட்டுப்பாடுகளால் இந்த வழிபாட்டுக்குத் தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், கடந்த மாதம் பவுர்ணமியன்று கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்தில் மகா சமுத்திர தீர்த்த ஆரத்தி நடைபெற்றது. இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டனர். ஆரத்தி வழிபாட்டுக்குக் கிடைத்த வரவேற்பை தொடர்ந்து மாதம் தோறும் பவுர்ணமி நாளில் நிகழ்ச்சி நடைபெறும் என திருத்தொண்டர் பேரவை அறிவித்தனர்.
அதன்படி, ஐப்பசி பவுர்ணமி நாளான இன்று (அக். 21) மாலையில் மகா சமுத்திர தீர்த்த ஆரத்தி வழிபாடு கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்தில் நேடைபெற்றது. முக்கடல் சங்கம கடற்கரையில் உள்ள பரசுராமர் விநாயகர் கோயில் முன்பு பக்தர்கள் சங்கமித்து வழிபாடு நடத்தினர். பின்னர், அடியார்கள் விநாயகர் சன்னதியில் வேண்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. அதைத்தொடர்ந்து, அணையா தீபர் ஏற்றுதல், கயிலை வாத்தியம் இசைத்தல், கன்னிகள் பூஜை செய்தல் நிகழ்ச்சி போன்றவை நடைபெற்றன.
மேலும், சுமங்கலி பெண்கள் அகல் தீபங்களை ஏந்தி வந்து நெய் தீபம் ஏற்றும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. அப்போது, உமா மகேஸ்வர சிவாச்சாரியார் சங்கல்ப பூஜை செய்யும் நிகழ்ச்சியும், இரவு 7 மணிக்கு சமுத்திர அபிஷேகமும், அதைத்தொடர்ந்து சிவாச்சாரியார்களும், அர்ச்சகர்களும் கையில் 5 அடுக்கு தீபம் ஏந்தி கிழக்கு திசையில் கடலை நோக்கி நின்று ஆரத்தி எடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
முக்கடல் சங்கமத்தில் திருவள்ளுவர் சிலை, விவேகானந்தர் மண்டபம் மின்னொளியில் ஜொலிக்க நடைபெற்ற ஆரத்தி வழிபாட்டின்போது ஏராளமான பக்தர்கள் பக்தி கோஷம் எழுப்பினர். இதில், வெள்ளிமலை விவேகானந்தா ஆசிரம சுவாமி சைதன்யானந்தஜி மகராஜ், தளவாய் சுந்தரம் எம்எல்ஏ, முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, விவேகானந்தா கேந்திரா தலைவர் பாலகிருஷ்ணன், பாஜக குமரி மாவட்ட தலைவர் தர்மராஜன், மற்றும் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.