ஆன்மிகம்

ஆலய தரிசனம்: மாவட்டகுடி ஸ்ரீவெங்கடாசலபதி திருக்கோயில் - வாழை இலையில் பிரதிபலிக்கும் சுவாமியின் முகம்

முரளி

திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி தாலுக்கா, ஸ்ரீ செண்பகாரண்ய க்ஷேத்திர அதிபதியாய் தனதுவாரகா ஸ்ரீருக்மணி ஸத்யபாமா ஹேமாப்ஜநாயகி ஸமேத ஸ்ரீவித்யா ராஜகோபாலன் க்ஷேத்திரத்திற்குக் கிழக்கே எழுந்தருளியிருக்கும் அவாப்தஸமஸ்தகாமணாய் ஸர்வ தோஷங்களையும் நிவர்த்தி செய்து புத்திராதிகளைக் கொடுக்கும் மாவட்டகுடி ஸ்ரீதேவி- பூதேவிஸமேத ஸ்ரீ வெங்கடாஜலபதி (தென் திருப்பதி) கோவில்அமைந்துள்ளது.

குளக்கரையில் ஆலயம்

சுமார் 1000 வருடங்களுக்கு முன்பு பெரியோர்களால் திருக்குளம் அமைக்கும்பொழுது பூமிக்கடியில் ஸ்ரீதேவி - பூதேவி ஸமேத ஸ்ரீ பிரசன்ன வெங்கடாசலபதி சிலா ரூபங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. அவற்றைக் கொண்டு குளக்கரையில் சிறியதாக ஆலயம் எழுப்பப்பட்டு பெருமாளின் அச்சவதார மூர்த்தி பிரதிஷ்டை செய்யப்பட்டது.

இந்த ஊரிலுள்ள பக்தர்கள் சிலர் வருடம் தவறாமல் பாத யாத்திரையாகத் திருப்பதி சென்று பெருமாள் தரிசனம் செய்வதைப் பன்னெடுங்கால வழக்கமாய்க் கொண்டிருந்தனர். ஒரு சமயம் பக்தர்களில் ஒருவர் உடல்நலம் குன்றியதால் யாத்திரை தடைப்பட்டது. அந்தச் சமயத்தில் பெருமாளை மனமுருகிப் பிரார்த்தனை செய்ய, பெருமாள் சொப்பனத்தில் தோன்றி ஒரு இடத்தைக் காண்பித்து குளம் தோண்டுமாறு கூறீனாராம். தாமே அங்கு சிலா ரூபத்தில் இருப்பதாகவும் அந்தச் சிலையை அங்கேயே பிரதிஷ்டை செய்து வழிபடுமாறும் கூறிய பெருமாள், திருமலையில் உச்சி காலம் முடிந்த பிறகு இவ்விடத்திற்கு மே வந்து அருள் பாலிப்பதாகவும் கூறியதாகச் செவிவழிச் செய்தி. இன்றளவும் உச்சி கால வேளையில் ஒருகால பூஜை மட்டுமே நடைபெற்றுவருகிறது.

இவ்விடத்தில் பெருமாள் நின்ற கோலத்தில் கிழக்கு முகமாகச் சேவை சாதிக்கிறார். திருமலையில் உள்ளதுபோல் இங்கும் ஆனந்த நிலைய விமானம் (கோபுரம்) அமையப் பெற்றுள்ளது. இத்தலத்தில் ஸ்ரீசிவகாம சுந்தரி அம்பாள் ஸமேத ஸ்ரீ கைலாசநாதர், கிராம தேவதையாக மகாமாரியம்மன், சப்த மாதா, பூர்ண புஷ்கலா ஸமேத தர்மசாஸ்தா கோவில்களும் அமைந்துள்ளன. மாவட்ட குடிவெங்கடாசலபதி சேவா சங்கம் சார்பில் பக்தர்கள் தங்குவதற்கான வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

சர்க்கரை பொங்கல் வெண்பொங்கல்

ஸ்ரீதேவி - பூதேவி ஸமேத ஸ்ரீ பிரசன்ன வெங்கடாசலபதிக்குத் திருப்பாவாடை சாற்றுதல் இத்தலத்திற்கு உரித்தானது. ஸ்வாமிக்கு எதிரே இரண்டு மரக்கால் சர்க்கரைப் பொங்கல், வெண்பொங்கல் தயார் செய்து ஸ்வாமிக்கு எதிரே உள்ள பீடத்தில் இரு வாழை இலைகளை விரித்து அதன்மேல் இவ்விரண்டையும் சேர்த்து நடுவில் கிண்ணம் போல் அமைத்து அதில் பசுநெய்யை இட்டால் பெருமாளின் முகம் அதில் தெரியும். இங்குள்ள பெருமாளைக் குலதெய்வமாகக் கொண்ட குடும்பத்தார் இந்த வழிபாட்டை வழிவழியாகச் செய்துவருகின்றனர்.

இத்திருக்கோயிலில் வைகாசி மாதம் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.

SCROLL FOR NEXT