ஆன்மிகம்

க்ஷேத்ர சங்கீதம் கேட்டிருக்கிறீர்களா?

வா.ரவிக்குமார்

ஒவ்வொரு ஆலயத்துக்கும் ஒரு தல புராணம் இருக்கும். தல புராணங்களில் புராணத்தை ஒட்டிய செய்திகள் இடம்பெற்றிருக்கும். தல புராணத்தைப் போன்றே, பழமையும் பெருமையும் கொண்ட நம்முடைய புகழ் பெற்ற ஆலயங்களின் இன்னொரு தனிப்பெரும் பெருமைக்குரிய அம்சமாக இருப்பவை, அந்தந்த குறிப்பிட்ட ஆலயத்தின் தெய்வத்தை மய்யப்படுத்தி பாடப்பட்டிருக்கும் பாடல்கள்.

நாயன்மார்களால் பாடப்பட்ட தேவாரம், திருவாசகம் உள்ளிட்ட படைப்புகளில் காட்டப்படும் சைவத் தலங்களும், நாளாயிரத் திவ்யப்பிரபந்தங்களின் வழியாக பாடல்பட்டு, ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்விக்கப்பட்ட கோயில்களும் தனிச் சிறப்பு வாய்ந்தவை.

காலங்காலமாக காப்பாற்றப்படும் தல புராணங்களைப் போன்றே அடுத்த தலைமுறைக்குக் கொண்டு சேர்க்கக் கூடிய பெருமைக்கு உரியவை, அந்தந்த தலங்களுக்கு பெருமை சேர்க்கும் பாடல்களும் அதற்கான இசையும்கூடத்தான் என்பதை உணர்ந்த டாக்டர் விஜயலட்சுமி சுப்ரமணியம் ஒவ்வொரு ஆலயத்தின் பெருமையைப் போற்றும் பாடல்களைக் கொண்டே ஓர் இன்னிசை நிகழ்ச்சியையே வடிவமைக்கத் தொடங்கினார். கடந்த 2013-ல் தொடங்கப்பட்ட இந்த வகையான இசை நிகழ்ச்சிகளுக்கு க்ஷேத்ர சங்கீதம் என்று பெயரிட்டார்.

இடைவிடாத ஆராய்ச்சிகள், பயணங்களின் விளைவாக 20 க்ஷேத்ர சங்கீதம் நிகழ்ச்சிகளை இதுவரை நடத்தியிருக்கிறார் டாக்டர் விஜயலட்சுமி சுப்ரமணியம். ஆலயத்தின் சிறப்பை விளக்குவது, ஆலயத்தின் தெய்வத்தை மையப்படுத்தி நாயன்மார்களும் ஆழ்வார்களும் பாடிய பாடல்களைப் பாடுவது. நிகழ்ச்சிக்கு ஒரு சொற்பொழிவாளரைக் கொண்டு, ஆலயம் குறித்த வரலாற்றுச் சம்பவங்களையும் விளக்கி, மூன்று தமிழும் சங்கமிக்கும் நிகழ்ச்சியாக க்ஷேத்ர சங்கீதம் நிகழ்ச்சிகள் நடக்கும்.

இப்படி நடக்கும் நிகழ்ச்சிகளை புத்தக வடிவில் பதிவு செய்ய முன்வந்திருக்கிறார் ஜெயஸ்ரீ எஸ் மணி. அடுத்தடுத்து எட்டு க்ஷேத்ர சங்கீதம் புத்தகங்கள் வெளியீட்டின் வரிசையில் முதலாவதாக, க்ஷேத்ர சங்கீதம் தஞ்சாவூர் என்னும் புத்தகமும் இசை ஆல்பமும் சமீபத்தில் வெளியிடப்பட்டது.

இசை உலகத்துக்கு தஞ்சாவூரின் கொடை அளப்பரியது. இசைக்கு தியாகராஜர், முத்துசாமி தீட்சிதர், சியாமா சாஸ்திரி ஆகிய மூவரையும், பரதநாட்டியத்துக்கு சின்னையா, பொன்னையா, சிவானந்தம், வடிவேலு ஆகிய நால்வரையும் கொடுத்த பெருமைக்குரியது. அதனால்தானோ என்னவோ, க்ஷேத்ர சங்கீதம் தொடர் நூல் வெளியீட்டில் தஞ்சாவூர் முந்திக் கொண்டது!

SCROLL FOR NEXT