அது ஒரு பழைய கதை. ஒரு ராஜா பிரம்மாண்ட மாளிகை ஒன்றை கட்டினான். அதன் பெயர் கண்ணாடி மாளிகை. தரை, சுவர்கள், கூரை எல்லா சின்னச் சின்னதாக லட்சக்கணக்கான கண்ணாடிகளால் கட்டப்பட்ட மாளிகை அது. அந்த மாளிகை முழுக்க கண்ணாடிகள் தவிர வேறெதுவும் இல்லை.
அந்த மாளிகையில் ஒரு நாள் ராஜாவின் வளர்ப்பு நாய் தவறாக நுழைந்துவிட்டது. மாளிகைக்குள் நாய் நுழைந்தது தெரியாமல், இரவில் மாளிகை வெளியிலிருந்தும் பூட்டப்பட்டுவிட்டது. அந்த மாளிகைக்குள் லட்சக்கணக்கான நாய்களின் பிம்பங்களைப் பார்த்து அந்த நாய் பீதியடைந்தது.
அந்த நாய் சாதாரண நாய் அல்ல. ராஜாவின் நாய். அது மிகவும் தைரியமான நாய். ஆனாலும் மிகவும் தனிமையை உணர்ந்ததால் ஒரு அறையிலிருந்து இன்னொரு அறைக்கு ஓடியது. ஆனால் தப்பிக்கும் வழி தெரியவில்லை. எல்லா இடங்களிலும் நாய்கள் ராஜாவின் நாயைத் துரத்தின. அதனால் வெளியிலும் போய்த் தப்பிக்க முடியாது. கதவு வேறு பூட்டப்பட்டு விட்டது.
மற்ற நாய்களை அச்சமூட்டுவதற்காக ராஜாவின் நாய் குரைக்கத் தொடங்கியது. மற்ற நாய்களும் குரைக்கத் தொடங்கின. அவை அனைத்தும் எதிரொலிகள். ராஜாவின் நாய்க்குக் கூடுதல் பயமேற்பட்டது. நாய், தன் பிம்பங்களின் மேல் மோதிப் பாய்ந்தது. காயப்பட்டது. காலையில் அந்த நாய் சடலமாக அரண்மனையிலிருந்து மீட்கப்பட்டது.
அந்த நாய் இறந்ததும் எல்லா நாய்களும் இறந்துவிட்டன. அரண்மனை காலியாகிவிட்டது. அங்கே ஒரேயொரு நாய் தான் இருந்தது. மற்றதெல்லாம் பிம்பங்களே.
பதஞ்சலி யோக சூத்திரத்தின் நிலைப்பாடு அதுவே. மெய்மை ஒன்றே. மற்றதெல்லாம் பிம்பத் தோற்றங்களே. ஒரு பிம்பமாக, என்னிலிருந்து தனித்தவராகிறீர்கள். நான் உங்களிடமிருந்து ஒரு பிம்பமாகப் பிரிகிறேன். நாம் மெய்மையை நோக்கி நகரும்போது, இந்தப் பிரிவினை காணாமல் போய்விடுகிறது. நாம் ஒன்றாகிவிடுகிறோம்.