நாம் தெரிந்தோ தெரியாமலேயோ செய்த நமது பாவங்களை போக்கிக்கொள்ள சாஸ்திரங்கள் நமக்கு பல வழிகளை சொல்லியுள்ளன. அதில் தீர்த்த ஸ்நானம் என்பது மிக முக்கியமானது. நமது பாரத புண்ணிய பூமியில் தீர்த்த ஸ்நானம் செய்வதற்கு ஏற்ற ஸ்தலங்கள் பல உள்ளன. குமரியிலிருந்து காஷ்மீர் வரையில் பரந்து விரிந்து இருக்கும் நமது தேசத்தில் புண்ணிய நதிகளும், திருக்குளங்களும் ஏராளம். அவ்வகையில் கும்பகோணத்தில் மகாமகத்தன்று மகாமகக் குளத்தில் ஸ்நானம் செய்வது என்பது மிகவும் மகத்துவம் வாய்ந்தது.
இந்த வருடம் மகாமகம் இந்த மாதம் 22-ந் தேதி அன்று வருகின்றது. அதற்கு முன்பு 13-ம் தேதி கொடி ஏற்றப்பட்டுள்ளது. அன்றிலிருந்தே அதாவது கொடி ஏற்றிய நாளிலிருந்தே மகாமகக் குளத்தில் ஸ்நானம் செய்யலாம். அதே பலன் பூர்ணமாக கிடைக்கும் என பெரியோர்கள் வழிகாட்டியுள்ளார்கள்.
அரூபமாக வரும் தேவர்கள்
12 வருஷத்திற்கு ஒரு முறை வரும் மகாமகத்தன்று கும்பகோணத்தில் உள்ள மகாமகக் குளத்தில் ஸ்நானம் செய்ய நமது தேசத்தில் பல பகுதிகளிலிருந்து சந்நியாசிகள் ஸ்நானம் செய்ய வருவதை நாம் இன்றும் பார்க்கலாம். அது மட்டுமல்ல இந்தக் கலியிலும் அரூபமாக பிரஹ்மாதி தேவர்கள் யாவரும் வருகின்றனர் என்று நமக்கு தெரியும்போது இதன் முக்கியத் துவம் நமக்கு மேலும் புலப்படுகிறது.
இதற்கு மாக (Magha) தீர்த்தம் என்று பெயர். அதாவது ‘அகம்’ (Agham) என்றால் பாவம். ‘மா’ என்றால் நெருங்காது. அதனால் இதற்கு மகாமகம் என பெயர் வந்தது.
கும்பகோணம் ஒரு சிறந்த க்ஷேத்திரம் என்பதற்கும், மூன்று லோகத்திலும் ப்ரஹ்மஹத்தி முதலிய பாபங்களைப் போக்கும் தீர்த்தம் இம்மாதிரி வேறு எங்குமில்லை என்பதற்கும் நமக்கு புராணங்களிலிருந்து நிறைய பிரமாணங்கள் கிடைக்கின்றன.
சேங்காலிபுரம் பிரஹ்மஸ்ரீ அனந்தராம தீக்ஷிதர் அவர்களும் தனது ‘ஜயமங்கள ஸ்தோத்ரம்’ நூலில் கும்பகோணத்தைப் பற்றியும், மகாமகத்தைப் பற்றியும் பல விவரங்களைப் பொக்கிஷமாக நமக்குத் தந்துள்ளார்.
ஒரு சமயம் கங்கை முதலிய மகாநதிகள் கைலாச மலை சென்று பரமேஸ்வரனை நமஸ்கரித்து தங்களது நீண்ட நாள் ஆதங்கத்தை ஒரு பிரார்த்தனையாக அவர் முன் வைத்தார்கள்.: “ஓ மஹேஸ்வரா, கோடானுக்கோடி ஜனங்கள் தங்களது மலை போன்ற பாவங்களைப் போக்கிக்கொள்ள எங்களை நாடி ஸ்நானம் செய்து வருகின்றார்கள். அதில் மகாபாவிகளும் அடங்குவர். உபபாதகத்தை செய்தவர்களும் ஸ்நானம் செய்து பாவங்களை எல்லாம் எங்களிடம் விட்டு விடுகிறார்கள். இந்த நிலையில் நாங்கள் எங்கள் பாவத்தை எங்கு போக்கிக்கொள்ளுவோம், தாங்கள்தான் எங்களுக்குத் தக்க வழியைக் காட்டி ரட்சிக்கவேண்டும்” என வேண்டினர்.
“ஓ, தீர்த்த தேவைதைகளான நதிகளே, இன்றே நீங்கள் கும்பகோணம் செல்லுங்கள். இன்று அங்கு மகாமகம். ‘பாபநோதகம்’ என்ற தீர்த்தத்தில், அதாவது மகாமகக் குளத்தில், ஸ்நானம் செய்யுங்கள், உங்களது பாபங்கள் அனைத்தும் விலகும். இது சத்யம், இது சத்யம்” எனப் பரமசிவன் கூறினார்.
புண்ணிய நதிகளின் சங்கமம்
ஆம், மகாமகத்தன்று அனைத்துப் புண்ணிய நதிகளும் இங்கு சங்கமிக்கின்றன. ஆதலால் மகாமகக் குளத்தில் ஸ்நானம் செய்பவர்களுக்கு அனைத்து புண்ணிய நதிகளில் ஸ்நானம் செய்த பலன் கிடைக்கின்றது என்பதில் சந்தேகம் இல்லை.
இந்த மகாமகக் குளத்தில் விதிப்படி சங்கல்பத்துடன் ஸ்நானம் செய்த பிறகு தொடர்ந்து வேதவித்துக்களுக்கு தானங்கள், பித்ரு தர்ப்பணம் செய்வதும், ஸ்ரீ கும்பேஸ்வரர், ஸ்ரீ அபிமுகேஸ்வரர், ஸ்ரீ விஸ்வேஸ்வரர், ஸ்ரீ கெளதமேஸ்வரர், ஸ்ரீ நாகேஸ்வார், ஸ்ரீ சாரங்கபாணி, ஸ்ரீ சக்ரபாணி, ஸ்ரீ வராஹ பெருமாள், ஸ்ரீ கோடீஸ்வரர் முதலிய தேவதா மூர்த்திகளை தரினம் செய்வது அளவு கடந்த பலனை அளிக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.
மகாமக உத்ஸவ (avabhrutha) ஸ்நான காலத்தில் இந்த மகாமகக் குளத்தில் எல்லா தேவர்களும், எல்லாப் புண்ணிய நதிகளும் சேர்ந்து வருவது சத்தியம். ஆதலால் இந்த நேரத்தில் ஸ்நானம் செய்வதனால் எல்லாப் பாபங்களிலிருந்தும் விடுபடுவது நிச்சயம்.
மகாமகத்துக்குப் போகமுடியவில்லையா?
‘மாகே ஸ்கந்தம் ப்ரபூஜயேத்’ என்ற வாக்கியத்தின்படி அவரவர்கள் ஊரில் இல்லத்தின் அருகில் இருக்கும் நீர்நிலைகளில் அல்லது இல்லத்திலேயே யதோக்தமாக மகாமக ஸ்மரணத்துடன் ஸ்நானம் செய்யலாம். அதைத் தொடர்ந்து சுப்ரமணிய சுவாமியை ஷோடச உபசாரங்களுடன் பூஜித்தோமென்றால் மகாமக ஸ்நான பலன் நிச்சயம் கிடைக்கும்.
பிரசாதம் பெறலாம்
இந்து சமய அறநிலையத்துறை மண்டல இணை கமிஷனர்கள், உதவி கமிஷனர்கள் அலுவலகங்களிலும், சிறப்பு நிலை, முதல்நிலை, இரண்டாம் நிலை கோவில் அலுவலகங்களிலும், 150 ரூபாய் செலுத்தி, முன்பதிவு செய்து கொள்ளலாம்.மேலும், விவரங்களுக்கு> www.mahamaham2016.in என்ற இணையதளத்தை பார்க்கலாம். முன்பதிவு செய்யும் பக்தர்களுக்கு, மார்ச் 3-ம் தேதிக்குள், மகாமக திருவிழா பிரசாதம் கிடைக்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.