ஆன்மிகம்

திருத்தலம் அறிமுகம்: திருவெற்றியூர் பாகம்பிரியாள் கோயில் - விஷ்ணுவின் சாபம் தீர்ந்தது

குள.சண்முகசுந்தரம்

பாகம்பிரியாள் கோயில், மூன்று அடியில் இந்த உலகையே அளந்த மகாவிஷ்ணுவுக்கு விமோசனம் தந்த ஆன்மிகத் திருத்தலம். இங்குதான் பழம்புற்று நாதர் அருள்பாலிக்கிறார்.

ராமநாதபுரம் மாவட்டம் தொண்டிக்கு மேற்கே சுமார் ஆறு கிலோ மீட்டர் தொலைவில் இருக்கிறது பாகம்பிரியாள் கோயில். அசுரர் குலத்து அரசனான மகாபலி சக்கரவர்த்தி தன்னை விஞ்சிய சக்தி எதுவும் இல்லை என்ற மமதையோடு இருந்தார். அண்டம் முழுவதையும் தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்காக அசுவமேத யாகம் நடத்திய மகாபலி இன்னொருபுறமோ தானதர்மங்களையும் தாராளமாய் செய்துவந்தார்.

மகாபலியின் மமதையை அடக்க நினைத்த மகாவிஷ்ணு, வாமனன் என்ற பிராமணராக வேடம் பூண்டு வந்து, ‘எனக்கு மூன்றே மூன்றடி நிலம் வேண்டும்’ என யாசகம் கேட்கிறார். ‘மூன்றடி தானே தாராளமாக நீங்களே அளந்துகொள்ளுங்கள்’ என்கிறார் மகாபலி. அடுத்த கணம் தனது விஸ்வரூபத்தைக் காட்டிய மகா விஷ்ணு, ஒரே அடியில் பூமியையும் இரண்டாவது அடியில் ஆகாயத்தையும் அளந்தார். மூன்றாவது அடிக்கு இடமில்லாது போனதால், கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவதற்காக தனது சிரசைத் காட்டுகிறார் மகாபலி.

அப்போது அங்கு காட்சி கொடுத்த தர்ம தேவதை, ‘மகாபலி நிறைய தான தர்மங்களைச் செய்திருக்கிறார். அவரது சிரசில் நீங்கள் கால் வைத்தால் தர்மம் செத்துவிடும்’ என்று கண்ணீர் உகுத்து மன்றாடினார். இதனால், தனது முடிவை மாற்றிக்கொண்டார் மகாவிஷ்ணு. ஆனால் அதேசமயம், மகா விஷ்ணுவின் காலில் தர்ம தேவதையின் கண்ணீர் பட்ட இடமெல்லாம் புற்றுகள் முளைத்திருந்தன. இதற்கு விமோசனம் தேடி சிவனை வேண்டிக் கேட்கிறார் மகாவிஷ்ணு.

உபாயம் சொன்ன சிவபெருமான்

பூலோகத்தில் வேம்புகள் நிறைந்த நின்ப வனஷேத்திரம் ஒன்று உள்ளது. அங்குள்ள வாசுகி தீர்த்தத்தில் நீராடினால் இந்தக் கலி நீங்கும் என்று உபாயம் சொல்கிறார் சிவபெருமான். அதன்படியே பூலோகம் வந்து வாசுகி தீர்த்தத்தில் நீராடி விமோசனம் பெறுகிறார் மகாவிஷ்ணு. அதுதான் திருவொற்றியூர் பாகம்பிரியாள் கோயில்.

இங்கே சிவபெருமான் பழம்புற்று நாதராக வீற்றிருக்கிறார். சிவனின் இடப்பாகத்தை விட்டு இணை பிரியாமல் இருப்பதால் இங்கே அம்பாளுக்கு பாகம்பிரியாள் என்ற திருநாமம். சிவன்தான் பிரதானம் என்றாலும் பாகம்பிரியாள் பெயரில்தான் இத்திருத்தலம் பிரபலமாகி இருக்கிறது. இங்கு வந்து இறைவனை வணங்கினால் கால் பங்கு பலன். வாசுகி தீர்த்தத்தில் நீராடினால் இன்னொரு கால் பங்கு பலன். ஒரு இரவு இத்திருத்தலத்தில் தங்கி இருந்தால் இன்னொரு கால் பங்கு பலன். இத்திருத்தலத்தின் பெருமைகளை மற்றவர்களுக்குச் சொல்லி அவர்களும் இங்கு வந்து வழிபட்டால் இன்னொரு கால் பங்கு பலனை அடையலாம்.

சிவபெருமானின் கழுத்தை அலங்கரிக்கும் வாசுகியின் வழி வந்த நாகங்கள் இத்திருத்தலம் இருக்கும் பகுதியில் இருப்பதாக நம்பப்படுகிறது. எனவே, கோயிலுக்குள் இருக்கும் புற்றுக்குக் கோழி முட்டையைக் காணிக்கையாகக் கொடுக்கும் வழக்கம் தொடர்கிறது. இது விஷம் முறிக்கும் திருத்தலமாகக் கருத்தப்படுவதால் விஷக்கடிகள், தீராத நோய்களுக்கு வாரக் கணக்கில் இங்கே தங்கி இருந்து வழிபாடு நடத்துகிறார்கள்.

மீனவர்களின் வழிபாட்டுத் தலம்

முந்தைய காலத்தில் இத்திருக்கோயில், மீனவர்கள் மட்டுமே வழிபடும் தலமாக இருந்தது. வெள்ளிக் கிழமை சமுத்திர தேவி நித்திரை கொள்வாள் என்பதால் அன்றைய தினம் மீனவர்கள் கடலுக்குப் போவதில்லை. இதனால், வியாழக்கிழமை இரவே பாகம் பிரியாள் கோயிலில் வந்து தங்கும் அவர்கள், வெள்ளிக்கிழமை பகலில் வழிபாடுகளை முடித்துக் கொண்டு வீடுகளுக்குத் திரும்பு வார்கள். இப்போது அனைத்து மக்களும் இந்த வழிபாட்டு முறையைப் பின்பற்றிக் கொண்டிருக்கிறார்கள்.

படங்கள் : பேபி சாரா

SCROLL FOR NEXT