முன்னோட்டம்: 1000 ம் ஆண்டு
மதத்தில் புரட்சி செய்த ராமானுஜர், அனைவருக்கும் சொந்தமானது நாராயண மந்திரம் என்று உணர்த்தியவர். தனக்கு இரண்டு கண்கள் போனாலும் பரவாயில்லை அடுத்தவனுக்கு ஒரு கண்ணாவது போக வேண்டும் என்னும் குறுகிய எண்ணம் கொண்டவர்கள் மத்தியில், தனக்கு நரகமே சம்பவித்தாலும் பரவாயில்லை பிறர் நன்கு வாழ வேண்டும் என்று ஆசைப்பட்ட ஆன்மிக ஆச்சார்யன் ராமானுஜர்.
குரு யாதவப்பிரகாசர்
கலைகளுக்கும், கல்விக்கும் பெயர் பெற்றது காஞ்சி மாநகரம். பண்டிதர்கள் பலர் வாழும் அந்த ஊரில் பரம பண்டிதராகப் போற்றப்பட்டவர் யாதவப் பிரகாசர். இவரிடம் மென்மேலும் கல்வி பெற மாணவர் ஆனார் ராமானுஜர். இவரது ஒளி பொருந்திய முகமும், அறிவுத் திறனும் கண்டு பேருவகை கொண்டார் ஆசிரியர். மந்திரங்களைக் கொண்ட கஷ்டமான பாடப்பகுதிகளைக்கூட அநாயாசமாகக் கற்றுத் தேர்ந்தார் ராமானுஜர். அதனால் யாதவப் பிரகாசரின் உள்ளத்தில் மிக சிறந்த இடத்தைப் பெற்றிருந்தார் ராமானுஜர். அமைதியாக வகுப்புக்கு வருவதும், அறிவு விலாசம் பெற்றுப் போவதுமாக இருந்தார் ராமானுஜர்.
எண்ணெய் குளியலா? எண்ணக் குவியலா?
அன்றைய காலத்தில் குருகுலவாச முறை இருந்தது. ஆசிரியரின் ஆடையைத் துவைத்துக் காய வைத்து மடிப்பது முதல் அவருக்கு கால் பிடித்து விடுவது வரை பல பணிகளை மாணவர்கள் முறை போட்டுக்கொண்டு செய்வார்கள். ஆசிரியரின் மனைவி செய்யும் சமையலுக்கு உதவது கூட இவர்களின் பணிதான். இந்த தருணங்களில் கூட ஆசிரியரிடம் இருந்து சில நுணுக்கங்களைக் கற்றுக் கொள்ளலாம் என்பது கூடுதல் நன்மை.
இத்தகைய வாய்ப்பு ஒன்று ராமானுஜருக்கு கிடைத்தது. மாணவர்கள் அனைவரும் காலை உணவிற்குச் சென்றுவிட, ராமானுஜரை அழைத்த யாதவபிரகாசர் தனக்கு எண்ணெய் தேய்த்துவிட உத்தரவிட்டார். அமைதியான ராமானுஜரும் ஆர்வமாகவே அச்செயலைச் செய்ய முன்வந்தார்.
அன்றைய தினம் காலையில் நடத்திய பாடத்தில் ஒரு பகுதி, புரியவில்லை என்றார் ராமானுஜர். அது, சாந்தோக்ய உபநிஷத்தில் வரும் `தஸ்ய யத: கப்யாஸம் புண்டரீக மேவம் அஷிணி`.இதற்கு பதில் தரத் தொடங்கினார், யாதவப் பிரகாசர். பொன்போல் பிரகாசிக்கும் பரந்தாமனின் கண்கள் குரங்கின் ஆசனவாய் சிவந்து இருப்பது போல் காணப்படும் தாமரை இதழ் போன்றது என்று கூறினார்.
இந்த விளக்கம் கேட்ட ராமானுஜர் மனம் கொதித்துச் சுடு நீர் ஊற்றாய் கண்களில் பெருகியது. அது குருவின் தோளில் விழந்து `சுரீர்` என்று சுட்டது. நிமிர்ந்து பார்த்தார் குரு. கண்களில் தாரை தாரையாக நீர் வழிய, முகத்தில் வலி தெரிக்க அதிர்ச்சியில் உறைந்து நின்று இருந்தார் ராமானுஜர். பரந்தாமனின் கண்களுக்கு உவமை இதுவா? ஆனாலும் காரணம் கேட்ட ஆசிரியரிடம் பக்குவமாகவே பேசினார் ராமானுஜர்.
“உலகைக் காக்கும் எம்பெருமானின் திருக்கண்களை குரங்கின் ஆசனவாய்க்கு ஒப்பிட்டதை எப்படி ஏற்க முடியும்? என ராமானுஜர் கேட்டதும் குருவுக்குக் கோபம் தலைக்கேறியது. தான் கூறியதை ஏற்காத சீடனிடம் விளக்கம் தரச் சொல்லிக் கேட்டார்.
பெருமாளின் அரவிந்த நயனம்
விஷ்ணு எந்த அவதாரம் எடுத்தாலும் தன்னால் கண்டுபிடிக்க முடியும் என்றான் பக்தன். எப்படிக் கண்டுபிடிப்பாய் என்றாராம் பகவான். மீனாய், ஆமையாய், அவதாரம் எடுத்தாலும் அவற்றின் இயல்பான வட்டக் கண்களாக இல்லாமல் தாமரை மலர் இதழ் போல் செவ்வரி ஓடிய நீள் வரிக் கண்களைக் கொண்டு கண்டுபிடித்துவிடுவேன் என்றானாம் பக்தன். பெருமாளின் கண் அழகு உலகப் பிரசித்தி.
எம்பெருமானின் கண்கள் அழகாக மலர்ந்துள்ள தாமரை மலர் இதழுக்கு ஒப்பானது என்று உண்மைப் பொருள் கூறினார் ராமானுஜர். இதனைக் கேட்டு அவமானத்தால் உள்ளம் குன்றிப் போனார் யாதவ பிரகாசர்.
மற்றொரு நாள் பிரம்மத்திற்குச் சிறப்பான விளக்கமொன்றைக் கூறினார் ராமானுஜர். இந்தத் துல்லியமான விளக்கத்தைக் கேட்டு அவமானத்தில் துடித்துப் போனார் யாதவ பிரகாசர். `நீ குருவா? நான் குருவா?` என்று கேட்டார்.`நீ குருவா? என்று கேட்ட குருவின் வாக்குப் பின்னாளில் பலித்தது. அதற்கு முன் தன்னை மிஞ்சிய மாணவனுக்குக் குரு தர விரும்பிய பரிசானக் கொலையில் இருந்து ராமானுஜர் தப்பிப் பிழைத்தது தம்பிரான் புண்ணியமே.
உயிர் பிழைத்த ராமானுஜர் பின்னாளில் குறிப்பிடத்தக்க ஆன்மிக குருவாக உருவானார். பிரம்ம சூத்திரம், பகவத்கீதை ஆகியவற்றிற்கு பாஷ்யம் எழுதிய ராமானுஜர், வைணவக் கோயில்களில் உள்ள பூஜை முறைகளில் பல சீர்திருத்தங்களைக் கொண்டுவந்து நடைமுறைப்படுத்தினார். சமயத்தில் புரட்சி செய்த இந்த மகான், தான் உகந்த திருமேனியான, தானானத் திருமேனி கொண்டு இன்றும் ரங்கத்தில், அவர் கோயில் கொண்டுள்ள காட்சி அற்புதம்.
ஆன்மிகத்தில் மிகச் சிறந்த ஆச்சார்யர்களான மத்வர், ஆதிசங்கரர் வரிசையில் ராமானுஜரும் குறிப்பிடத்தக்க ஒருவர். இவரது ஆயிரமாவது ஆண்டைக் கொண்டாடுவதில் ஆன்மிகப் பெருமக்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.