ஆன்மிகம்

மகாமகம் முன்னோட்டம்: சார்ங்கபாணி சுவாமி திருக்கோயில் உலா

எஸ்.ஜெயசெல்வன்

கொடுக்குமுடி சேவை பிப். 8

சீரார் செந்நெல் கவரிவீசும் செழுமை யான நகராகிய திருக்குடந்தை எனும் கும்பகோணத்தில் கோயில்கள் ஏராளம். வானுயர்ந்த கோபுரத்தைத் தன்னகத்தே கொண்டு மிளிரும் ஸ்ரீ சார்ங்கபாணி சுவாமி திருக்கோயில் பல சிறப்புகளைக் கொண்டதாகும். ஏழு ஆழ்வார்களால் பாடல் பெற்றதும், 108 வைணவத் திருக்கோயில்களில் திருப்பதி, ஸ்ரீரங்கத்திற்கு அடுத்த மூன்றாவது திருத்தலமாகவும் திகழும் தலம் இது. நித்ய வைகுண்டம், பூலோக வைகுண்டம் என்றும் இத்தலம் போற்றப்படுகிறது. இத்திருத்தலமே வைகுண்டமாக கருதப்படுவதால் இங்கு தனியாக சொர்க்கவாசல் கிடையாது.

பக்தனுக்காக பணிபுரிந்த பெருமாள்

லட்சுமி நாராயணன் என்ற பக்தன் ஸ்ரீசார்ங்கன் மீது அதிக அன்பு கொண்டு இத்தலத்திலேயே தங்கினான். பெருமாளுக்கு ராஜ கோபுரம் இல்லாதது அவனுக்குப் பெருங்குறையாக இருந்தது. அக்குறை நீங்க பெருமாள் அருளாலும் பக்தர்கள் பலரின் உதவியாலும் 147 அடி உயரமுள்ள பெரிய கோபுரத்தைக் கட்டுவித்தான். அந்தப் பக்தன் ஒரு தீபாவளி அன்று இறந்து போனான். அவனுக்கு இறுதிச்சடங்குகள் செய்ய யாரும் வரவில்லை. அப்போது ஒரு அந்தணச் சிறுவன் வந்து பக்தன் உடலுக்கு இறுதி சடங்குகளைச் செய்வித்தான். பக்தனுக்காக சிறுவனாக வந்தது வேறு யாருமில்லை அந்த சாரங்கப் பெருமாளே. இப்பொழுதும் தீபாவளி அமாவாசை அன்று பெருமாள் திதி கொடுக்கும் வைபவம் நடைபெற்று வருகின்றது.

ரத்தத்தில் அருளும் ரங்கநாதன்

இத்திருக்கோயில் மூலவர், உற்சவர் இருவருமே சார்ங்கபாணி என்றழைக்கப்படுகிறார்கள். நம்மாழ்வார் மூவரை “ஆராவமுதே” என்றும் “ஏரார் கோலம் திகழக்கிடந்தாய்” என்றும் உற்சவரை” நாற்றொளெந்தாய் “என்றும் அழைத்துப் பாடியுள்ளார். திருமங்கையாழ்வார்,”குடந்தையே தொழுது என் நாவிநாலுய்ய நான் கண்டுகொண்டேன் நாராயணா என்னும் நாமம் “ என்று பாடியுள்ளார்.

மூலவர் திருமழிசையாழ்வாருக்கு நேரில் காட்சிதந்து அவரது வேண்டுகோளுக்கு இணங்கி சயனித்துள்ள நிலையில் இருந்து சற்று எழுந்திருக்கும் நிலையில் “உத்தான சாயி” யாய் கருவறையில் எழுந்தருளியுள்ளார். இத்தலத்திலுள்ள பெருமாள் வைகுண்டத்திலிருந்து தான் எழுந்தருளியுள்ள ரதத்துடனேயே இங்கு வந்து தங்கிவிட்டார். அதற்கு அடையாளமாக இங்குள்ள கர்ப்பக் கிரகம் யானை, குதிரைகளுடன் கூடிய ரத வடிவத்தில் அமைந்திருக்கிறது.

திருமண வரமருளும் தாயார்

இத்தலத்து தாயார் திருநாமம் ஸ்ரீகோமளவல்லி. இந்தத் தாயாரை வழிப்பட்ட பின்னே பெருமாளை வழிபடுவது மரபு. கோமளவல்லி தாயார் மகாலெட்சுமியின் அவதாரமாக விளங்குவதால் இருந்த இடத்திலேயே தவம் இருந்து பெருமாளைத் தன் இருப்பிடத்திற்கே வரவழைத்து மணம்புரிந்தார் என்று தலபுராணம் சொல்கிறது. இதனால் இத்தலம் திருமணத்தலமாக விளங்குகிறது. திருமணத்தடை நீங்க கோமளவல்லி தாயாருக்குத் திருமஞ்சனம் செய்து புடவை சாத்தினால் பெண்களுக்குத் திருமண பிராப்தம் ஏற்படும் என்று நம்பப்படுகிறது.

குழந்தைபேறு நல்கும் கிருஷ்ணன்

பெருமாள் கருவறையில் ஆதிசேஷன் மேல் பள்ளிகொண்டிருக்கும் குழந்தை உருவத்தில் உள்ள கிருஷ்ண விக்கிரகம் மிகுந்த சிறப்பு பெற்றது. இவ்விக்கிரகத்தை நீண்டநாள் குழந்தை இல்லாதவர்கள் கையில் வைத்து பிரார்த்தனை செய்தால் குழந்தை பேறு கிட்டும் என்று சொல்லப்படுகிறது.

திருத்தேர் உலாவும் கனு உற்சவமும்

அகிலத்தை ஆளும் ஆரா அமுதனாகிய சாரங்க பெருமாளுக்கு ஆண்டு முழுவதும் விழாக்கள் நடைபெறுகின்றன. தை முதல் நாள் பெரிய திருத்தேர் உலாவும், காணும் பொங்கல் அன்று நிகழும் கனு உற்சவமும் பெரிய திருவிழாவாகும். தை அமாவாசையில் நடைபெறும் கொடுக்குமுடி சேவை வைபவம் பிரசித்திப் பெற்றது. அன்றைய தினம் பெருமாளும் தாயாரும் எழுந்தருளி வெளியில் வந்து நாள்முழுவதும் பக்தர்களுக்காக காட்சி தருகின்றனர். மாசி மாதம் மகத்தன்று நிகழும் தெப்போற்சவ விழா சிறப்பு வாய்ந்ததாகும்.

SCROLL FOR NEXT