உலகப்புகழ் பெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலில் இன்று (ஆக.05) ஆவணி மூல உற்சவத் திருவிழா கொடியேற்றம் பக்தர்கள் பங்கேற்பின்றி நடைபெற்றது.
உலகப்புகழ் பெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலில் கரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இன்று (ஆக.05) காலை 11 மணியளவில் ஆவணி மூல உற்சவத் திருவிழா கொடியேற்றம் சுவாமி சன்னதி முன்புள்ள கம்பத்தடி மண்டபத்தில் நடைபெற்றது.
இதில் அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது. அப்போது மீனாட்சி அம்மன், பிரியாவிடையுடன் சுந்தரேசுவரர் எழுந்தருளி அருள்பாலித்தனர். மாலையில் சந்திரசேகர் புறப்பாடு நடைபெற்றது.
ஆக.5 முதல் 10 ஆம் தேதி வரை கோயிலுக்குள் இரண்டாம் பிரகாரத்தில் சந்திரசேகர் உற்சவம் நடைபெறும்.
அதனைத்தொடர்ந்து ஆக.11ம் தேதி ஆவணி மூல உற்சவத்தின் முதல் நாளில் கருங்குருவிக்கு உபதேசம் நடைபெறும். அடுத்து 2 ஆம் நாள் நாரைக்கு மோட்சம் அருளியலீலை, 3 ஆம் நாள் மாணிக்கம் விற்ற லீலை, 4 ஆம் நாள் தருமிக்கு பொற்கிழி அருளிய லீலை, 5ம் நாள் உலவவாக்கோட்டை அருளியது, 6 ஆம் நாள் பாணனுக்கு அங்கம் வெட்டியது, இரவு திருஞானசம்பந்தர் சைவ சமய ஸ்தாபித வரலாறு திருவிளையாடல், 7 ஆம் நாள் வளையல் விற்ற லீலை, இரவு பட்டாபிஷேகம், 9ம் நாள் நரியை பரியாக்கிய லீலை, குதிரை கயிறு மாறிய லீலை, 9 ஆம் நாள் பிட்டுக்கு மண் சுமந்த லீலை, 10 ஆம் நாள் (ஆக.20) விறகு விற்ற லீலை நடைபெறும்.
கோயில் இணை ஆணையர் க.செல்லத்துரை தலைமையில் பணியாளர்கள் விழாவிற்கான ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.