அருணகிரிநாதரின்திருப்புகழ் வியப்பூட்டும் நூற்றுக்கணக்கான சந்தங்களில் அமைக்கப்பட்டுப் பெரும்புகழ் பெற்றது. முருகனின் அருள் பெற்ற பின் இவர் திருவண்ணாமலை ஆலயத்தின் இளையனார் சந்நிதியில் தவமிருப்பாராம். தவம் முகிழ்ந்து கண் விழிக்கும்பொழுது, முருகன் மீது சந்தங்கள் நிறைந்த பாடல்களை இயற்றுவார். இந்தப் பாடல்கள், யோக ஞானம் கைவரப்பெற்றவர்களை மட்டுமல்லாமல், தமது சந்த இனிமையால் பக்தர்களையும் கவர்ந்தன. திருப்புகழில் உள்ள முத்தைத்திரு, பாதிமதி எனத் தொடங்கும் பாடல்கள் இன்றும் மிகப் பிரபலமானவை.
அருணகிரிநாதரின் வாழ்க்கை பல திடுக்கிடும் திருப்பங்களைக் கொண்டது. இவர் பெண் மேல் கொண்ட பெருங்காமத்தால் தமது குடும்பம் சீரழிவதைக் கண்டு மனம் வெதும்பி, திருவண்ணாமலைக் கோயிலில் தற்கொலை செய்துகொள்ள முயன்றார். அப்போது தடுத்தாண்ட இறைவன் முருகன், அவருக்கு ஞான உபதேசம் செய்தார். அதன் பின் அவரது நாவிலிருந்து சந்தம் மிகுந்த பாடல்கள் கொட்டின. இவை அனைத்துமே கந்தன் மேல் இயற்றப்பட்டவை.
அருணகிரிநாதரின் பக்தியின் மகிமை பற்றிப் பல சுவையான கதைகள் சொல்லப்படுகின்றன. இவரைப் பற்றி கேள்விப்பட்ட, அப்போது திருவண்ணாமலை பகுதியை ஆண்டுவந்த விஜயநகர வம்சத்தைச் சேர்ந்த பிரபுராயன் என்னும் மன்னர் அவருக்குச் சீடரானார். இதனைப் பொறாத அம்மன்னனின் ஆஸ்தான பண்டிதரும் அமைச்சரும்னான சம்பந்தாண்டான் இவர்களது நட்பைக் குலைக்க முயன்றார். அருணகிரிநாதருக்கு வந்த பெருநோயை நீக்கியது முருகன் அல்ல என்றும், இது சித்து வேலை என்றும் கூறிவந்தார் அந்த அமைச்சர். ஆனால் மன்னரோ அருணகிரிநாதரின் ஆன்ம பலத்தையும், யோக சக்தியையும் ஏற்கனவே நன்கு உணர்ந்திருந்தார். மேலும் அருணகிரிநாதரின் பாடல்களிலும் தன் மனதைப் பறிகொடுத்திருந்தார். எனவே, முருகன் அருணகிரிநாதரை ஆட்கொள்ளவில்லை என்பதை நிரூபிக்குமாறு அமைச்சரிடம் கூறினார்.
பந்தயத்துக்குத் தயாரான தேவி உபாசகரான அமைச்சர், தன்னால் தேவியை இங்கு தோன்றச் செய்ய இயலும் என்றும், அவ்வாறே அருணகிரியும் முருகனைத் தோன்றச் செய்ய வேண்டும் என்றும், பந்தயம் வைத்தார். பந்தயத்தில் தோற்பவர்கள் ஊரை விட்டு ஓட வேண்டும் என்ற தீர்ப்பையும் அறிவிக்கும்படி கேட்டுக்கொண்டார். மன்னருக்கோ இரண்டு தெய்வங்களையும் நேரில் காண ஆசை. எனவே அதற்குச் சம்மதித்தார். ஊர் கூடியது.
சம்பந்தாண்டார் தேவியைத் தோன்றுமாறு ஆணவத்துடன் கட்டளையிட்டார். தேவி வரவில்லை. அருணகிரியாரோ முருகனை மனதால் தியானித்து திருவண்ணாமலைக் கோயிலில் கம்பத்தில் தோன்றுவார் எனப் பணிவுடன் கூறினார். அவ்விடம் சென்று ‘மணிரெங்கு’ எனத் தொடங்கும் திருப்புகழ் பாடலைப் பாடினார். உடனே மயில் வாகனனாக முருகனும் காட்சி அளித்தார். இன்றும் இக்காட்சியை விவரிக்கும் வண்ணம் கருங்கல் தூணில் செதுக்கப்பட்ட முருகனின் தோற்றத்தைக் காணலாம்.
முருக பக்தரான அருணகிரிநாதர் திருப்புகழ், கந்தரலங்காரம், கந்தரநுபூதி, வேல் விருத்தம், மயில் விருத்தம், சேவல் விருத்தம், திருவெழுக்கூற்றிருக்கை, திருவகுப்பு ஆகியவற்றை இயற்றியுள்ளார்.
திருப்புகழ், கந்தரனுபூதி, கந்தரலங்காரம்
இனிய தமிழ் இன்னிசை இணையம் மதுரை என்ற பெயரில் க. அழகு முத்து வேலாயுதம் திருப்புகழ், கந்தரனுபூதி, கந்தரலகாரம் ஆகியவற்றை உள்ளடக்கிய குறுந்தட்டை (சிடி) வெளியிட்டுள்ளார். இதில் ஒதுவார்கள் திருப்பரங்குன்றம் கு.சுப்பிரமணியன், மதுரை பொன்.மு.முத்துக்குமரன், கரூர் குமார சுவாமிநாதன், கரிவலம்வந்தநல்லூர் மு.சுந்தர், வயலூர் தி.பாலசந்திரன், மயிலாடுதுறை சொ.சிவக்குமார் ஆகியோர் பாடியுள்ளனர்.
மேலும் இவரது தயாரிப்பில் பன்னிரு திருமுறை, மூவர் தேவாரம், திருஆலவாய், திரு ஆலவாயும் சீர்காழியும் ஆகிய `சிடி`க்களும் வெளி வந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.