ஆன்மிகம்

தூண்டா விளக்கு ரமணர்

ராமலிங்கம் ஸ்ரீனிவாசன்

இறைவனின் ஒப்பற்ற ஆற்றலும், கருணையும் அளவிடற்கரியது. சுயம்பிரகாசமாய், வானிலே கோடி சூரியனுக்கு ஒப்பான ஒளி வீசிக்கொண்டு இருக்கின்றது அந்தப் பரம்பொருள். அதனைத் தூண்டா மணித்துரியச் சுடரே என்று ஸ்ரீரமண சந்நிதியில் எழுதுகிறார் முருகனார். பகவான் ஸ்ரீரமண மகரிஷியும் அந்த நிலையில் யாண்டும் இணைந்தும், பொய்யா விளக்காய், யோகிகள் அனைவரின் உள்ளத்திலும் தூண்டா விளக்காய் ஒளிர்ந்துகொண்டு இருக்கின்றார் என்று உருவகப்படுத்துகின்றார் முருகனார். ஆணவம் என்று கூறப்படுகின்ற முதல் திரை விலகுவதற்கு, அத்தனை உணர்வுக்கும் மூலமான ஆன்மாவைத் தியானித்தல் அவசியமாகின்றது. நம்மை போன்றவர்கள் அந்த ஒப்பற்ற ஆன்ம ஒளியினை நேரிடையாக அடைவது கடினம், அதனால் ஸ்ரீரமணர் போன்றோரின் தூண்டா மணித் துரியச் சுடரில் இருந்து சிறிதளவாவது அந்த ஆற்றலை உள்முகமாக தியானித்து ஈர்த்து வைத்துக் கொள்ளப் பழக வேண்டும். இக்கருத்தினை வள்ளுவர், தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால் மனக்கவலை மாற்றல் அரிது. என்று உரைக்கின்றார். இவ்வுலகத்தில் நாம் வாழ்ந்து, அதனால் அடையும் இடர்களைச் சந்தித்து மேன்மேலும் துன்பத்தைப் பெருக்கிக் கொண்டும், அல்லல்பட்டு வாழ்வதைக் காட்டிலும், உன்னுடைய சிவ பதத்திற்கு அன்பு குன்றாமல் இருக்குமாறு ஆட்கொள்ளப் பட்டால், அந்தத் திருவடிக்கு என்றும் நான் நன்றிக்கடன் பட்டிருப்பேன். எனவே பகவான் ஸ்ரீரமணரால் ஆட்கொள்ளப் பட்டால் வேண்டாத இந்த மனிதப் பிறவியையும் பெரிதுவந்து நான் ஏற்றுக்கொள்வேன் என்று உரைக்கின்றார் முருகனார்.

SCROLL FOR NEXT