புராணக் கதைகளில் வரும் பெரும்பாலான சம்பவங்கள் கற்பனைக்கும் அப்பாற்பட்டவையாக இருக்கும். ஆனால், அதுபோன்ற கதைகளுக்கு நிகழ்காலத்து சாட்சிகளைப் பார்க்கும்போது, மெய்சிலிர்த்துப் போகிறோம். மங்களபுரீஸ்வரரும் அப்படித்தான் மெய்சிலிர்க்க வைக்கிறார்.
கடலூர் - சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் ஆலப்பாக்கம் அருகே உள்ளது திருச்சோபுரம். இங்குதான் மங்களபுரீஸ்வரர், வேல்நெடுங்கண்ணி அம்பாளுடன் வீற்றிருக்கிறார். திருக்கயிலாயத்தில் சிவபெருமானுக்கும் பார்வதி தேவிக்கும் திருமணம் நடந்தபோது, பூலோகம் சமநிலையை இழக்க அகத்தியர் சிவனால் தென்பகுதிக்கு அனுப்பப்பட்ட கதை நமக்குத் தெரிந்ததே.
வயிற்றுவலியால் அவதிப்பட்ட அகத்தியர்
அகத்தியர் தென்புலம் நோக்கி வருகையில் வழி நெடுகிலும் சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து வழிபட்டுக்கொண்டே வருகிறார். வங்கக் கடலோரம் வருகையில் அகத்தியர் தாங்கமுடியாத வயிற்று வலியால் அவதிப்படுகிறார். தனது வேதனையை எம்பெருமானிடம் சொல்லியபடியே கடற்கரை மணலில் சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்ய முயற்சிக்கிறார்; அவரால் அமைக்க முடியவில்லை.
மூலிகைச் செடிகளைப் பறித்து வந்து சாறு எடுத்து அதை மணலோடு சேர்த்து உதிராத சிவலிங்கத்தை உருவாக்கி அதற்குப் பூஜைகள் செய்து வழிபடத் தொடங்கினார். சற்று நேரத்தில் வயிற்று வலி குணமானது. அப்போது அங்கே சிவபெருமானும் பார்வதி தேவியும் காட்சி கொடுத்தனர்.
கடல் மணலையும் மூலிகைச் சாற்றையும் கலந்து அன்றைக்கு அகத்தியர் சிவலிங்கம் படைத்த இடம்தான் திருச்சோபுரம். இத்திருக்கோயிலில் உள்ள சிவலிங்கம் ஒழுங்கற்ற வடிவில் உள்ளது. அகத்தியர் பிடித்து வைத்த சிவலிங்கம்தான் இப்போதும் இந்த ஆலயத்தில் வழிபடப்படுபவதாக நம்பிக்கை உள்ளது. அதற்கு அடையாளமாக அகத்தியரின் கைத்தடங்களைக் காட்டுகின்றனர் பக்தர்கள்.
அகத்திய முனியின் வேண்டுகோளை ஏற்று, பார்வதி தேவியும் இந்த சிவலிங்கத்தில் ஐக்கியமாகி இருப்பதாக நம்பப்படுகிறது. அதனால்தான், இங்கே சிவனுக்கு, மஞ்சளும் குங்குமமும் வைத்து வழிபாடு செய்யப்படுகிறது. மங்களபுரீஸ்வரர் மேற்கு நோக்கி அமர்ந்திருக்க. வேல்நெடுங்கண்ணி அம்பாள் தெற்கு நோக்கி அமர்ந்திருக்கிறார். ஒரே இடத்தில் நின்று சிவனையும் அம்பாளையும் தரிசிக்கும்படியாக சந்நிதிகள் அமைக்கப்பட்டிருப்பது தனிச்சிறப்பு.
திரிபுவனச் சக்கரவர்த்தியின் முதல் மனைவி தியாக வல்லி என்பவர் இத்திருக்கோயிலுக்குத் திருப்பணி செய்ததால் இவ்விடத்திற்குத் தியாகவல்லி என்ற பெயரும் உண்டு. முன்பொருமுறை இப்பகுதி கடல் கொள்ளப்பட்டு கோயிலும் மணலுக்குள் புதைந்து போனது. பிற்பாடு ராமலிங்க சிவயோகி என்வரால் இத்திருத்தலம் மீண்டும் வெளியில் வந்ததாம். இதனால், இத்திருக்கோயிலை தம்பிரான் கண்ட கோயில் என் றும் சொல்கிறார்கள்.
திருஞான சம்பந்தரால் பாடல் பெற்ற இத்திருத்தலத்தில் இன்னொரு சிறப்பும் உண்டு. இங்குள்ள தட்சிணாமூர்த்தி ஸ்வர மூர்த்தியாய் அமர்ந்திருக்கிறார். தட்சிணாமூர்த்தி சிலையைத் தட்டினால் சப்த ஸ்வரங்களையும் கேட்க முடியும். இசைப் பயிற்சியில் இருப்பவர்கள் இவரை வணங்கினால் இசையில் பிரகாசிக்கலாம். இதேபோல், மங்களபுரீஸ்வரருக்கு மஞ்சளும் கும்குமமும் வைத்துப் பூஜை செய்தால் மனக்குறைகள் எதுவாக இருந்தாலும் போக்கி வைப்பார் என்ற நம்பிக்கையும் இருக்கிறது.