வில்லுப்பாட்டு, தெருக்கூத்து, தோல்பாவைக்கூத்து, இசை நிகழ்ச்சி, பரதநாட்டியம், கதாகாலட்சேபம் போன்ற பல கலை வடிவங்களின் மூலம் ராமாயணத்தை `வர்ணக் களஞ்சியமாக’ எண்ணற்ற ரசிகர்களுக்கு வழங்கியது தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம். கடந்த பிப்ரவரி 1 முதல் நான்கு தினங்களுக்கு பாரதிய வித்யா பவனிலும் எண்ணற்ற பொது மக்கள் பார்த்து மகிழும்வண்ணம் பூங்காக்களில் பிப்ரவரி 6, 7 ஆகிய நாட்களிலும் இந்த நிகழ்ச்சிகள் நடந்தன.
சுப்பு ஆறுமுகத்தின் சீதா கல்யாணம் வில்லுப்பாட்டு நிகழ்ச்சியில் அளவான நகைச்சுவையோடு அருமையான கருத்துகளும் இடம்பெற்றன. தோல்பாவைக் கூத்துக் கலைஞர் எஸ்.சீதாலட்சுமி குழுவினரின் ‘கண்டேன் சீதையை’ பெரியவர்களை மட்டுமல்ல சிறியவர்களையும் ஊன்றிக் கவனிக்க வைத்தன. அருகிவரும் கலையான தோல்பாவைக்கூத்தை ஆர்வமும் ஆச்சரியமும் மேலிட, பத்துத் தலையையும் ஆட்டி ஆட்டிப் பேசிய ராவணனின் நிழலையும் விஸ்வரூபம் எடுக்கும் அனுமனின் நிழலையும் குழந்தைகள் ரசித்தனர்.
ராம அவதாரத்தின் சிறப்பு
“தமிழகத்தில் இருக்கும் பல கோயில்களின் தல புராணங்களில் ராமர் வழிபட்ட இடம், லிங்கத்தை பிரதிஷ்டை செய்த இடம் என்றெல்லாம் குறிப்புகள் இருக்கின்றன. ஏகபத்தினி விரதன் என்பதற்கு பல தாரங்களை மணக்கும் ராஜ வம்சத்தில் பிறந்தவராக இருந்தாலும், ஒரே தாரத்தை போற்றும் அவதாரமாக இருப்பதால், ராமர் ஓர் இல்லுக்குச் சொந்தக்காரர் ஆனார். அதனால் ராமரின் கால் படாத இடமே தமிழ்நாட்டில் இல்லை என்னும் அளவுக்குத் தல புராணங்கள் பலவற்றில் அவரின் பெருமை வெளிப்படுகின்றது. துஷ்டர்களுக்கு ஒரே பாணம் ஒரு வில்!
சரணம் என்று வந்தோர்க்கு அபயம் என்ற வாக்கு ஒரு சொல்! ஜென்மம் முழுவதும் இணைந்து வாழ ஒரு மனைவி ஒரு இல்! இதுதான் ராமனின் அறநெறி” என்றார் ஒரு வில், ஒரு சொல், ஒரு இல் என்னும் தலைப்பில் அரிகதை நிகழ்ச்சியைச் செய்த சுசீத்ரா.