ஆஜ்மீரில் நடந்த கதை இது. அங்குதான் புகழ்பெற்ற சூபி துறவியான காஜா மொய்னுதின் சிஷ்டி அவர்களுடைய சமாதியும் தர்காவும் அமைந்துள்ளது.
மொய்னுதின் சிஷ்டி மிகப் பெரிய அறிஞரும் இசைக் கலைஞரும்கூட. இஸ்லாமைப் பொருத்தவரை இசையை மதகுருக்கள் அனுமதிப்பதில்லை. ஆனால் மொய்னுதின் சிஷ்டியோ சிதார் உட்படப் பல இசைக் கருவிகளை அனுபவித்து வாசிப்பார். ஒரு நாளின் ஐந்து முறையும் தொழுகைக்குப் பதிலாக தனது இசை வழியாகவே பிரார்த்தனையில் ஈடுபட்டார். அவரது இசை குறித்து கண்டனம் தெரிவிக்க வந்த பெரியவர்கள் அனைவரும் அவரது பாடல்களில் மயங்கி, வந்த விஷயத்தையே மறந்துபோய்விடுவார்கள். மார்க்க அறிஞர்களும் மவுல்விகளும்கூட அவரை எதிர்க்கவில்லை. அவர்கள் வீடு திரும்பிய பிறகே சிஷ்டியை எச்சரிக்காமல் விட்டது ஞாபகத்துக்கு வந்தது.
சிஷ்டியின் புகழ் உலகமெங்கும் பரவியது. ஜிலானி என்ற பெருந்துறவி, பாக்தாத்திலிருந்து சிஷ்டியைக் காண வந்தார். ஜிலானிக்கு மரியாதையளிக்க எண்ணிய சிஷ்டி, தனது இசைக் கருவிகள் அனைத்தையும் ஒரு அறையில் ஒளித்துவைத்த பின்னரே வரவேற்றார். ஜிலானியைப் புண்படுத்த சிஷ்டியின் மனம் ஒப்பவில்லை. ஜிலானி வந்த நாளன்று மட்டுமே அவர் தன் வாழ்நாளில் இசைக் கருவிகளை வாசிக்கவில்லை. மதிய வேளையில் சிஷ்டியின் இருப்பிடத்துக்கு வந்தார் ஜிலானி.
இருவரும் ஒருவருக்கொருவர் முகமன் கூறிக்கொண்டனர். அமைதியாக அமர்ந்து இளைப்பாறத் தொடங்கியபோது, அறையில் மறைந்திருந்த இசைக் கருவிகள் தாமே இசைக்கத் தொடங்கின. முழு அறையும் இசையால் நிறைந்தது. மொய்னுதீன் சிஷ்டிக்குத் தாங்க முடியாத ஆச்சரியமாக இருந்தது.
ஜிலானி புன்னகைத்தார். “உங்களுக்கு இந்த விதிகள் எல்லாம் பொருந்தாது சிஷ்டி. உங்கள் இசைக்கருவிகளை மறைக்க வேண்டியதில்லை. உனது ஆன்மாவை எப்படி மறைக்க இயலும்? விதிகள் அனைத்தும் சாதாரண மனிதர்களுக்கே. உனது கைகள் இசைக்காமல் இருக்கலாம். நீ பாடாமல் இருக்கலாம். ஆனால் உனது மொத்த இருப்பும் இசையின் இருப்பு அல்லவா. நீ வசிக்கும் இந்த அறை முழுவதும் இசையால் நிறைந்திருக்கிறது. அந்த அதிர்வுகளால்தான் நீ பாடாதபோதும் அறை தானே பாடத் தொடங்கிவிட்டது” என்றார்.