இறைமகன் இயேசுவின் பிறப்பையும் அவரது அவதார நோக்கையும் முன்னறிவித்த இறைவாக்கினரில் ஏசாயாவும் திருமுழுக்கு யோவானும் முதன்மையான இருவர். முதலில் ஏசாயாவைப் பார்ப்போம். இவர் கி.மு. எட்டாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் எருசலேம் நகரில் வாழ்ந்தவர். கடவுளால் தேர்ந்தெடுக்கப்பட்டு, கற்பிக்கப்பட்டு யூதமக்களிடம் அனுப்பப்பட்டவர்.
இவர் வாழ்ந்த காலத்தில் யூதேயா தேசம் பக்கத்து நாடான அசீரியாவின் அச்சுறுத்தலுக்கும் படையெடுப்புக்கும் ஆளாகவிருந்தது. யூதேயாவுக்கு வரவிருந்த அழிவுக்குக் காரணம், அசீரியாவின் பலம்பொருந்திய ராணுவம் அல்ல; யூதேயாவின் குடிமக்கள் கடவுள் மீது நம்பிக்கையிழந்து அவருக்குப் பணியாது செய்த பாவங்களே என்று ஏசாயா தன் எழுச்சியூட்டும் சொற்களால் யூதர்களை மனந்திரும்ப அழைத்தார். யூதர்கள் நேர்மையோடும் நீதியோடும் வாழ முன்வராவிட்டால் அழிவுகள் காத்திருக்கின்றன என எச்சரித்தார்.
அவரது வாழ்நாளில் யூதர்கள் மனந்திரும்பவில்லை. எனினும் தாவீதின் வழித்தோன்றலில் வரவிருக்கும் ஓர் ஒப்பற்ற அரசர் மூலம், யூதர்கள் மட்டுமல்ல அனைத்துலகுக்கும் பொற்காலம் வரும் என ஏசாயா முன்னறிவித்தார்.
இரண்டு யோவான்கள்
மீட்பராகிய இயேசு பூமியில் பிறந்துவிட்டதையும் நம் மத்தியில் இறைப்பணியைத் தொடங்கப்போகிற அவரே உலகின் ஒளியாகிய மெசயா என்பதையும் பிரகடனம் செய்தவர் இயேசுவின் சமகால இறைவாக்கினரான திருமுழுக்கு யோவான் (John the Baptist). யோர்தான் நதியில் இவரிடம்தான் இயேசு தன் 28-ம் வயதில் திருமுழுக்குப் பெற்றுக்கொண்டார். புதிய ஏற்பாட்டின் நான்காவது புத்தகத்தை எழுதியவர் இயேசுவின் அன்புச் சீடரான யோவான் (செபதேயுவின் மகன்).
இவர் முதலில் திருமுழுக்கு யோவானிடம் சீடராக இருந்து பின் அவரது அறிவுறுத்தலின் பேரில் இயேசுவின் சீடராக மாறுகிறார். இயேசுவுடன் மிக நெருக்கமாக இருந்த மூன்று முதன்மைச் சீடர்களில் இவரும் ஒருவர். இறுதி இரவுணவின்போது இயேசுவின் அருகில் அமர்ந்திருந்த இவர், இயேசு சிலுவையில் உயிர்விடும் கடைசி மணித்துளிகளில் மற்ற சீடர்கள் அனைவரும் ஓடிவிட்ட நிலையில் சிலுவையடியில் நின்றார். இவரிடமே இயேசு தம் அன்புத் தாயை ஒப்படைத்தார்.
இவர் தனது முதல் குருவான திருமுழுக்கு யோவன், இயேசுவின் அவதாரம் எதற்காக என்பதை எடுத்துக் கூறியதைத் தனது நற்செய்தி புத்தகத்தில் பதிவு செய்திருக்கிறார். அதை இங்கு காண்போம்.
பாலைநிலத்தில் ஒரு குரல்
“கடவுள் அனுப்பிய ஒருவர் இருந்தார். அவர் பெயர் யோவான். அவர் சான்று பகருமாறு வந்தார். அனைவரும் தம் வழியாக நம்புமாறு அவர் ஒளியைக் குறித்துச் சான்று பகர்ந்தார். அவர் அந்த ஒளி அல்ல. மாறாக, ஒளியைக் குறித்துச் சான்று பகர வந்தவர். எருசலேமிலுள்ள யூதப் பரிசேயர்கள் குருக்களையும் லேவியர்களையும் யோவானிடம் அனுப்பி, நீ யார்? என்று கேட்டபோது அவர், நான் மெசயா அல்ல என்று அறிவித்தார். இதை அவர் வெளிப்படையாகக் கூறி, மறுக்காமல் ஒப்புக்கொண்டார்.
அப்போது, அப்படியானால் நீர் யார்? நீர் எலியாவா? என்று அவர்கள் கேட்க, அவர், நானல்ல என்றார். நீர் தாம் வர வேண்டிய இறைவாக்கினரா? என்று கேட்டபோதும், அவர்; இல்லை என்று மறுமொழி கூறினார். அவர்கள் அவரிடம், நீர் யார்? எங்களை அனுப்பியவர்களிடம் நாங்கள் மறுமொழி சொல்லியாக வேண்டும். எனவே உம்மைப் பற்றி என்ன சொல்கிறீர்? என்று கேட்டார்கள். அதற்கு அவர் ஆண்டவருக்காக வழியைச் செம்மையாக்குங்கள் எனப் பாலைநிலத்தில் குரல் ஒன்று கேட்கிறது என்று இறைவாக்கினர் ஏசாயா உரைத்தது என்னைப் பற்றியே என்றார்.
அதற்கு அவர்கள்; அவரிடம்; நீர் எலியாவோ வர வேண்டிய மெசயாவோ அல்லவென்றால் ஏன் திருமுழுக்குக் கொடுக்கிறீர்? என்று கேட்டார்கள். யோவான் அவர்களிடம், ‘நான் தண்ணீரால் திருமுழுக்குக் கொடுக்கிறேன். நீங்கள் அறியாத ஒருவர் உங்களிடையே நிற்கிறார். அவர் எனக்குப்பின் வருபவர். அவருடைய மிதியடிகளின் வாரை அவிழ்க்கக்கூட எனக்குத் தகுதியில்லை’ என்றார். இவையாவும் யோர்தான் ஆற்றுக்கு அக்கரையிலுள்ள பெத்தானியாவில் நிகழ்ந்தன. அங்குதான் யோவான் திருமுழுக்குக் கொடுத்துக் கொண்டிருந்தார்”(யோவான் 1: 6-8, 19-28) என யோவான் எழுதியிருக்கிறார்.
யோவான் சோதிக்கப்பட்ட பின்னணி
இந்த யோவான் நற்செய்தியில் இரண்டு உண்மைகளில் வெள்ளிடை மலையாகப் பளிச்சிடுகின்றன. இயேசுவே பூமிக்கு தாம் அனுப்பிய மனுமகன்; அவரே மீட்பர் என்று யோவான் வழியாகக் கடவுள் வெளிப்படுத்தியது. இத்தனை தீர்க்கமாக திருமுழுக்கு யோவான் மூலம் உறுதிப்படுத்தியும் யூதர்கள் இயேசுவை ஏற்றுக்கொள்ள மறுத்தது.
திருமுழுக்கு யோவானைச் சந்திக்கவும் சோதிக்கவும் யூத மதத்தின் குருக்களையும், லேவியர்களையும் அனுப்பிய பரிசேயர்கள், யூதமதப் பரிபாலனத்தை நடத்தும் யூத தலைமைச் சங்கத்தை கையில் வைத்திருந்தவர்கள். யோவானை அவர்கள் பரிசோதிக்கக் காரணம். திருமுழுக்கு யோவானின் தந்தையான செக்கரியா ஒரு யூத குரு. யூத மதத்தில், குருத்துவம் என்பது வழித்தோன்றல் அடிப்படையில் தரப்படுவது. ஏரோனின் வழித்தோன்றலில் வராத யாரும் குருத்துவம் பெற முடியாது.
அதிகாரவர்க்கத்தினரின் பார்வையில், யோவான் ஒரு குரு. ஆனால் வழக்கமான யூதகுருவைப் போல யோவான் நடந்துகொள்ளவில்லை. அவர் பாலை நிலத்துக்குச் சென்று எளிமையாக வாழ்கிறார். அதிகார வர்க்கத்தையும் மதவாதிகளையும் கடுமையாக எச்சரிக்கிறார். எனவே படாடோபிகளான பரிசேயர்களுக்கு இவரது புதுமை கலக்கத்தைக் கொடுக்கிறது. ஏசாயா முன்னுரைத்த மெசியா இவர்தானோ என்று அஞ்சுகிறார்கள். எனவே யோவானைச் சோதனை செய்து உண்மையை அறிந்துகொள்ளத் துடித்தார்கள். நிஜமாகவே மெசயா வந்துவிட்டால் தங்கள் முகத்திரை விலகிவிடுமே என்று இறைவாக்கினரையே சோதிக்கிறார்கள்.
ஆனால் பரிசேயர்களுக்கு சோதனையான காலம் பிறந்துவிடுகிறது. யோர்தான் ஆற்றருகே யோவான் நின்றுகொண்டிருக்கிறார். அவருடைய குரல் கணீரென ஒலிக்கிறது. மக்கள் மனம் மாறி, கடவுளிடம் திரும்பாவிட்டால் அவர்களுக்கு அழிவு வந்தே தீரும் என அச்சுறுத்தும் மொழியில் எச்சரிக்கிறார்.
மக்கள் பாவ வாழ்க்கையைத் துறந்துவிட்டு மனம் மாறிக் கடவுளிடம் செல்ல வேண்டும் என்று உரக்கச் சொன்ன யோவான் தம்மைவிடவும் பெரியவர் ஒருவர் வருகிறார் எனத் தீர்க்கமாக அறிவித்தார். ''நீங்கள் அறியாத ஒருவர் உங்களிடையே நிற்கிறார்'' என்று யோவான் இயேசுவைப் பற்றிக் கூறுகிறார். முன்னறிவிக்கப்பட்ட மன்னவன் வருகிறார்... பரிசேயர்களைப் போல பயந்து நடுங்காமல் பாதையைச் செம்மைப்படுத்துவோம் வாருங்கள்.