நாடகத்திற்குத்தான் திருவிழா போல ரசிகர்கள் சாரிசாரியாக வந்து கொண்டிருந்தார்கள். அதில் குழந்தைகளும் சிறுவர்களும் சரிவிகிதத்தில் இருந்தார்கள். ஆம். பாம்பே ஞானம் திரைக்கதை, இயக்கத்தில் பகவன்நாம போதேந்திராள் ஆன்மீக வரலாற்று நாடகம். இதனை மகாலஷ்மி லேடிஸ் கிளப் வழங்க சென்னை ஆழ்வார்பேட்டை நாரதகான சபாவில் கடந்த ஞாயிறன்று நடைபெற்றது. இதில் அரங்கம் கைத்தட்டலால் அதிர்ந்தது. இறுதியில் அரங்கம் ராமநாமாவால் நிறைந்தது.
வரலாறு
ஆசாரமான குடும்பத்தைச் சேர்ந்த அந்த தம்பதிகளுக்கு திருமணமாகி பல ஆண்டுகள் கழிந்த பின்னரும் குழந்தை இல்லை. அக்கம் பக்கத்தினர் பல அறிவுரைகள் கூறுகிறார்கள். ஆனால் காஞ்சி மடத்தில் உள்ள குரு மனது வைத்தால், அவரருளால் குழந்தை பிறக்கும் என்று நம்பும் அத்தம்பதிகள், பாண்டுரங்கன் சுகுணா. இவர்கள் வாழ்ந்த காலத்தில் காஞ்சி மட பீடாதிபதிகள் வரிசையில் 58-வது பீடாதிபதியாக விஸ்வாதிகேந்திர சரஸ்வதி சுவாமிகள் பீடத்தை அலங்கரித்தார்.
ஞான மார்க்கத்தில் உள்ள அவரிடம், இகவுலக விருப்பமான பிள்ளை வரம் கேட்க தம்பதியர் தயங்க, மனதால் நினைத்தாலே போதும் குருவருள் கிடைத்துவிடும் என்று எண்ணி மனதால் வணங்குகின்றனர். இதனை அறிந்த குரு, சுகுணாவிற்கு மட்டைத் தேங்காயை மடிப் பிச்சையாய் அளிக்க, விரைவில் அறிவொளி வீசும் முகத்துடன் ஆண் குழந்தை பிறக்கிறது அத்தம்பதிக்கு. குழந்தைக்கு புருஷோத்தமன் எனப் பெயரிடுகிறார்கள்.
நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக புருஷோத்தமன் வளர்கிறான். பூணூல் போட வேண்டிய தருணத்தில் குருவிடம் ஆசி பெறச் செல்லும் நேரத்தில், பூணுல் போட்ட பின் குழந்தையை மடத்திலேயே விட்டுவிட சொல்கிறார் அந்த தீர்க்கதரிசி. பின்னாளில் இக்குழந்தை இளைஞனாக இருக்கும்போதே அவனது பெற்றோர் இவ்வுலகை விட்டு நீங்கிவிட்டனர். அவன் திசைமாறி போய்விடக் கூடாது என்று இன்றே அக்குழந்தையை மடத்தில் விடச் சொன்னார் போலும்.
வேதம் கற்று விண்ணை முட்டும் ஞானத்தைப் பெறுகிறான் புருஷோத்தமன். மடத்திற்கு இவனுக்கு முன்னரே வந்து சேர்ந்தவன் ஞான சாகரன். இருவரும் இணை பிரியாத நண்பர்கள்.
பிரம்ம வித்தையை புருஷோத்தமனுக்கு மட்டும் உபதேசிப்பதாய் வாக்களித்து, பின் காசி செல்கிறார் குரு. அவர் திரும்பி வரும்வரை காத்திருக்க முடியாமல் புருஷோத்தமன், காசிக்கு தன்னுடன் வர தன் நண்பனையும் வற்புறுத்தி அழைக்கிறான். இந்த நேரத்தில் சத்தியம் அளிக்கக் கோருகிறான் ஞான சேகரன். தான் இறந்தால், அனாதையான தன் உடலை தன் நண்பன் புருஷோத்தமனே எரியூட்ட வேண்டும் என்கிறான்.
பின்னர் குருவைக் கண்ட பின் கங்கையில் அவன் தன் உயிரை மாய்த்துக் கொள்ள வேண்டும் என்றும் கோருகிறான். புருஷோத்தமனும், எப்படியாவது தன் நண்பன் தன்னுடன் வந்தால்போதும் என்று சத்தியம் செய்கிறான். அந்த வேத வித்துக்கள் இரண்டும் காலத்தையே துணையாகக் கொண்டு காடு, மேடு, மலை, நதி எனப் பலவறைக் கடந்து வருகின்றனர்.
அப்போது ஓர் இடத்தில் கடுமையான காய்ச்சலுக்கு உள்ளான ஞானசாகரன் உயிரிழக்கிறான். அவ்வுடலுக்கு கதறியபடியே எரியூட்டினான் புருஷோத்தமன்.
பின்னர் காசியில் குருவைக் கண்ட புருஷோத்தமன், தன் நண்பனுடனான உரையாடலைக் கூறி, அவனுக்கு அளித்த சத்தியத்தின்படி கங்கையில் மூழ்கப்போவதாகக் கூறுகிறான். இறைவன் அளித்த உயிரை நண்பன் பெயரால் மாய்த்துக் கொள்வதை குரு கண்டித்தாலும், அவன் தொடர்ந்து கங்கையில் விழப் போகிறான்.
அப்போது, தன்னை கங்கை எனக் கூறிக் கொள்ளும் அசீரிரி ஒலிக்கிறது. அவன் இதில் வீழந்து இறந்தால், தன் மீது மேலும் பாபம் திணிக்கப்படும் என்று கூறி அவனைத் திருப்பி அனுப்பி விடுகிறது.
செய்வதறியாது திகைத்த புருஷோத்தமன் மீண்டும் குருவை அடைகிறான். அவரோ காஷாயம் என்கின்ற துறவு ஆடையை அளித்து, புதுப் பிறவி அடையச் செய்கிறார். புருஷோத்தமன் போதேந்திராள் ஆனார். பின்னர் போகிறபோக்கில் ராமநாம சங்கீர்த்தனத்தின் மூலம் அதன் மகிமையை நிரூபிக்கிறார். பிறவி ஊமை ராமநாம சொல்லி, பேச்சுத் திறமையைப் பெறுகிறது.
பிற மதத்திற்கு கடத்தப்பட்ட திருமணமான பெண், ராம நாமத்தை சொல்லியபடி குளத்தில் மூழ்கி எழுந்து, தன் தூய்மையை நிரூபிக்கிறாள். இவற்றின் மூலம் போதேந்திராள், பகவன்நாம போதேந்திராள் ஆனார். இவரே தற்போதுள்ள காஞ்சி சங்கர மடத்தின் 59-வது பீடாதிபதி ஆவார்.
நாடகம்
திரைகதை, இயக்கம் என்ற இரு பெரும் இரும்புத் தூண்களின் மீது இந்த வரலாற்று சின்னத்தை தூக்கி நிறுத்தியவர் பாம்பே ஞானம். இத்துறையில் இருபத்தைந்து ஆண்டுகள் பெயர் சொல்லும் வண்ணம் வாழ்ந்திருக்கிறார் என்பதாலேயே நாடகத்தை நறுவிசாக அளித்திருக்கிறார். நாடகங்களில் அந்நாளில் பெண்கள் நடிக்க வரமாட்டார்கள் என்பதாலேயே ஆண்களே ‘ஸ்திரி பார்ட்‘ என வேடம் போடுவார்கள்.
இந்த நாடகத்தில் சில பெண் கதாபாத்திரங்களும், போதேந்திராள் உட்பட பல ஆண் கதாபாத்திரங்களும் இருக்கிறது. இவை அனைத்திலும் வேடமிட்டது பெண்களே. ஐந்து வயது முதல் எழுபத்தைந்து வயது வரை இந்நாடகத்தில் நடித்தவர்கள் அனைவரும் பெண்கள். பெண் என்னும் பெரும்சக்தியாக மொத்தம் 36 பேர். இள வயது புருஷோத்தமனும், ஞானசாகரனும் சகோதரிகள் என்றார்கள். பொருத்தமான தேர்வு. பொலிவான நடிப்பு.
பாம்பே ஞானத்தை தலைவராகக் கொண்ட மஹாலஷ்மி லேடிஸ் கிளப்பைச் சேர்ந்த பெண்கள் இதில் நடித்தனர். பெண்களையே சாஸ்த்திர சம்பந்தமான இந்த நாடகத்தில் நடிக்க வைத்த துணிச்சலுக்கும், வேத கோஷம் உட்பட அனைத்து உரையாடல்களையும் பதிவு செய்து வழங்கிய புத்தாக்கத்திற்கும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு. ரசிகர் ஒருவரை நாடகம் குறித்து கருத்து கேட்டபோது, தான் பதினெட்டாவது முறையாக இந்நாடகத்தை காண வந்திருப்பதாகத் தெரிவித்தார்.
ராமநாமப் பெருமையை எடுத்துக் கூறும் இது, ஒரு நாடக ஓவியம்.