ஆன்மிகம்

தடைகள் நீங்க விஸ்வசேஷனர் ஆராதனை

எம்.என்.ஸ்ரீனிவாசன்

பரமபதத்தில் திருமாலின் அடியார்களாக அனந்தன், கருடர், விஸ்வசேஷனர் ஆகியோர் காட்சி அளிப்பார்கள். இதில் விஸ்வசேஷனர் திருமாலின் சேனைத் தலைவர். இவரைச் சேனை நாதன், சேனை முதலியார் என்றும் அழைப்பர். நித்திய சூரிகளில் முக்கியமானவர்.

செயலொன்றைத் தொடங்கும் முன் விஸ்வசேஷனரை வணங்கிவிட்டு ஆரம்பிப்பது திருமாலடியார்களின் வழிமுறை. ஆழ்வார்களில் நம்மாழ்வார் இவரது அம்சமாகவே அவதரித்தார். இவர் நித்தியசூரி, அயோனிஜர் (தாய் மூலம் பிறப்பல்ல). ஐப்பசி மாதம் பூராட நட்சத்திரத்தில் அவதரித்தார். அசுர சம்ஹாரத்தில் திருமாலுக்கு உதவுபவர்.

விஸ்வசேஷனர் பொதுவாக அமர்ந்த கோலத்தில், வலது கரத்தில் சக்கரம், இடது கரத்தில் சங்கைத் தாங்கி இருப்பார். கீழ் வலது திருக்கரத்தில் ஆள் காட்டி விரல் மேல் நோக்கி இருக்கும். கீழ் இடது கரத்தில் கதாயுதம் தாங்கிக் காட்சி அளிப்பார். வலது காலைத் தொங்கவிட்டு, இடது காலை மடித்து வைத்த நிலையில் காட்சி அளிப்பார். சில திருவுருவங்களில் கோல் ஒன்றைத் தாங்கி இருக்கும் காட்சியையும் காணலாம். நின்ற திருக்கோலத்திலும் அரிதாகக் காட்சி அளிப்பார்.

அனைத்துத் திருமால் தலங்களிலும் உள்ள இவருக்கு ஸூத்ரவதி என்ற மனைவி உண்டு. வைணவ சம்பிரதாயத்தில் ஆசார்ய ஸ்தானத்தை வகிப்பவர் இவரே. நற்காரியங்களை முன்னிட்டுத் தொடங்கும் எக்காரியத்திலும் இவரை வணங்கினால், அக்காரியம் முழுமையான வெற்றிபெறும் என்பது ஐதீகம். இவரின் அவதார நன்னாள் 16.11.15 அன்று அமைகிறது. இல்லத்தில் நித்தியப் பூஜை உள்ளிட்ட எந்தப் பூஜை ஆனாலும் விஸ்வக்ஷேனரை மனதால் துதித்து வணங்குதல் நன்மை பலவற்றைக் கொண்டுவந்து சேர்க்கும் என்பது நம்பிக்கை.

SCROLL FOR NEXT