நாலாயிர திவ்ய பிரபந்த பாசுரங்களைப் பிரபலப்படுத்துவதையும், பதிப்பித்து வெளியிடுவதையும் குறிக்கோளாகக் கொண்டு, திருமலை திருப்பதி தேவஸ்தானம், ஆழ்வார் திவ்ய பிரபந்த பிரசாரத் திட்டத்தை 1991-ல் உருவாக்கியது. இத்திட்டம் தர்ம பிரசாரத் திட்டத்தின் ஓர் அங்கமாகவும் இருக்கிறது.
ஆழ்வார்கள் ஆச்சாரியன்களின் திருநட்சத்திரம் நிகழ்வை, நாடு முழுவதும் மூலை முடுக்கெல்லாம் திருநட்சத்திர உற்சவங்களாகக் கொண்டாடுவது; ஆழ்வார்கள் அருளிச் செய்த பிரபந்தங்களையும், ஆச்சார்யன்கள் எழுதிய அதன் வியாக்கியானங்களை வெளியிடுவது; உபன்யாச நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்வது ஆகியன இத்திட்டத்தின் முக்கியப் பணிகளாக அமைந்துள்ளன. மேலும் இத்திட்டத்தின் மூலம் திருநட்சத்திர வைபவத்தோடு மட்டுமல்லாமல் ஆண்டுக்கு மூன்று முறை சிறப்புக் கருத்தரங்குகள் இந்தியாவில் வெவ் வேறு இடங்களில் நடத்தப் படுகின்றன.
ஆண்டுக்கு ஒரு முறை உபய வேதாந்தக் கருத்தரங்கு மற்றும் கல்லூரிகளில் நடத்தப்படும் கருத்தரங்குகள் ஆகியவையும் இத்திட்டத்தின் கீழ் நடத்தப்படுகின்றன. இத்திட்டம் மூலம் வைணவ ஆலயங்களில் நித்திய சேவா காலத்தில் காலையும், மாலையும் பிரபந்தம் பாராயணம் செய்வது வழக்கத்தில் உள்ளது. 2009 லிருந்து இயங்கிவரும் இத்திட்டத்தின் கீழ் இருநூற்று அறுபது பேர் இந்தியா முழுவதிலும் உள்ள வைணவ ஆலயங்களில் நியமிக்கப்பட்டுள்ளனர். இத்திட்டத்திற்காக ஆண்டொன்றுக்கு மூன்று கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.