விஷ்ணு பிரபாவம் என்ற புதுமையான நிகழ்ச்சி, நாரத கான சபாவின் `மினி` அரங்கில், நவம்பர் 26-ம் தேதி, விரிவுரையும், வாய்ப்பாட்டுமாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சி, மத்திய அரசின் கலை மற்றும் பண்பாட்டு அமைச்சகத்தின் ஆதரவுடன் நிகழ்ந்தது.
முதலில் டாக்டர் சித்ரா மாதவன் திவ்ய தேசங்களில் உள்ள சிற்பங்களின் சிறப்புகளை, இது வரை அறியாத புதிய செய்திகளுடன் மென்மையாக விளக்கினார். தொல் பொருள் செய்திகள் சாஸ்திரோக்தமாக விளக்கப்பட்டது நயமாக இருந்தது.
பின்னர் சுபாஷிணி பார்த்தசாரதியின் பாட்டுக் கச்சேரி அத்திவ்ய தேசங்களை அடியொற்றி வந்தது. ஸ்ரீ வேதாந்த தேசிகர் இயற்றிய ஹயக்கிரீவ ஸ்லோகத்துடன் தனது கச்சேரியைத் தொடங்கினார் சுபாஷிணி பார்த்தசாரதி. தொல் பொருள் விளக்கத்தில் விஷ்ணு வைபவம் குறித்து விவரிக்கப்பட்ட திவ்ய தேசப் பெருமாள்களுக்கு உரித்தான கீர்த்தனைகள் தேர்ந்தெடுக்கப்பட்ட விதமும், பாடிய முறையும் மிகப் பொருத்தம். முதலில் வழக்கம் போல் கன ஜோரான கல்யாணி வர்ணம். இது வனஜாட்சி, நாகப்பட்டிணம் செளந்தர்ராஜ பெருமாள் மீது வீராசாமி பிள்ளை இயற்றியது.
அடுத்தது, ஸ்ரீரங்கம் ரங்கநாதப் பெருமாளைப் போற்றி முத்துசுவாமி தீட்சதர் இயற்றிய ரங்கநாயகம். அரங்கில் நாயகியாய் உலா வந்தாள் ராக தேவதை. காஞ்சீபுரம் வரதராஜப் பெருமாள், திருப்பதி ஸ்ரீனிவாசப் பெருமாள், மன்னார்குடி ராஜ கோபால சுவாமி ஆகிய திவ்ய தேசப் பெருமாள்களைப் போற்றி, முறையே தியாகராஜர், முத்துசுவாமி தீட்சதர், ராமநாதபுரம் ஸ்ரீனிவாச ஐயங்கார் ஆகியோரின் கீர்த்தனைகள் வரிசைகட்டி அருமையாக வந்தன. ஸ்ரீராம்குமாரின் வயலின் இசை தேனாக இருந்தது. அருண் பிரகாஷின் மிருதங்க வாசிப்பு கற்கண்டு மழை.
நயமான உரையும் நாதமும் சேர்ந்து வித்தியாசமான ஆன்மிக, இசை விருந்தைப் படைத்துவிட்டன.