அன்னி என்ற பெயரை உடைய வேடன் ஒருவன், உணவுக்காகப் பூமியில் கிழங்கு தோண்டிக்கொண்டிருந்தான். அப்போது அவன் தனது கைக்கோடாரியால் மண்ணை வெட்டிய இடத்தில், பெரும் சத்தம் கேட்டது. அருகில் ஆடு, மாடு மேய்த்துக்கொண்டிருந்தவர்கள் காதிலும் இவ்வொலி கேட்டதால், அவர்கள் சத்தம் எழுந்த இடத்தை நோக்கி வந்தனர்.
அங்கே சிவபெருமான் லிங்க வடிவில் சுயம்புவாக இருந்தது தெரியவந்தது. அந்த லிங்க ரூபத்தை மண்ணிலிருந்து வெளியே எடுக்க முயன்றனர். ஆனால் லிங்க ரூபமோ வெளியில் வரவில்லை. இதனை அந்நாட்டு அரசனான சேரனிடம் தெரிவித்தனர் மக்கள். வள்ளி வனத்தில் நடைபெற்ற இந்த இழுபறியை மன்னனும் காண வந்தான். லிங்கத்தைச் சங்கிலியால் கட்டி யானையைக் கொண்டு இழுத்தும் பயனொன்றும் இல்லை.
அப்போது இடியோசையுடன் கேட்ட அசரீரி, இவ்விடத்திலேயே இறைவன் கோயில் கொள்ள விரும்புவதாகத் தெரிவித்தது. இந்த சுயம்பு லிங்க ரூபத்தை மூலவராகக் கொண்டு, ஆலயம் கட்டி வழிபட அந்த அசரீரி ஆணையிட்டது.
அன்னூர் ஆன அன்னியூர்
மன்னர் சங்கிலியால் கட்டி இழுத்ததையும், வேடன் கோடாரியால் வெட்டியதையும், இறைவன் மன்னித்து அருள் புரிந்தார். இதனால் இத்தலப் பெருமான் மன்னீஸ்வரர் எனத் திருப்பெயர் கொண்டார். இவ்வூர் வேடன் அன்னியின் பெயரை ஒட்டி அன்னியூர் என அழைக்கப்பட்டது இத்தலம்.தற்போது, மருவி அன்னூர் என இவ்வூர் அழைக்கப்படுகிறது.
தென் காளஹஸ்தி மேற்றலை தஞ்சாவூர் என்றும் போற்றப்படுகிறது. மன்னீஸ்வரருடன் அருந்தவச் செல்வி அம்மன் ஆலயம் கட்டப்பட்டது. மேலும் விநாயகர், முருகன், நவக்கிரகம், சூரியன், சந்திரன், ஞானபைரவர், தட்சிணாமூர்த்தி, துர்கை, சனி பகவான், சண்டிகேஸ்வரன் எனத் தனிச் சந்நிதிகள் இக்கோயிலில் உள்ளன.
குடமுழுக்கு கண்ட ஏழு நிலை ராஜகோபுரம் உள்ள இத்திருக்கோயிலில், ஒவ்வோர் ஆண்டும் மார்கழி மாதம் மிகச் சிறப்பாகத் தேர்த் திருவிழா கொண்டாடப்படுகிறது. கார்த்திகை நட்சத்திர நன்னாளில் முருகன் தேரில் பவானி வருவது வழக்கம். குருப் பெயர்ச்சி, சனிப் பெயர்ச்சி, கார்த்திகை, அமாவாசை நாட்களில் சிறப்பு வழிபாடுகள் உண்டு. 21 தீபம் ஏற்றி 21 முறை கோயிலைச் சுற்றி வலம் வருதல் இக்கோயிலின் சிறப்பு.