யஞ்ஞமூர்த்தி என்பவர் யாத்திரையாகத் தென்தேசம் வரும்போது திருவரங்கத்தில் ராமானுஜருடன் வாதிட முன்வந்தார். ராமானுஜரும் இவருடன் பதினேழு நாள் வாதிட்டார். வெல்ல முடியாமல் மனம் தளர்ந்தார்.
ராமானுஜர் பதினெட்டாம் நாளன்று தனது பூஜா மூர்த்தியான காஞ்சிவரதனை தியானித்தார். அவரின் கனவில் தோன்றிய வரதன், ஆளவந்தாரின் `மாயாவாத கண்டன’த்தை எடுத்துக் கூறி, இதனைக் கொண்டு யக்ஞமூர்த்தியை வெல்லுமாறு அருள் புரிந்தார். அவ்வாறே உறுதி பூண்ட ராமானுஜரும் வாதிடச் சபைக்கு வந்தார். என்றுமில்லாத இறையொளி கம்பீரத்துடன் வந்த அவர் தோற்றத்தைக் கண்டதும், யக்ஞமூர்த்தி அவரது காலில் விழுந்து தோற்றதாக ஒப்புக் கொண்டார்.
ஏகதண்டி சந்நியாசியான யக்ஞமூர்த்திக்கு திரிதண்டம், பாத்திரம், ஜலபவித்திரம், கெளபீனம் ஆகியவற்றை அளித்துத் தனது சீடராக ஏற்றுக்கொண்டார். யஞ்ஞ மூர்த்திக்கு அருளாளப் பெருமாள் எம்பெருமானார் என்ற பெயரையும் சூட்டினார். தன் பக்கம் யக்ஞமூர்த்தியைச் சேர்த்து வைத்த, தனது பூஜாமூர்த்தியான காஞ்சிவரதனை ராமானுஜர், அவருக்குக் கொண்டு காட்டினார். அருளாளப் பெருமாள் எம்பெருமானாருக்கு திவ்யப் பிரபந்தங்களையும், வைணவச் சம்பிரதாய முறைகளையும் ராமானுஜர் விளக்கினார்.
மேலும் அனந்தாழ்வான், தொண்டனூர் நம்பி, மருதூர் நம்பி ஆகியோரை எம்பெருமானாருக்குச் சீடர்களாக்கினார். இந்த ஆசாரியன் எம்பெருமானாரின் திருநட்சத்திரம் கார்த்திகை பரணி. அவருக்கென்று ஒரு மடத்தை நிறுவித் திருமால் நெறி வளர வழி வகை செய்தார் ராமானுஜர். அவர் வழிகாட்டுதலின்படி அம்மடத்தை நிர்வகித்ததால், இவர் இரண்டாவது ராமானுஜர் என்று போற்றும்படியான புகழைப் பெற்றார்.