ஆன்மிகம்

மழையாய் பொழியும் அருள் வெள்ளம்

எஸ்.கோகுலாச்சாரி

எவ்வளவோ வணங்குகிறேன். பூஜை செய்கிறேன் இறைவன் அருள் எனக்குக் கிடைக்கவில்லையே என்று சொல்பவர்கள் ஏராளம்.

இறைவன் அருள் கொடுக்க வில்லையா? அல்லது அருள் கிடைக்கவில்லையா? கிடைத்தும் அனுபவிக்க முடியவில்லையா என்பதைச் சிந்திக்க வேண்டும்.

இப்பொழுது தமிழகத்தில் கனமழை பொழிந்துகொண்டிருக்கிறது. ஆறு குளங்கள் நிரம்பி வழிகின்றன. சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.

மழையால் மிகவும் பாதிப் படைந்தோம். எப்போது மழை நிற்கும் என்று தவியாய்த் தவித்தோம். இந்த நிலையிலும் வெயிலுக்காக யாரும் பிரார்த்தனை செய்ததாகக் கேள்விப்படவில்லை.

இரண்டு மாதங்களுக்கு முன் மழையை வேண்டிப் பல இடங்களில் வருண ஜபம் நடந்தது. நீர் நிலைகளில் நின்று ஆழிமழைக் கண்ணா பாசுரம் பல முறைகள் வாசிக்கப்பட்டது.

இதற்குக் காரணம் நிலத்தடி நீர் அதல பாதாளத்துக்குச் சென்றுவிட்டது. குடிநீருக்கு அல்லாட வேண்டியதுதான். பயிர் பச்சைகள் எல்லாம் வாடி வதங்கிப் போயின. மழை பொய்த்து விட்டது என்றெல்லாம் கூறி உயிர் நீரான மழை நீர் வேண்டித் தவித்தோம்.

வற்றாது சுரந்த வான்வளம் பொழிந்தபோது நாம் வெள்ளம் வந்துவிட்டது எனப் பதறுகிறோம். மழைக்குத்தான் அருள் என்று பெயர்.

இறைவன் வற்றாது வழங்கும் மழைத்திறனை அதாவது அருள்திறனைத் தாங்கும் வலு வேண்டும். இதனைத்தான் முதலாழ்வார்களில் ஒருவரான பூதத்தாழ்வார் அழகாகப் பாடுகிறார்.

மழை பெய்யும்போது ஏரி வெட்டித் தேக்கிக்கொள்ளலாம் என்று யாரும் ஏரியை வெட்டாமலோ, பராமரிக்காமலோ இருப்பதில்லை. மழை வருவது நிச்சயமில்லாவிட்டாலும், மழை வந்தால் அதனைத் தேக்கிக்கொள்ள ஏரி வெட்டி வைப்பதுபோல, இறைவனின் அருள் மழையை ஏற்றுக்கொள்ளத் தகுதியாக, மனதை ஏரியாக்கி வைத்துள்ளதாக, `ஏரியாம் வண்ணம் இயற்றும் `எனத் தனது பாசுரத்தில் குறிப்பிடுகிறார் ஆழ்வார்.

நிலத்தில் ஏரி வெட்டினால் மழை நீரைத் தேக்கலாம். மனத்தில் பக்தி எனும் ஏரி வெட்டினால் அருள் மழையைத் தாங்கலாம்.

நிலத்திலும் மனத்திலும் ஏரி வெட்டாததும் பராமரிக்காததும் யார் குறை?

SCROLL FOR NEXT