காஞ்சிபுரம் சங்கர மடத்துக்கு வெகு அருகில் 300 வருட பாரம்பரியம் கொண்ட ஒரு மசூதி உள்ளது. இந்த மசூதி தொடர்பான ஒரு சம்பவத்தை முன்னாள் ஜனாதிபதி ஆர்.வெங்கட்ராமன் என்னிடம் சொல்லியிருந்தார்.
இந்த மசூதியின் ஜமாத் அமைப்பினரும் மாவட்ட அதிகாரிகளும் மசூதியை வேறு ஒரு பொருத்தமான இடத்துக்கு மாற்றியமைப்பது என முடிவெடுத்தார்கள். இப்போதைய இடம் மடத்துக்கும் மசூதிக்கும் அசவுகரியமாக இருப்பதால் இந்த முடிவுக்கு வந்திருந்தார்கள். வரலாற்றுப் புகழ்பெற்றுள்ள மசூதிக்கு ஏரானமானோர் வந்துகொண்டிருப்பதாலும், அது போலவே மடத்திலும் பெருந்திரளானோர் கூடுவதாலும் போக்குவரத்தைப் பராமரிப்பது சிரமமான வேலையாகிவிட்டது.
எனவே புதிய இடத்தில் மசூதியை மறுபடியும் நிர்மாணித்துக் கொடுப்பது மடத்தின் பொறுப்பு எனவும் முடிவு செய்தார்கள். எப்படியோ இந்த விஷயம் பரமாச்சாரிய சுவாமிகளை எட்டியது. இந்த யோசனையை சுவாமிகள் மிகக் கடுமையாக எதிர்த்தார்கள். காலை நாலரை மணி ஆனதும் மசூதியிலிருந்து வரும் தொழுகைக்கான அழைப்புதான் தமது தெய்வீகக் கடைமைகளுக்காகத் தம்மைத் துயிலெழச் செய்யும் ஒலியாக அமைந்திருக்கிறது என்று சுவாமிகள் சொன்னார்கள். வேறு பல காரணங்களுக்காகவும் இந்த மசூதியை வேறொரு இடத்தில் நிர்மாணம் செய்வதை சுமாமிகள் எதிர்த்தார்கள்.
மாவட்ட அதிகாரிகளிடமும் மடத்து நிர்வாகிகளிடமும் தமது கருத்தைத் திட்டவட்டமாகத் தெரிவித்துவிட்டு பரமாச்சாரிய சுவாமிகள் மவுன விரதத்தில் ஆழ்ந்தார்கள். கடைசியில் மசூதியை இடம் மாற்றும் திட்டம் கைவிடப்பட்டது.
சுவாமிகளைச் சந்திப்பதற்காக நான் காஞ்சிபுரம் சென்றிருந்தபோது அந்தப் பழமையான மசூதியில் தொழுகை நடத்தினேன். சுமார் 50 மாணவர்கள் புனித குரானைக் கற்றுக்கொண்டிருந்தார்கள். நானும் அவர்களுடன் அமர்ந்து குரானில் இடம்பெற்றுள்ள சுராவான அல்ஹம்துவை ஓதச் சொன்னேன். காஞ்சிபுரத்தில், வேத பாராயணமும் குரான் ஓதுவதும் அருகருகே தொடர்ந்துகொண்டிருக்கும் காட்சியைக் காணும் பேறு பெற்றேன். இதில்தான் இந்திய சாரத்தின் மகிமை அடங்கியுள்ளது.
ராமர் விக்ரகத்தை மீட்ட எனது கொள்ளுத்தாத்தா
ராமேஸ்வரத்தில் நடைபெறும் சீதா திருமண வைபவத்துக்காக என் கொள்ளுத் தாத்தா தெப்பம் கட்டிக் கொடுப்பதுண்டு. அழகு ஜொலிக்கும் தங்க நகைகளால் அலங்கரிக்கப்பட்ட ராமர் விக்ரகத்தை அந்தத் தெப்பத்தில் வைத்து, புனிதக் குளமான ராம தீர்த்தம் நடுவில் உள்ள மண்டபத்தைச் சுற்றி வலம் வர வைப்பது வழக்கம். அந்தக் குளம் மிக ஆழமானது. அன்றும் இன்றும் ஒட்டு மொத்த ராமேஸ்வரமுமே அந்த விழாவைக் காணத் திரண்டிருக்கும்.
ஒரு வருடம், அந்தத் தெப்பம் வலம் வரும் காட்சியை என் கொள்ளுத் தாத்தா பார்த்துக்கொண்டிருந்தார். அப்போது ஓர் அசம்பாவிதம் நிகழ்ந்தது. ராமர் விக்ரகம் தெப்பத்திலிருந்து கவிழ்ந்து, குளத்தில் மூழ்கிவிட்டது. யாரும் சொல்லாமல், கொஞ்சம்கூடத் தயங்காமல் உடனடியாக என் கொள்ளுத் தாத்தா குளத்தில் குதித்தார். அந்த விக்ரகத்தை மீட்டுக் கொண்டுவந்தார். ராமேஸ்வரமே அந்தக் காட்சியைக் கண்டு அதிசயித்தது. ஆனந்தமடைந்தது. அந்த ஆண்டிலிருந்து எங்கள் குடும்பத்திற்கு முதல் மரியாதை அளிக்கும் மரபை ஆலயக் குருக்கள் ஆரம்பித்து வைத்தார்கள்.
ராமர் விக்ரகம் மீட்கப்பட்டதற்காகவும் எங்கள் குடும்பத்தின்மீது இறைவனின் அருளைப் பொழிய வைத்ததற்காகவும், ராமேஸ்வரம் மசூதியில் விசேஷத் தொழுகை நடைபெற்றது.
இந்த நிகழ்வை, மனித சமுதாயத்தின் சகோதரத்துவத்துக்கும் நல்லிணக் கத்துக்கும் ஒரு பிரகாசமான எடுத்துக்காட்டாக நான் கருதுகிறேன். அதிலும் குறிப்பாக இன்றைய நிலவரத்தில் அது ஓர் அற்புத உதாரணம். நாம் எங்கிருக்க நேர்ந்திருந்தாலும், இப்படிப்பட்ட சகோதரத்துவத்தை வளர்த்துக்கொள்வதற்காக நம்மால் ஒருவருக்கொருவர் உதவிக்கொள்ள முடியாதா?
(Ignited Minds நூலில் அமரர் அப்துல் கலாம்) தமிழில்: மு.சிவலிங்கம்