ஆன்மிகம்

நேரம் காட்டும் கல் கடிகாரம்

ஆர்.அனுராதா

அடி முடி காணும் போட்டியில் சிவனிடம் பொய் சொன்ன தாழம்பூ சிவ பூஜையில் இருந்து விலக்கி வைக்கப்பட்டது. தாழம்பூவைப் பொய் சாட்சியாக்கிய பிரும்மாவை பூலோகத்தில் பிறந்து தனக்கு பூஜை செய்து தன் முடியைக் கண்டு சாப நிவர்த்தி பெறக் கட்டளையிட்டார் சிவன்.

கரபுரத்தில், சிவ பூசகர் சிவனாதன், நயனாநந்தினி தம்பதியர்க்கு கடவுள் அருளால் சிவசர்மன் என்ற பெயரோடு பிரும்மாவே பிறந்து வளர்ந்ததாகக் கூறப்படுகிறது. ஏழு வயதாகும்போது தந்தை காலமாக, பூஜை செய்ய வேண்டிய கடமை மகனுக்கு வந்தது. இறைவன் மறுநாள் பாட்டன் வடிவில் வந்து ஒரு முகூர்த்த காலத்திற்குள் அனைத்துத் தகுதிகளைக் கோயிலுக்கு அனுப்பினார்.

சிறுவனான சிவசர்மன் இறைவனிடம் சென்று உனக்கு அபிஷேகம் செய்ய “எந்தையே எமக்கு எட்டவில்லையே உம்முடி” என வேண்ட, இறைவன் தலைசாய்த்துக் காட்சி தந்தார், சாய்ந்த சிவலிங்க பாணத்திற்குச் சிறுவன் செய்த அபிஷேகம் பூஜை ஆகியவற்றை சிவபெருமான் ஏற்றுக்கொண்டார், சிவனின் முடியைக் கண்ட விரிஞ்சனான பிரும்மன் தன் சாபம் நீங்கினான். ஆதலால் விரிஞ்சிபுரமான இவ்வூரில் சிவலிங்கம் தலை சற்றே சாய்ந்து இருக்கும்.

சிவன் முற்பிறவிச் செய்கையால் இப்பிறவியில் அல்லல்படுவோர் “விருச்சிக மதியின் கடைஞாயிறு வந்து வணங்குவோர்க்கு இம்மை, மறுமையில் நற்கதி அருள்வோம்” என்றதாக, எல்லப்ப நாவலரின் திருவிரிஞ்சை புராணம் குறிப்பிடுகிறது

வணிகனுக்கு வழித்துணையான ஈசன்

தனபாலன் என்னும் வணிகனுக்கு வழித்துணையாக மிளகுப் பொதிகளை வண்டிகளில் ஏற்றிச் சென்று மிளகுப் பொதியையே கூலியாகப் பெற்றுக்கொண்டதால், மார்க்கசகாயீஸ்வரர், மார்க்கபந்து, வழித்துணைநாதர் என்ற பெயர்களும் இத்திருத்தல ஈசனுக்கு உண்டு.

இறைவனின் வலப்புறம் இரண்டாம் பிரகாரத்தில் மரகதவல்லி அம்பாளும், சுற்றுப் பிரகாரத்தில் பிரம்மபுரீஸ்வரர், சிந்தூரகணபதி, 1008 சிவலிங்கம், நடராஜர் காலபைரவர், ஏரம்ப வினாயகர், தண்டபாணி, சுவர்ணகணபதி, வள்ளலார், நவக்கிரகம், ஐயப்பன், ஆறுமுகர், யுகலிங்கம்,  பஞ்சமுக நிருத்தன கணபதி நால்வர், சப்தமாதர்கள், லக்ஷ்மி சரஸ்வதி வாசுதேவப் பெருமாள் பிரும்மா, துர்கை சண்டிகேஸ்வரர் சன்னதிகள் உள்ளன. இத்தலத்து முருகன் மீது அருணகிரி நாதர் பதினைந்து திருப்புகழ் பாடியுள்ளார்,

பிரும்ம தீர்த்தம், சிம்ம தீர்த்தம், சோம தீர்த்தம், சூலி தீர்த்தம் ஆகிய தீர்த்தங்கள் உள்ளன. கவுரி உண்டாக்கிய கவுரி தீர்த்தம் சிம்மத்தின் முகப்புடைய நுழைவாயில் உடைய தால் சிம்ம தீர்த்தம் எனப்படுகிறது. இத்திருக்குளத்தில் ஆதிசங்கரர் பீஜாட்சர மந்திரத்தை பிரதிஷ்டை செய்ததாகச் சொல்லப்படுகிறது.

கார்த்திகைக் கடைஞாயிறு பூஜை

கார்த்திகை மாதக் கடைசி சனிக்கிழமை நள்ளிரவு பன்னிரண்டு மணிக்கு சிம்ம குளத்திற்குப் பூஜை செய்வர். மகப்பேறு வேண்டும் பெண்கள் குளத்தில் இறங்கி முழுகி மண்டபத்தில் கண்மூடி ஈரஆடையுடனும் இறைச் சிந்தனையுடனும் இருப்பார்கள். அரை மணி நேரத்திற்குள் மங்கலப் பொருட்களைக் கனவில் கண்டு எழுந்து சென்று கையில் இருக்கும் தேங்காய், பழத்தால் அர்ச்சனை செய்து திரும்புவார்கள். அவர்களே அடுத்த வருடம் குழந்தையுடன் தரிசனம் செய்ய வருவார்கள் என்பது ஐதீகம்.

குறித்த நேரத்தில், நேரம் தவறாமல் பூஜை செய்வதற்காக இக்கோயிலில் புராதனமான கல்கடிகாரம் ஒன்று உள்ளது. இது இக்கோயிலின் தொன்மைக்குச் சான்று.

SCROLL FOR NEXT