அருள்மிகு சோமாஸ்கந்தர் சுவாமி எழுந்தருளிய தேரை வடம் பிடித்து இழுத்துச் செல்லும் பக்தர்கள் . 
ஆன்மிகம்

லால்குடி சப்தரீசுவரர் கோயில் பங்குனி தேரோட்டம்; 5 தேர்களை வடம் பிடித்து இழுத்த பக்தர்கள்

ஜெ.ஞானசேகர்

திருச்சி மாவட்டம் லால்குடி அருள்மிகு சப்தரீசுவரர் கோயில் பங்குனி தேரோட்டம் இன்று காலை நடைபெற்றது. இதில், 5 தேர்கள் பக்தர்களால் வடம் பிடித்து இழுக்கப்பட்டன.

லால்குடியில் உள்ள அருள்மிகு சப்தரீசுவரர் கோயில், சப்தரிஷிகளுக்கும் முக்தி தந்த தலமாக விளங்குகிறது. இந்தக் கோயிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதத்தில் தேரோட்டம் நடைபெறும். அந்த வகையில், நிகழாண்டு பங்குனி திருவிழா மார்ச் 17-ம் தேதி விக்னேசுவர பூஜையுடன் தொடங்கியது.

திருவிழாவின் முக்கிய நிகழ்வான பங்குனி தேரோட்டம் இன்று (மார்ச் 26) காலை 8.30 மணியளவில் தொடங்கியது. மலர்களால் அலங்கரிக்கப்பட்ட 5 தேர்களில், முதல் தேரில் அருள்மிகு விநாயகர், 2-வது தேரில் அருள்மிகு சுப்பிரமணியர் ஆகியோர் திருவீதி உலா வந்தனர். இவர்களைத் தொடர்ந்து, மிகப் பழமையான பெரிய தேரில் அருள்மிகு சோமாஸ்கந்தர் சுவாமியும், 4-வது தேரில் அருள்மிகு பெருந்திரு பிராட்டியார் அம்மனும், 5-வது தேரில் அருள்மிகு சண்டிகேசுவரரும் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேர்களை வடம் பிடித்து இழுத்தனர். மேல வீதி, வடக்கு வீதி, கீழ வீதி, தெற்கு வீதி ஆகிய தேரோடும் வீதிகளில் செல்லும் தேர்கள், இன்று மாலை 6 மணிக்கு நிலையை அடையும்.

ஏப்.11-ம் தேதி அருள்மிகு சண்டிகேசுவரர் திருவீதி உலாவுடன் பங்குனி திருவிழா நிறைவடைகிறது. விழா ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலர் சோ.மனோகரன், உதவி ஆணையர் செ.மாரியப்பன் மற்றும் கோயில் பணியாளர்கள் உள்ளிட்டோர் செய்துள்ளனர்.

SCROLL FOR NEXT