ஆன்மிகம்

பங்குனி உத்திரத்தில் அழகன் முருகனின் தரிசனம்! 

வி. ராம்ஜி

பங்குனி உத்திரத்தை முன்னிட்டு, முருகன் கோயில்களில் சிறப்பு வழிபாடு மற்றும் பூஜைகள் விமரிசையாக நடைபெறும். இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்வார்கள்.

பங்குனி உத்திர நன்னாளை, முருகப்பெருமான் கோயில்களில் சிறப்பாகக் கொண்டாடுவது வழக்கம். அந்த நாளில், ஆறுபடைவீடுகள் மட்டுமின்றி எல்லா முருகன் கோயில்களிலும் வழிபாடுகளும் பூஜைகளும் விமரிசையாக நடைபெறும். முருகக் கடவுள் சந்நிதி கொண்டிருக்கும் அனைத்து ஆலயங்களிலும் சிறப்பு வழிபாடுகளும் பூஜைகளும் விமரிசையாக நடந்தேறும்.

இந்த நாளின் போது, பக்தர்கள் முருகக்கடவுளுக்கு பாலபிஷேகம் செய்து வேண்டிக் கொள்வார்கள். இன்னும் சில ஆலயங்களில், காவடி எடுத்தும் பால் குடங்கள் ஏந்தியும் பக்தர்கள் கூட்டமாக வந்து, ’வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா’ என்கிற கோஷங்களை எழுப்பி வழிபடுவார்கள்.
திண்டுக்கல் மாவட்டம் பழநியில், பங்குனி உத்திர வழிபாடு சிறப்புற நடைபெறும். இதையொட்டி சுவாமிக்கு சிறப்பு அபிஷேகமும் பூஜைகளும் நடைபெறும். அப்போது ஏராளமான பக்தர்கள் தரிசித்து வழிபடுவார்கள்.

இதேபோல், மதுரை திருப்பரங்குன்றத்திலும் திருச்செந்தூர் தலத்திலும் காலையிலேயே நடை திறந்ததும் விசேஷ அபிஷேக ஆராதனைகள் செய்யப்படும். சுவாமி வீதியுலா புறப்பாடும் விமரிசையாக நடைபெறும். இதில் மதுரை மற்றும் சுற்றுவட்டாரத்தில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் மேற்கொள்வார்கள்.

சுவாமிமலை, திருத்தணி, திருச்செந்தூர், பழமுதிர்ச்சோலை என்று மட்டுமில்லாமல், அனைத்து முருகப் பெருமான் ஆலயங்களிலும் விழாக்கள் விமரிசையாக நடைபெறும். சென்னை வடபழநி முருகன் கோயிலில் சர்வ அலங்காரத்தில் அழகு கொஞ்சக் காட்சி தருவார் வடபழனி முருகக் கடவுள். இதையொட்டி நீண்ட வரிசையில் நின்று முருகப்பெருமானை தரிசித்துச் சிலிர்ப்பார்கள் பக்தர்கள்.

திருச்சி அருகில் உள்ள வயலூர் ஸ்ரீசுப்ரமண்ய சுவாமி திருக்கோயிலில் பங்குனி உத்திர சிறப்பு பூஜைகளும் வழிபாடுகளும் கூடுதல் விமரிசையாக நடைபெறும். இதில் கலந்து கொண்டு தரிசிக்க, ஏராளமான பக்தர்கள் பாதயாத்திரையாக வந்து, சுவாமி தரிசனம் செய்வார்கள். தங்கள் நேர்த்திக்கடனை வந்து செலுத்துவார்கள். மாலையிலும் சிறப்பு ஆராதனைகள், சுவாமி வீதியுலா புறப்பாடு முதலான நிகழ்ச்சிகள் நடைபெறும்.

வயலூர் திருத்தலம் என்றில்லாமல், இன்னும் ஏனைய கோயில்களிலும் பங்குனி உத்திர நாளில், பாதயாத்திரையாக வந்து முருக தரிசனம் செய்யும் பக்தர்களும் உண்டு. விரதம் மேற்கொண்டு முருக வழிபாடு செய்பவர்களும் உண்டு. வருகிற 28ம் தேதி பங்குனி உத்திர நாளில், நம்மை வாழ்வின் உயரத்துக்குக் கொண்டு செல்லும் கந்தனை தரிசிப்போம். கந்தசஷ்டி கவசம் பாராயணம் செய்து பூஜிப்போம்.

SCROLL FOR NEXT