ஆன்மிகம்

பங்குனி புனர்பூசம்;  நந்திதேவருக்கு திருக்கல்யாணம்!

வி. ராம்ஜி


பங்குனி புனர்பூச நன்னாளில் நந்திதேவருக்கு திருக்கல்யாணம் நடைபெறும். திருக்கல்யாண வைபவத்தைத் தரிசித்தால், தடைப்பட்ட திருமணம் விரைவில் நடந்தேறும். அன்றைய நாளில், அருகில் உள்ள சிவாலயத்துக்குச் சென்று நந்திதேவருக்கு அருகம்புல்லும் செவ்வரளியும் சார்த்தி வேண்டிக்கொண்டாலும் பலன் கிடைக்கும் என்கிறார்கள் ஆச்சார்யர்கள்.

சிவபெருமானின் வாகனமான நந்திதேவரைத்தான் ஆலயத்தில் நுழையும்போது முதலில், பிரதானமாகத் தரிசிக்கலாம். முக்கியமான விழாக்களிலும் பிரதோஷ பூஜைகளிலும் நந்தியம்பெருமானுக்கு சிறப்பு அலங்காரங்களும் பூஜைகளும் அபிஷேக ஆராதனைகளும் நடைபெறும். ஒவ்வொரு பிரதோஷத்திலும் ஆலய விழாக்களிலும் நந்திதேவருக்கு விசேஷ பூஜைகள் நடைபெறும்.

பங்குனி மாத புனர்பூச நன்னாளில் நந்திதேவருக்கும் சுயம்பிரகாசைக்கும் திருமழபாடியில் திருமணம் நடந்தது என்று விவரிக்கிறது புராணம். நந்திதேவரை, தன் மகனைப் போல பாவித்தார் சிவனார். நண்பனைப் போல் பிரியம் வைத்தார். உண்மையான பக்தன் என்று பூரித்தார். அப்பேர்ப்பட்ட நந்திதேவருக்கு கோலாகலமாக திருமணம் செய்விக்க திருவுளம் கொண்டார் திருவையாறு ஐயாறப்பன்.

புலிக்கால் முனிவரான வியாக்ரபாத முனிவரின் மகள் சுயம்பிரகாசைக்கும் ஜப்பேசன் என்ற பெயருடைய நந்தி தேவருக்கும் சிறப்பாகத் திருமணம் செய்விக்க எண்ணம் கொண்டார் ஐயாறப்பன்.

இதற்கு எல்லாரும் அவரவர் பங்குக்கு திருமண விஷயங்களை ஏற்றுக்கொள்வதாகத் தெரிவித்தார். பழங்களும் பூக்களும் நெய்யும், குண்டலங்களும் கொடுத்ததுடன் வேதியர்களையும் அனுப்பி திருமணத்தை சிறப்பாக நடத்த உதவினார்கள். இப்படி திருமணம் நடத்தி சிறப்பித்தவர்களுக்கு நெகிழ்ச்சியுடன் நன்றி கூறினார் நந்திதேவர். இந்த நன்றி கூறும் திருவிழாவை ‘ஏழூர் பெருவிழா’ என்பார்கள்.

ஏழு ஊர்களுக்கும் சென்று நன்றி கூறி, அவர்களின் மரியாதைகளை ஏற்றபின், இரண்டு பல்லக்குகளுடன் அந்த ஏழு ஊர்களில் அமைந்துள்ள பெருமான்களும் பிராட்டியும் உடன் வந்து திருவையாறு அடைவார்கள். பிறகு, எல்லா ஊர் பெருமான்களும் கல்யாண தம்பதிகளிடமும், பிரபஞ்ச தம்பதிகளான சிவனாரிடமும் பார்வதிதேவியிடமும் நமஸ்கரித்து விடைபெற்றுச் செல்வார்கள்!

முதல் ஊர் திருப்பழனம், அடுத்து திருச்சோற்றுத் துறை, தொடர்ந்து திருவேதிக்குடி, திருக்கண்டியூர், திருப்பூந்துருத்தி, திருநெய்த்தானம், இறுதியாக திருவையாறு என ஏழு ஊர்களுக்கும் செல்வது தான் ஏழூர்ப் பெருவிழா. இந்த ஊர்வலத்துடன் பக்தர்கள், இசை வித்வான்கள், நடனக்காரர்கள், நாயனக் காரர்கள் என அனைவரும் செல்வார்கள்.

எல்லா இடங்களிலும் இசை, நாதஸ்வரம், குசல விசாரிப்புகள், விருந்து உபசாரம், கேளிக்கை, கொண்டாட்டம் என உற்சாகமாகவும் கோலாகலமாகவும் நந்தியெம்பாருமானுக்கு நடைபெறும் இந்தத் திருவிழாவைக் காண ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள்!
சென்னை வேளச்சேரியை அடுத்து உள்ளது பள்ளிக்கரணை. இது, வியாக்ரபாதர் தவமிருந்து வழிபட்ட அற்புதமான திருத்தலம். இங்கு உள்ள சிவனாரின் திருநாமம் ஸ்ரீஆதிபுரீஸ்வரர். வியாக்ரபாதருக்கும் பதஞ்சலி யோக சூத்திரம் அருளிய பதஞ்சலி முனிவருக்கும் இங்கே உள்ள ஆலயத்தில் சிலைகள் உள்ளன. இவர்களுக்கும் குரு வார நாளில், சிறப்பு பூஜைகளும் வழிபாடுகளும் நடைபெறுகின்றன.

மேலும் ராகு கேது பரிகாரமாகவும் திகழும் ஸ்ரீஆதிபுரீஸ்வரர் கோயிலில், வருடந்தோறும் நந்திதேவர் திருக்கல்யாண வைபவம் பங்குனி மாதத்தில் புனர்பூச நன்னாளில் விழா எடுத்து விமரிசையாக நடைபெறும்.

பங்குனி புனர்பூச நட்சத்திர நாளில், மாலை துவங்கி இரவு வரை நடைபெறும் நந்திதேவர் திருக்கல்யாண வைபவத்தில், கலந்துகொண்டு தரிசித்துப் பிரார்த்தித்தால், தடைப்பட்ட திருமணம் விரைவில் நடந்தேறும் என்கிறார்கள் பக்தர்கள்!

SCROLL FOR NEXT