ஆன்மிகம்

மனதில் நிம்மதி தரும் குணசீலம் பெருமாள்!   

வி. ராம்ஜி

திருப்பதிக்கு இணையான தலம் என்று போற்றப்படும் குணசீலம் ஸ்ரீபிரசன்ன வேங்கடாசலபதி கோயிலில், பங்குனி சனிக்கிழமையையொட்டி சிறப்பு சிறப்பு பூஜைகளும் வழிபாடுகளும் நடைபெறும். சனிக்கிழமையில் பெருமாளை, ஸ்ரீபிரசன்ன வேங்கடேசப் பெருமாளை கண்ணாரத் தரிசிப்போம். குணசீலம் பிரசன்ன வேங்கடேச பெருமாளை மதியம் உச்சிகால பூஜையில் தரிசித்து, வேங்கடவனை பிரார்த்திப்போம். மனக்கிலேசங்களையெல்லாம் போக்குவார். மனதில் நிம்மதியையும் ஆனந்தத்தையும் தந்தருளுவார்.

திருச்சியில் இருந்து நாமக்கல் செல்லும் வழியில் சுமார் 28 கி.மீ. தொலைவில் உள்ளது குணசீலம் திருத்தலம். ஆற்றங்கரையில் அமைந்துள்ள அற்புதமான ஆலயம். அமைதியுடனும் சாந்நித்தியத்துடனும் திகழும் ஒப்பற்ற திருத்தலம் என்று போற்றுகின்றனர் ஆச்சார்யப் பெருமக்கள்.
குணசீல மகரிஷி தவமிருந்து வணங்கி வழிபட்டு, வரம் பெற்ற திருத்தலம் இது. இங்கே மகரிஷியின் வேண்டுகோளுக்கு இணங்க, திருமலை வேங்கடவனே வந்து குடியமர்ந்து, செங்கோலுடன் ஆட்சி நடத்துவதாக ஐதீகம். குணசீல மகரிஷியின் வேண்டுகோளை ஏற்று, திருப்பதி ஏழுமலையான் இங்கே எழுந்தருளி திருக்காட்சி தந்தருளினார். இதில் நெகிழ்ந்து நெக்குருகிய மகரிஷி, ‘பெருமானே... என்னைப் போலவே இந்த தென்பகுதி மக்களின் மனக்கிலேசங்களைப் போக்கும் வகையிலும் மனதில் உள்ள குழப்பங்களை நீக்கும் வகையிலும் இங்கேயே இந்தத் தலத்தில் தங்கியிருந்து, எல்லா மக்களுக்கும் அருள்பாலிக்க வேண்டும்’ என வேண்டுகோள் விடுத்தார்.

அதன்படி, திருப்பதி பெருமாள், இங்கேயே இருந்தபடி இன்றளவும் குணசீலத்தில் இருந்துகொண்டு, அருளாட்சி செய்து வருகிறார். திருப்பதி பெருமாளைப் போலவே அழகும் கனிவும் கருணையும் அருளும் பொங்கித் ததும்பும் திருவடிவத்துடன் அற்புதமாகக் காட்சி தருகிறார் பெருமாள்.

அற்புதத் திருக்கோலத்தில் காட்சி தரும் ஸ்ரீபிரசன்ன வேங்கடாசலபதி தன் கரத்தில் செங்கோல் ஏந்தியபடி காட்சி தந்து சேவை சாதிக்கிறார்.

பௌர்ணமி சிறப்பு பூஜையும் உத்திர வழிபாடும் இங்கே சிறப்புற கொண்டாடப்படுகின்றன. திருவோண நட்சத்திர நாளிலும் விசேஷ வழிபாடுகள் நடைபெறுகின்றன. இதையொட்டி திருச்சி, முசிறி, குளித்தலை, நாமக்கல் முதலான ஊர்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு பெருமாளை தரிசிப்பார்கள்.

பங்குனி மாத சனிக்கிழமையில், பெருமாளை தரிசிப்போம். குணசீலம் பிரசன்ன வேங்கடேச பெருமாளை மதியம் உச்சிகால பூஜையில் தரிசித்து, வேங்கடவனை பிரார்த்திப்போம். மனக்கிலேசங்களையெல்லாம் போக்குவார். மனதில் நிம்மதியையும் ஆனந்தத்தையும் தந்தருளுவார்.

SCROLL FOR NEXT