மன்னார்குடியில் இன்று ராஜகோபால சுவாமி கோயில் வெண்ணைத்தாழி திருவிழா நடைபெற்றது.
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி ராஜகோபாலசுவாமி கோயில் பங்குனித் திருவிழா கடந்த மார்ச் 4-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.
ஒவ்வொரு நாள் இரவும் சுவாமி வீதி உலா நிகழ்ச்சிகள் பல்வேறு வாகனங்களில் நடைபெற்ற நிலையில், நேற்று முன்தினம் ராஜகோபால சுவாமி யானை வாகனத்தில் வீதி உலா நிகழ்ச்சி நடைபெற்றது. நேற்று இரவு கோரதம் நடைபெற்றது. சத்தியபாமா ருக்மணி சமேதராக ராஜகோபால சுவாமி கோரதத்தில் எழுந்தருளி வீதி உலா சென்றார்.
இன்று (மார்ச் 19) காலை பங்குனித் திருவிழாவின் முக்கிய நிகழ்வான வெண்ணைத்தாழி திருவிழா தொடங்கியது. அதையொட்டி, காலை 7 மணி அளவில் ராஜகோபாலசுவாமி வெண்ணெய் திருடும் கண்ணன் அலங்காரத்தில் வெள்ளிக் குடத்தைக் கையில் ஏந்தியவாறு பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
அதனைத் தொடர்ந்து, கோயிலின் நான்கு வீதிகள் மற்றும் மேல ராஜவீதி பந்தலடி வழியாக வெண்ணைத்தாழி மண்டபத்துக்கு காலை 11 மணி அளவில் வந்தடைந்தார். இந்த வீதி உலாவின்போது மன்னார்குடி மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களிலிருந்து பல்லாயிரக்கணக்கான மக்கள் திரண்டு வந்து சுவாமி மீது வெண்ணெய் வீசி வழிபாடு செய்தனர்.
வெண்ணைத்தாழி மண்டபத்தில் ராஜகோபால சுவாமிக்கு செட்டியார் அலங்காரம் செய்யப்பட உள்ளது. அதனைத் தொடர்ந்து, இரவு வெட்டும் குதிரை வாகனத்தில் ராஜகோபால சுவாமி வீதியுலா நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
தொடர்ந்து, நாளை தேரோட்ட விழா நடைபெறுகிறது. வெண்ணைத்தாழி திருவிழாவையொட்டி வர்த்தக நிறுவனங்கள், தன்னார்வலர்கள் ஆங்காங்கே பக்தர்களுக்கு நீர் மோர் மற்றும் அன்னதானம் வழங்கினர். இதன் காரணமாக மன்னார்குடி நகரம் முழுவதும் விழாக்கோலம் பூண்டுள்ளது.