ஆன்மிகம்

பிரமாண்ட நாயகன் திருப்பதி ஏழுமலையான்! 

வி. ராம்ஜி

வைணவத் தலங்களில், இணையற்ற தனித்துவம் மிக்க தலமாகப் போற்றப்படுகிறது திருப்பதி ஸ்ரீவேங்கடமுடையான் திருக்கோயில். வாழ்வில் ஒருமுறையேனும் திருப்பதிக்கு வரவேண்டும், வந்து ஏழுமலையானைத் தரிசிக்க வேண்டும் என்கின்றன வைணவத்தைப் போற்றுகின்ற நூல்கள்.

‘திருப்பதிக்கு வந்தால் திருப்பம் நிச்சயம்’ என்றொரு வாசகம், பக்தர்களிடையே பிரபலம். திருப்பதி திருத்தலம் ஆச்சார்யர்களிடமும் மக்களிடமும் தொழில் செய்வோரிடமும் என ஒவ்வொரு விதமாக பின்னிப் பிணைந்து வாழ்வில் இரண்டறக் கலந்துள்ளது.

திருப்பதியும் பிரமாண்டம். அதைப் பற்றிய எந்தத் தகவல்களாக இருந்தாலும் அவையும் பிரமாண்டம். ஏழுமலையானுக்கு இருகின்ற நகைகளின் மதிப்பு சுமார் ரூ.1000 கோடிக்கும் மேலே என்கிறார்கள் ஆச்சார்யர்கள். இவருடைய நகைகளை வைத்துக் காப்பதற்கு இடமும் இல்லை; பெருமாளுக்கு அத்தனை ஆபரணங்களையும் சாத்துவதற்கு நேரமும் இல்லை. அதனால் ஆண்டுக்கு ஒரு முறை உபரியான நகைகளை விளம்பரப்படுத்தி ஏலம் விடுவார்கள்.

ஏழுமலையான், கழுத்தில் அணிந்திருக்கும் சாளக் கிராம தங்கமாலை சுமார் 12 கிலோ எடை கொண்டது. இந்த மாலையைச் சார்த்துவதற்கு மூன்று பட்டாச்சார்யர்கள் ள் தேவை. சூரிய கடாரி ஐந்து கிலோ எடை கொண்டது. பாதக் கவசம் 375 கிலோ எடையுள்ளது. கோயிலில் இருக்கும் ஒற்றைக்கல் நீலம், உலகில் வேறெங்கும், எவரிடமும் கிடையாது. இதன் மதிப்பு மட்டுமே ரூ.100 கோடி என்கிறார்கள்.

மூலவர் ஏழுமலையானைப்போலவே, அபிஷேக அலங்காரம் செய்து பார்க்க ஒரு சிறிய விக்கிரகம் (கி.பி.966 ஜூன் 8ம் தேதி) வெள்ளியால் செய்யப்பட்டது. இந்த விக்கிரகத்துக்குப் பல்லவ குறுநில மன்னன் சக்திவிடங்கனின் பட்டத்தரசி காடவன் பெருந்தேவி நகைகளைத் தந்து, பூஜைக்கு அறக்கட்டளையும் செய்து வைத்ததாகத் தெரிவிக்கின்றன திருப்பதி கோயிலின் சரித்திர ஆய்வுகள். முதலாம் குலோத்துங்க சோழன் திருமலைக்கு வந்து காணிக்கை செலுத்தியுள்ளார் என்று குறிப்புகள் தெரிவிக்கின்றன. .

பொதுவாகவே பெருமாளுக்கு உகந்தது துளசி என்பதை அறிவோம். ஆனால், ஏழுமலையானுக்கு வில்வத்தாலும் அர்ச்சனை உண்டு. வெள்ளிக் கிழமைகளிலும், மார்கழி மாதத்திலும் வில்வார்ச்சனை செய்யப்படுகிறது. சிவராத்திரி அன்று திருப்பதியில் ‘க்ஷேத்ர பாலிகா’ என்ற உற்ஸவம் நடைபெறும். அன்றைய நாளில் உற்ஸவப் பெருமாளுக்கு வைரத்தில் விபூதி நெற்றிப்பட்டை சாத்தப்பட்டு, திருவீதி உலா நடைபெறும் என்கிறார்கள்.

திருப்பதி அலர்மேல்மங்கைத் தாயாருக்கு உள்பாவாடையானது கத்வால் என்ற ஊரில், பருத்தியில் தயார் செய்யப்படுகிறது. செஞ்சு இனத்தைச் சேர்ந்த நெசவாளர்கள் இதை பயபக்தியுடனும் விரதம் மேற்கொண்டும் நெய்து வழங்குகிறார்கள்.

ஸ்ரீவில்லிப்புத்தூர் கோயிலில் இருந்து ஸ்ரீஆண்டாள் அணிந்த மாலைகள் திருப்பதிக்கு கொண்டு வரப்பட்டு ஏழுமலையானுக்கு சாத்தப்படுகின்றன.

விழாக்களுக்கும் விசேஷங்களுக்கும் திருப்பதி திருத்தலத்தில் குறைவே இல்லை. வைகுண்ட ஏகாதசி, ஸ்ரீராம நவமி, ஜன்மாஷ்டமி போன்ற பண்டிகைகள் அனைத்தும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகின்றன. ஆண்டுதோறும் பிப்ரவரி மாதம் ரதசப்தமி (மகா சுத்த சப்தமி) என்ற திருவிழா மிகவும் விசேஷமானது!

அனைத்துக்கும் மகுடம் சூட்டும் விதமாக, செப்டம்பர் மாதம் நடைபெற உள்ள புரட்டாசி பிரம்மோற்ஸவம்தான் திருப்பதியில் நடைபெறும் மிக முக்கியமான விழா. பிரம்மாவே திருப்பதி தலத்துக்கு வந்து முன்னின்று இந்த உற்ஸவத்தை நடத்துவதாக ஐதீகம்!

அதனால்தான், திருப்பதி எப்போதுமே பிரமாண்ட தலமாகவும் அங்கே சேவை சாதித்துக் கொண்டிருக்கும் திருவேங்கடவன் பிரமாண்ட நாயகனாகவும் போற்றப்படுகிறார் என்று சொல்லிச் சிலிர்க்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.

SCROLL FOR NEXT