பங்குனி மாதத்தின் வளர்பிறை ஏகாதசியில் மகாவிஷ்ணுவை விரதம் இருந்து வழிபட்டுப் பிரார்த்தனை செய்தால் நம் வாழ்வில் வளமும் நலமும் தந்தருளுவார் என்று போற்றுகின்றனர் பக்தர்கள்.
மாதந்தோறும் அமாவாசையும் பெளர்ணமியும் வரும். அமாவாசையில் இருந்து பெளர்ணமியை நோக்கி வரும் நாட்களில், ஏகாதசி திதி வரும். இதை வளர்பிறை ஏகாதசி என்பார்கள். அதேபோல், பெளர்ணமியில் இருந்து அமாவாசை நோக்கி வருகின்ற நாட்களில் ஏகாதசி திதி வரும். இதனை தேய்பிறை ஏகாதசி என்பார்கள்.
வளர்பிறை ஏகாதசியை சுக்ல பட்ச ஏகாதசி என்பார்கள். தேய்பிறை ஏகாதசியை கிருஷ்ண பட்ச ஏகாதசி என்பார்கள். மாதந்தோறும் ஏகாதசி வந்தாலும் மார்கழி மாதத்தில் வரும் ஏகாதசி வைகுண்ட ஏகாதசி என்று போற்றப்படுகிறது. வணங்கப்படுகிறது. ஒவ்வொரு மாதமும் விரதம் இருந்து பெருமாளை தரிசித்தாலும் மார்கழி வைகுண்ட ஏகாதசியில் விரதம் இருப்பதும் பெருமாளை ஸேவிப்பதும் மகா புண்ணியம் என்று போற்றுகின்றனர் ஆச்சார்யப் பெருமக்கள்.
இதேபோல், பங்குனி மாதத்தில் வளர்பிறை மற்றும் தேய்பிறையில் வரும் ஏகாதசியும் விசேஷமானவை. தேய்பிறையில் வரும் ஏகாதசியை விஜயா ஏகாதசி என்பார்கள். வளர்பிறையில் வரும் ஏகாதசியை ஆமலகீ ஏகாதசி என்பார்கள் என விவரிக்கிறார் ஸ்ரீநிவாஸ பட்டாச்சார்யர்.
பங்குனி மாத வளர்பிறையில் வரும் ஏகாதசியான ஆமலகீ ஏகாதசி நன்னாளில், விரதம் மேற்கொள்ளும் பக்தர்கள் ஏராளம். இந்தநாளில், விரதம் மேற்கொண்டு, வீட்டில் நெல்லிமரம் இருந்தால் சுத்தம் செய்து, நீர் தெளித்து, சந்தனம் குங்குமமிட்டு சுற்றி வந்து நமஸ்கரிக்க வேண்டும் என்றும் நெல்லி மரத்தடியில், தூய்மை செய்யப்பட்ட இடத்தில், ஸ்ரீபரசுராமரின் திருவடிவத்தை வரைந்து கலசப் பிரதிஷ்டை செய்து பிரார்த்தனை செய்பவர்களும் உண்டு என்கிறார் ஸ்ரீநிவாஸ பட்டாச்சார்யர்.
நெல்லி மரத்தை மூன்று முறை வலம் வந்து வணங்க வேண்டும். நெல்லி மரம் இல்லாத நிலையில், வீட்டுப் பூஜையறையில், வணங்கி வழிபட்டுவிட்டு, சர்க்கரைப் பொங்கல் மற்றும் புளியோதரை நைவேத்தியம் செய்து வழிபடலாம். துளசிச் செடி வளர்த்து வந்தால், துளசிச் செடிக்கு சந்தனம் குங்குமமிடலாம். மூன்று முறை வலம் வந்து வேண்டிக்கொள்ளலாம். இதனால், கோ தானம் செய்த பலன்கள் கிடைக்கப் பெறலாம் என்பது ஐதீகம் என்று விவரிக்கின்றனர் ஆச்சார்யர்கள்.