பித்ரு தோஷம் இருக்கிறதா என்பதைத் தெரிந்து கொள்ள கருடபுராணம் மிக எளிமையான வழிமுறைகளை தெளிவாக எடுத்துரைத்துள்ளது.
ஒருவர் இறந்த பின்பு அவருக்குரிய பித்ரு கடன்களை முறைப்படி செய்யாதவர்கள் குடும்பத்தில் மனக் கஷ்டம், பணக்கஷ்டம் போன்றவை இருந்து கொண்டே இருக்கும் என்கிறது தர்ம சாஸ்திரம். .
நம் குடும்பத்தில் இறந்தவரின் ஆன்மா சாந்தியடைய நமது முன்னோர்கள் பல்வேறு வழிமுறைகளைக் கையாண்டனர், இறந்தவுடன் இறந்தவருக்கு செய்ய வேண்டிய பிண்டம் இடுதல், இறந்தவரின் திதி தோறும் அவருக்குரிய கடமைகளை செய்து வணங்குதல் போன்றவற்றை செய்யாமல் இருக்கும்போது இறந்தவரின் ஆன்மா பசியாலும் தாகத்தாலும் தவிப்பார்கள் என்கிறார்கள் ஆச்சார்யர்கள்.
அப்படி அந்த ஆத்மா அவதிப்படும்போது, ஆத்மாவின் அவதியால் அவரது சந்ததியினரே கஷ்டத்துக்கு ஆளாவார்கள் என்கிறது தர்மசாஸ்திரம். இதையே பித்ரு தோஷம் என்றும் பித்ரு சாபம் என்றும் சொல்கிறார்கள்.
ஒருவர் நல்லவராக, இறை பக்தி மிகுந்தவராக வாழ்ந்து இறந்தவராக இருந்தால், அவர்களுக்கும் பித்ருக் கடன்களைச் செய்தே ஆகவேண்டும். அப்படிச் செய்யாமல் போனால், அவர்களின் சந்ததியினருக்கு கொஞ்சம் தாக்கமும் இறக்கமும் இருக்கும் என்பது ஐதீகம். பித்ரு தோஷம் உண்டு என்பதை உணர்ந்து பித்ரு முதலான காரியங்களைச் செய்யவேண்டும் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.
இறந்தவர் நல்லவராகவோ கெட்டவராகவோ இருந்திருக்கலாம். அவர்களுக்கு உரிய தர்ப்பண, திதி காரியங்களை செய்யாமல் விட்டால், தோஷம் என்பது தோஷம் தான் என்றும் இறந்தவர்களின் கர்மவினைப் பயன்கள், அடுத்தடுத்த சந்ததிக்கும் தொடரும் என்றும் விவரிக்கின்றன ஞானநூல்கள்.
ஆத்மாக்களை அமைதிப்படுத்தாவிட்டால், சாந்தப்படுத்தாமல் விட்டால், அடுத்தடுத்த பாவங்களுக்கு சந்ததியினர் ஆளாக நேரிடும். அடுத்தவர் பொருளை அபகரித்தல், லஞ்சம் முதலான விஷயங்களின் பாவங்களுக்கு ஆளாதல், கல்வியில் முழுமை அடையாமல் குழந்தைகள் இருப்பார்கள், குலதெய்வ வழிபாடுகள் தடைப்பட்டுப் போகும். திருமணம் தடைபடும். நல்ல மணைவியோ குழந்தைகளோ மனம் விட்டுப் பேசும் நண்பர்களோ கிடைக்காமல் போவார்கள் என்கிறது கருடபுராணம்.
எனவே, பித்ருக்களின் ஆசி என்பது முக்கியம். குலதெய்வ வழிபாடு முக்கியம் என்பது போல், பித்ருக்களின் வழிபாடு மிக மிக முக்கியம் என்கிறார்கள் ஆச்சார்யர்கள். முக்கியமான தருணங்களில், பித்ரு வழிபாட்டைச் செய்யவேண்டும் என்று விவரிக்கிறார்கள்.