நவக்கிரகங்களில் உள்ள முக்கியமான கிரகமாக சுக்கிர கிரகம் போற்றப்படுகிறது. சுக்கிர யோகமும் சுக்கிர அருளும் கிடைக்கவேண்டும் எனில் நவக்கிரகத்தை முடியும் போதெல்லாம் வலம் வர வேண்டும்.
ஒருவருக்கு வாழ்வில் சுக்கிர யோகம் என்பது மிக மிக அவசியம். வாழ்வில் என்ன நல்லது நடந்தாலும் ‘அவருக்கு சுக்கிர யோகம் அடிச்சிருப்பா’ என்றெல்லாம் சொல்வோம். சொல்லக் கேட்டிருப்போம். ஆக, வாழ்வில் எந்த நல்லது நடந்தாலும் அவற்றில் சுக்கிர பகவானின் அருளும் ஆட்சியும் அமைந்திருக்கும் என்கிறார்கள் ஆச்சார்யர்கள்.
சுக்கிரனுக்கு அதிபதி மகாலக்ஷ்மி. சுக்கிர பகவானை வணங்கினால் மகாலக்ஷ்மியின் அருளைப் பெறலாம். மகாலக்ஷ்மியின் கடாட்சம் கிடைக்கப் பெற்றால்தான் வாழ்வில் நிம்மதியும் சந்தோஷமும் நிலைத்திருக்கும். பொருளும் பொன்னும் நிறைந்திருக்க இனிதே வாழலாம்.
சுக்கிர வாரம் என்று வெள்ளிக்கிழமையைச் சொல்லுவார்கள். சுக்கிர பகவானின் ஆதிக்கம் நிறைந்த நாள் இது.
மகாலக்ஷ்மியை வணங்குவதற்கு உகந்த நாளாகவும் வெள்ளிக்கிழமையைப் போற்றி விவரிக்கின்றன சாஸ்திரங்கள். எனவே, வெள்ளிக்கிழமைகளில் மகாலக்ஷ்மி வழிபாடு செய்யவேண்டும். அதேபோல், நவக்கிரகங்களில் உள்ள சுக்கிர பகவானை வணங்கவேண்டும். ஒன்பது முறை வலம் வந்து சுக்கிர பகவானுக்கு உரிய காயத்ரியைச் சொல்லி மனதார வேண்டிக்கொண்டால், மங்கல காரியங்கள் தடையின்றி நிகழும். மங்காத புகழையும் செல்வத்தையும் பெறலாம்.
சுக்கிர பகவான் காயத்ரி மந்திரம்:
ஓம் அச்வத்வஜாய வித்மஹே
தனூர் அஸ்தாய தீமஹி
தந்நோ சுக்ர ப்ரசோதயத்
நவக்கிரகத்தில் உள்ள சுக்கிர பகவான் சந்நிதியில் சுக்கிர பகவானுக்கு முடிந்தால் அபிஷேகம் செய்து பிரார்த்தனை செய்யுங்கள். அர்ச்சனை செய்து வேண்டிக்கொள்ளுங்கள். இளம்பச்சை அல்லது வெண்மை நிறத்திலான வஸ்திரம் சார்த்தி வழிபடுங்கள். கடன் தொல்லையில் இருந்து மீட்டெடுப்பார் சுக்கிர பகவான். தனம் தானியம் பெருக்கித் தந்தருள்வாள் மகாலக்ஷ்மித் தாயார்.
முடியும் போதெல்லாம் சுக்கிர பகவானுக்கு வஸ்திரம் சார்த்தி வேண்டிக்கொள்ளுங்கள். சுக்கிர யோகத்தைப் பெறுவீர்கள். மகாலக்ஷ்மியின் கருணைப் பார்வையால் லக்ஷ்மி கடாட்சம் இல்லத்தில் நிறைந்திருக்கும் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.