ஆன்மிகம்

வார ராசிபலன் 19-11-2015 முதல் 25-11-2015 வரை (மேஷம் முதல் கன்னி வரை)

சந்திரசேகர பாரதி

மேஷ ராசி வாசகர்களே,

உங்கள் ராசிநாதன் செவ்வாய் 6-ல் உலவுவதும், குருவும் செவ்வாயும் ஜன்ம ராசியைப் பார்ப்பதும் சிறப்பாகும். இதனால் உங்கள் தேக ஆரோக்கியம் சீராக இருந்துவரும். முக்கியமான எண்ணங்கள் ஈடேறும். நண்பர்கள், உறவினர்களால் அனுகூலம் ஏற்படும். நிலம், மனை, வீடு போன்ற சொத்துகள் சேரும். சொத்துகள் மூலம் ஆதாயமும் கிடைத்துவரும்.

ஆன்மிகவாதிகளுக்கும், அறப்பணியாளர்களுக்கும் வரவேற்பு அதிகரிக்கும். வார நடுப்பகுதியில் எதிர்பாராத செலவுகள் ஏற்படும். வாரப் பின்பகுதியில் மதிப்பும் அந்தஸ்தும் உயரும். மன மகிழ்ச்சி கூடும். 8-ல் சூரியனும் சனியும் இணைந்திருப்பதால் மக்களாலும் தந்தையாலும் சிறுசிறு பிரச்னைகள் ஏற்பட்டு விலகும். கெட்டவர்களின் தொடர்புக்கு இடம் தரலாகாது. வியாபாரிகளுக்கு அளவோடு லாபம் கிடைத்துவரும். வாழ்க்கைத்துணைவரின் நலனில் கவனம் செலுத்த வேண்டிவரும்.

அதிர்ஷ்டமான தேதிகள்: நவம்பர் 22, 23.

திசைகள்: வடகிழக்கு, தென்மேற்கு, தெற்கு, வடக்கு.

நிறங்கள்: சிவப்பு, பொன்நிறம்.

எண்கள்: 3, 4, 5, 9. ‎

பரிகாரம்: சூரியன், சுக்கிரன், சனி ஆகிய கிரகங்களுக்கு அர்ச்சனை, ஆராதனைகள் செய்து வழிபடுவது நல்லது.

ரிஷப ராசி வாசகர்களே,

உங்கள் ராசிக்கு 5-ல் சுக்கிரனும், 11-ல் கேதுவும் உலவுவதால் ஓரிரு காரியங்களில் வெற்றி கிட்டும். கலைஞர்களுக்கு அளவோடு அனுகூலம் உண்டாகும். ஆன்மிகப்பணிகளில் ஈடுபாடு கூடும். ஒன்றுக்கு மேற்பட்ட இனங்களால் ஆதாயம் கிடைத்துவரும். ஜலப்பொருட்கள் லாபம் தரும். நல்லதொரு தகவல் வந்து சேரும். 5-ல் செவ்வாயும், ராகுவும் இருப்பதால் மக்கள் நலனில் கவனம் செலுத்த வேண்டிவரும். கணவன் மனைவி உறவு நிலை சீராகவே இருக்கும்.

வாரப் பின்பகுதியில் செலவுகள் சற்று கூடும். எதிரிகள் இருப்பார்கள்; என்றாலும் சமாளித்து வருவீர்கள். வயிறு சம்பதமான உபாதைகள் சிலருக்கு ஏற்படும். கூட்டாகத் தொழில் புரிபவர்கள் ஓரளவு வளர்ச்சி காண்பார்கள். மூத்த சகோதர, சகோதரிகளின் ஆரோக்கியத்தில் கவனம் தேவைப்படும். இயந்திரப் பணியாளர்கள் விழிப்புடன் செயல்படுவது நல்லது.

அதிர்ஷ்டமான தேதிகள்: நவம்பர் 22, 23

திசைகள்: வடமேற்கு, தென்கிழக்கு.

நிறங்கள்: மெரூன், வெண்மை, இளநீலம்.

எண்கள்: 6, 7.

பரிகாரம்: துர்கையையும் சுப்பிரமணியரையும் வழிபடுவது நல்லது.

மிதுன ராசி வாசகர்களே,

உங்கள் ராசிக்கு 4-ல் சுக்கிரனும் 6-ல் சூரியனும் புதனும் சனியும், 10-ல் கேதுவும் உலவுவது சிறப்பாகும். தெய்வப்பணிகளில் ஈடுபாடு கூடும். தொலைதூரத் தொடர்பு பயன்படும். ஆன்மிக, அறநிலைய, ஜோதிடப்பணிகளில் ஈடுபாடு உள்ளவர்களுக்கு முன்னேற்றமான சூழ்நிலை நிலவிவரும். தகவல் தொடர்பு இனங்கள் லாபம் தரும்.

பண வரவு சற்று கூடும். முக்கியமான எண்ணங்களில் சில வாரப் பின்பகுதியில் நிறைவேறும். கணிதம், எழுத்து, வுயாபாரம் போன்ற இனங்களால் ஆதாயம் கிடைக்கும். உழைப்பாளர்கள், பொது நலப்பணியாளர்கள், விவசாயிகள் ஆகியோருக்கெல்லாம் உழைப்பு வீண்போகாது. கலைத்துறையினருக்கு அளவோடு நலம் உண்டாகும். எதிலும் அவசரப்படாமல் நிதானமாக ஈடுபடுவது நல்லது. தாய் நலனில் கவனம் தேவை. அரசுப்பணியாளர்களுக்கும் அரசியல்வாதிகளுக்கும் அனுகூலமான போக்கு தென்படும்.

அதிர்ஷ்டமான தேதிகள் : நவம்பர் 22, 23

திசைகள்: தென்கிழக்கு, வடமேற்கு, மேற்கு, வடக்கு, கிழக்க

நிறங்கள்: நீலம், பச்சை, மெரூன், ஆரஞ்சு.

எண்கள்: 1, 5, 6, 7, 8.

பரிகாரம்: செவ்வாய், ராகு குரு ஆகியோருக்குப் பிரீதி செய்து கொள்ளவும்.

கடக ராசி வாசகர்களே,

உங்கள் ராசிக்கு 2-ல் குருவும் 3-ல் செவ்வாயும் ராகுவும் சுக்கிரனும் உலவுவது சிறப்பாகும். வார ஆரம்பத்தில் இரண்டு நாட்கள் உங்கள் ராசிநாதன் சந்திரன் 8-ல் உலவுவதால் சிறுசிறு பிரச்சினைகள் ஏற்பட்டு குரு பார்வையால் விலகும். வாரப்பின்பகுதியில் முக்கியமான எண்ணங்கள் ஈடேறும். வேலையில்லாதவர்களுக்கு நல்லதொரு வாய்ப்புக் கூடிவரும். எதிரிகள் அடங்குவார்கள். போட்டி, விளையாட்டு, வழக்கு ஆகியவற்றில் வெற்றி காணச் சந்தர்ப்பம் சாதகமாக அமையும்.

பொருளதார நிலை உயரும். எதிர்பாராத பொருள்வரவுக்கு இடமுண்டு. 5-ல் சூரியன், புதன், சனி ஆகியோர் உலவுவதால் மக்கள் நலம் ஒருநாள்போல் மறுநாளிராது; கவனம் தேவை. கலைத்துறையினருக்கு அளவோடு நலம் உண்டாகும். உடன்பிறந்தவர்கள் ஓரளவுக்கு உதவி புரிவார்கள தெய்வப் பணிகளில் ஈடுபாடு கூடும்.

அதிர்ஷ்டமான தேதிகள்: நவம்பர் 22, 23.

திசைகள்: வடகிழக்கு, தென்மேற்கு, தென்கிழக்கு..தெற்கு.

நிறங்கள்: புகை நிறம், இளநீலம், பொன் நிறம், சிவப்பு,.

எண்கள்: 3, 4, 6, 9.

பரிகாரம்: விநாயகரை வழிபடுவது நல்லது.

சிம்ம ராசி வாசகர்களே,

உங்கள் ராசிக்கு 2-ல் சுக்கிரனும், 4-ல் புதனும் உலவுவது சிறப்பாகும். குருவின் பார்வை 5, 7, 9-ம் இடங்களுக்குப் பதிவதும் குறிப்பிடத்தக்கது. இதனால் குடும்பத்தில் சலசலப்புகள் சற்றுக் குறையும். கணவரால் மனைவிக்கும் மனைவியால் கணவருக்கும் அனுகூலம் உண்டாகும். கூட்டுத் தொழில் லாபம் தரும். பண வரவு சற்று கூடும். கலைத்துறையினருக்கு திறமைக்குரிய பயன் கிடைத்துவரும்.

விஷ ஜந்துக்களாலும், விஷத்தாலும் சிலருக்குப் பாதிப்பு ஏற்படக்கூடும்; எச்சரிக்கை தேவை. உணவுப் பழக்கத்தில் கட்டுப்பாடு அவசியமாகும். வீண் செலவுகளைத் தவிர்க்கவும். வார நடுப்பகுதியில் சந்திரன் கேதுவுடன் கூடுவது குறை. வாரக் கடைசியில் சந்திரன் 9-மிடம் மாறி, குருவின் பார்வையைப் பெறுவதால் புனிதப்பணிகளில் ஈடுபாடு உண்டாகும். சுபச் செலவுகள் ஏற்படும்.

அதிர்ஷ்டமான தேதிகள்: நவம்பர் 23 (பிற்பகல்), 25.

திசைகள்: தென்கிழக்கு, வடக்கு.

நிறங்கள்: வான்நீலம், வெண்மை.

எண்கள்: 5, 6.

பரிகாரம்: கணபதி மூல மந்திரத்தைக் குரு முகமாக உபதேசம் பெற்றுச் சொல்வது நல்லது. விநாயகர் அகவல் வாசிக்கலாம்.

கன்னி ராசி வாசகர்களே,

உங்கள் ராசியில், சுக்கிரனும் 3-ல் சூரியனும் சனியும், உலவுவது சிறப்பாகும். எதிர்ப்புகள் இருந்தாலும் அவற்றைச் சமாளிக்கும் சக்தி பிறக்கும். கலைஞர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கூடிவரும். மாதர்களுக்கு அளவோடு நலம் உண்டாகும். உழைப்பு வீண்போகாமல் இருக்கும். தகவல் தொடர்பு இனங்களால் வருவாய் கிடைத்துவரும். அரசியல்வாதிகள், அரசுப்பணியாளர்கள், நிர்வாகிகள் ஆகியோர் தங்கள் நிலைமையில் வளர்ச்சி காண்பார்கள். தொழிலாளர்களுக்கும் விவசாயிகளுக்கும் அனுகூலமான போக்கு தென்படும்.

7-ல் கேது இருப்பதாலும், சந்திரன் வாரப்பின்பகுதியில் அனுகூலமாக உலவுவதாலும் மனத்தில் ஏதேனும் சலனம் இருந்துவரும். வாழ்க்கைத் துணைவருக்கும் உங்களுக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்படும். தாய் நலனுக்காகச் செலவு செய்ய வேண்டிவரும். மக்கள் நல முன்னேற்றத்துக்காகவும் செலவுகள் ஏற்படும். உத்தியோகஸ்தர்கள், ஆசிரியர்கள், ஆன்மிகவாதிகள் ஆகியோர் பொறுப்புடன் செயல்படுவது நல்லது.

அதிர்ஷ்டமான தேதி: நவம்பர் 22.

திசைகள்: தென்கிழக்கு, மேற்கு.

நிறங்கள்: வெண்மை, நீலம்.

எண்கள்: 1, 6, 8.

பரிகாரம்: கணபதி ஜப, ஹோமம் செய்வது நல்லது. துர்கைக்கு நெய் தீபம் ஏற்றி வழிபடவும்.

SCROLL FOR NEXT