நேபாள இந்துக்களின் முக்கியப் பண்டிகைகளில் தீபாவளியும் ஒன்று. அவர்களது மற்றொரு முக்கியப் பண்டிகை தசரா. தீபத்திருநாளை லக்ஷ்மி பூஜா, தீவாளி, யமபஞ்சயக் என்று பல்வேறு பெயர்களில் அழைத்தாலும், தியோஹார் ( பண்டிகை/ விழா) என்றே சிறப்பாக வழங்கப்படுகிறது.
கார்த்திகை மாத அமாவாசைதான் தியோஹாரின் முக்கிய நாளாகும். அமாவாசைக்கு முந்தைய இரண்டு தினங்களும், பிந்தைய இரண்டு தினங்களும்கூட முக்கியத்துவம் வாய்ந்தவை. ஆக, மொத்தம் ஐந்து நாட்களுக்குத் திருவிழாக் கோலம்தான். அதுவும் அறுவடைக் காலத்தில் வருவதால், பணப்புழக்கத்திற்கும் குறைவிருக்காது!
காக்கைப் பண்டிகை
பண்டிகையின் தொடக்க நாள் காக்கைக்கு என்று குறிப்பாக ஒதுக்கப்பட்ட நாளாகும். எனவே இது ‘காக் தியோஹார்’ (காக்கைப் பண்டிகை) என்றழைக்கப்படுகிறது. இப்பூவுலகில் மனிதர்கள் செய்யும் நல்லது, கெட்டது பற்றி எமனுக்கு எடுத்துச் சொல்வது தூதர் காக்கையின் வேலையாம். அதனால் நம்மைப் பற்றி யமதர்மனிடம் கெடுதலாகச் சொல்லாமல் இருப்பதற்காக, காக்கையைக் குஷிப்படுத்தும் நோக்கில் தியோஹார் பண்டிகையின் முதல் நாளன்று காக்கைக்குச் சிறப்புப் படையல் உண்டு!
இரண்டாவது நாளன்று, காலபைரவரின் வாகனமான நாய்க்கு அடித்தது யோகம். யமதர்மரின் வாயில் காப்போனாகிய நாய், தன்னை பூமியில் இம்சித்தவர்களை உள்ளே விடாதாம். வீட்டில் வளர்க்கப்படும் செல்ல நாய்களுக்கு மாலையிட்டு, திலகமிட்டு, விருந்துப் படையலும் உண்டு இந்த குக்கூர் (நாய்) தியோஹார் தினத்தன்று. இவ்வாறு உபசரிப்பவர் பற்றி யமனிடம் கெடுதலாக எதுவும் அந்த நாய் கூறிவிடாது என்பது நம்பிக்கை!
அன்னபூரணியை வரவேற்கும் தினம்
அன்றைய தினம், நரகாசுரனை ஸ்ரீ கிருஷ்ணர் வென்ற நரக் சதுர்தசி தினமாகவும் கொண்டாடப்படுகிறது. மூன்றாவது தினம் முக்கிய தினமாகும். அன்றுதான் அன்னபூரணி லக்ஷ்மியை வரவேற்கும் தினம். செல்வத்தை அளிக்கும் லக்ஷ்மியை வரவேற்பதற்காகத் தமது வீடுகளைச் சுத்தம் செய்து அலங்கரித்து, மாலை மங்கும் நேரத்தில் தீபமேற்றி வழிபடுகின்றனர். சிறுவர் சிறுமியர் பட்டாசு மத்தாப்புக்களைக் கொளுத்திக் கொண்டாடுவார்கள். அமாவாசை இரவாதலால், காளி பூசையும் நடைபெறும்.
அன்று இரவு முழுவதும் பாட்டும் நடனமும்தான். சிறுமிகளும் குமரிகளும், ‘பைலோ’ அல்லது பைலி ராம் கீதங்களை வீடுவீடாகச் சென்று பாடியபடி ‘பைலி‘ அன்பளிப்புகளைப் பெறுவர். இது பணமாகவோ அல்லது பொருளாகவோ இருக்கலாம்.
நான்காம் நாள் காலை கால்நடைச் செல்வங்களுக்குக் கொண்டாட்டம், அதிலும் குறிப்பாகப் பசுமாடுகளுக்கு. கோமாதாவிற்கு நன்றி தெரிவிக்கும் விதமாகப் பூஜிக்கின்றனர். பசுவும் லக்ஷ்மியைக் குறிப்பதுதானே. நேப்பாள நாட்டின் தேசிய விலங்கு பசு என்பதும் குறிப்பிடத்தக்கது.
இப்போது சிறுவர்கள், வாலிபர்களின் முறையாகும். இவர்கள் பாடுவதோ ‘தியோசி’ அல்லது தேவ ஸ்ரீராம் கீதமாகும். இராவணனை வென்று அயோத்திக்குத் திரும்பிய இராமனின் வீரத்தைப் புகழ்ந்து பாடுவதாகும் இது. பாடுபவர்களின் எதிர்பார்ப்பிற்கேற்ப அன்பளிப்பு வழங்கப்படவில்லையெனில் அந்த வீட்டின் முன்னிருந்து நகராமல் தொடர்ந்து ஆடிப்பாடி சத்யாகிரஹம் செய்வர். இந்த இரண்டு ராப்பொழுதுகளும் மிகவும் வேடிக்கையாக இருக்கும். பைலோ, தியோசி கீதங்கள் இந்தக் குறிப்பிட்ட இரண்டு இரவுகளில் பாடுவதற்கு மட்டுமேயாகும்.
தியோஹாரின் இறுதி நாளான ஐந்தாம் நாள், சகோதரனுக்குத் திலகமிடும் “பாய் டிக்கா” பண்டிகையாகும். சகோதரனின் நலன் வேண்டிப் பூஜித்து அவனுக்குத் திலகமிடும் வைபவம் நடைபெறுகிறது.
இந்த ஐந்து தினங்களில் மட்டுமாவது மானிடர்களின் உயிரைப் பறிக்கக் கூடாது என்று யமனின் இளைய சகோதரி யமுனா கேட்டுக்கொண்டு, இதேபோன்ற பாய் டிக்கா பூசை செய்து யமனிடம் அத்தகைய வாக்குறுதியைப் பெற்றதாகவும் ஒரு புராணக் கதை உண்டு. ஆகவே இந்த ஐந்து தினங்கள் யமபஞ்சயக் என்று வழங்கப்படுகின்றன.
தீப அலங்காரமும் பட்டாசுக் கொளுத்தலும் ஐந்தாம் நாள் இரவுவரை தொடர்வதுண்டு.
இவ்வாறாக, காக் (காகம்), குக்கூர் (நாய்), லக்ஷ்மி, காய் (பசு), பாய் (சகோதரன்) என்று தியோஹார் பண்டிகையின் ஐந்து தினங்களும் எதையாவது சாக்கிட்டு விருந்தும், ஆட்டபாட்டமும், கேளிக்கையுமாக ஒரே விழாமயம்தான்!