காரைக்கால் கைலாசநாதர் கோயிலில் நடைபெற்ற பிரம்மோற்சவ விழாவுக்கான பந்தல்கால் முகூர்த்தம். 
ஆன்மிகம்

காரைக்கால் கைலாசநாதர் கோயில் பிரம்மோற்சவ விழா: பந்தல்கால் முகூர்த்தம்

வீ.தமிழன்பன்

காரைக்காலில் உள்ள புகழ்பெற்ற சுந்தராம்பிகை சமேத கைலாசநாதர் கோயிலில் பங்குனி உத்திர பிரம்மோற்சவ விழாவுக்கான பந்தல்கால் முகூர்த்தம் இன்று நடைபெற்றது.

இக்கோயிலில் ஆண்டுதோறும் பங்குனி உத்திர பிரம்மோற்சவ விழா சிறப்பான வகையில் நடத்தப்பட்டு வருகிறது. கரோனா தொற்றுப் பரவல் காரணமாக கடந்த ஆண்டு விழா நடத்தப்படவில்லை. நிகழாண்டு விழா மார்ச் 19-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கவுள்ளது. பிரம்மோற்சவ விழாவுக்கான பந்தல்கால் முகூர்த்தம் இன்று (மார்ச் 8) காலை நடைபெற்றது.

பந்தல் காலுக்க பால், தயிர், மஞ்சள், திரவியப்பொடி உள்ளிட்ட பல்வேறு பொருட்களைக் கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர், பந்தல்காலுடன் பிரகாரத்தை வலம் வந்து கோயில் வாயிலில் நடப்பட்டது. தொடர்ந்து மகா தீபாராதனை காட்டப்பட்டது. இதில், கோயில் அறங்காவல் குழுத் தலைவர் ஆர்.ஏ.ஆர்.கேசவன், செயலாளர் எம்.பக்கிரிசாமி, பொருளாளர் டி.ரஞ்சன் மற்றும் நிர்வாகிகள், பக்தர்கள் கலந்து கொண்டனர்.

25-ம் தேதி திருக்கல்யாணம், 27- ம்தேதி தேரோட்டம், 31-ம் தேதி தெப்பத் திருவிழா உள்ளிட்ட நிகழ்வுகள் நடைபெறவுள்ளன.

SCROLL FOR NEXT