ஈச்வரனிடத்தில் பக்தி, அதே போன்ற பக்தி குருவிடத்திலும் என்று இருந்துவிட்டால் உபதேச உள்ளர்த்தமெல்லாம் புரிந்து அநுபூதி கிடைத்துவிடும். இதிலே சிஷ்யர்களின் மனப்பான்மைகளையொட்டி, பக்தி பாவத்தில் பங்கீடும் கொஞ்சம் வித்யாசமாக வரும்.
‘ஈச்வரனிடத்தில் பக்தி செய்வதுதான் பரம தாத்பர்யம். அதற்கு வழிகாட்டுபவர் என்ற முறையில் குருவிடமும் பக்தி விசுவாசம் பாராட்டுவோம்' என்பதாக மனோபாவம் உள்ளவர்களும் இருப்பார்கள். இங்கே, ஈச்வரன் என்ற நமக்குத் தெரியாத ஆசாமியையே மனசு பற்றிக்கொண்டிருக்க முக்கியமாக ஆசைப்படும்.
அவனைத் தெரிய வைப்பதற்குச் சகாயம் செய்பவரென்றே குருவிடம் போவது, அந்த மெயின் லைனில் கொண்டு போய்ச் சேர்க்கிற ஸைட் - லைன் இவர் என்ற அளவில் இவரிடமும் ஒரு நன்றி, ஒரு பக்தி இருக்கும். இப்படிப்பட்ட மனோபாவத்தையும் குரு மதித்து இவனை ஏற்றுக்கொள்வார்.
ஒரு சின்னக் கொடி படர ஆதாரமில்லாமல் ஆடிக்கொண்டிருக்கும்போது நாம் அதைப் பிடித்து ஒரு கொழுகொம்பில் சுற்றிவிடுவதுபோல, அவர் இந்த மனோபாவக்காரனைக் கொண்டு போய் ஈச்வரன் என்ற கொழுகொம்பைப் பற்றிக் கொள்ளும்படி செய்துவிடுவார். அவனுக்குத் தெரியாமலிருந்த விஷயத்தைத் தெரிந்ததாகப் பிடித்துக்கொடுத்துவிடுவார். ஈச்வரனும் இந்த ரீதியிலேயே அவனை அங்கீகரித்துக்கொள்வான்.
இன்னொரு பாவம், ஈச்வரனே குரு ஸ்வரூபமாக வந்திருக்கிறானென்பது ஈச்வரன், குரு இரண்டு பேரும் சமம் என்று வைத்துக்கொண்டு சுலோகத்தில் சொன்னபடி ஈச்வரனிடமும் பக்தி, குருவிடமும் அதற்குக் கொஞ்சங்கூடக் குறையாத பக்தி என்றிருப்பது.
பக்தியைப் பங்கு போடுவதா, அதேபோல அநுக்கிரகத்திலும் ஈச்வரன், குரு என்று இரண்டு பேர்கள் பங்கு போட்டுக்கொண்டு பண்ணுவார்களா என்று நாம் பரிகாசம் பண்ணினாலும் அது ‘யுக்தி'யில் சொன்னதுதான். ‘அநுபவ'த்தில் எப்படி இருக்குமென்றால் இம்மாதிரி மனோபாவகாரனுக்குச் சில சமயங்களில் ஈச்வரன் என்பதிலேயே சித்தம் போய் அப்படியே பக்தியில் நிற்கும். சில சமயங்களில், ‘அவனுடைய நராகாரமே இது' என்ற பாவத்துடன் குரு ஸ்வரூபத்திலேயே சித்தம் பக்தியில் நிரம்பிப் பதிந்திருக்கும். ஒரே ஈச்வரன் ஈச்வரனேயான ரூபம், குருவாக எடுத்துக்கொண்ட ரூபம் என்ற இரண்டின் மூலமும் அநுக்ரஹம் பண்ணுவான்.
மூன்றாவது பாவம், ‘ஈச்வரனைப் பற்றிய கவலையே இல்லை. அவன் எப்படி வேண்டுமானாலும் இருந்து விட்டுப் போகட்டும். நமக்கு வேண்டியது குருதான். ஈச்வரன் அவர் மூலம் நல்வழி காட்டுகிறான், அல்லது அவராக ரூபம் எடுத்துக்கொண்டு வருகிறான் என்ற கதையெல்லாம்கூட வேண்டாம். நமக்குக் குருவான இவரேதான் சகலமும். இவரேதான் நம்முடைய ஈச்வரன், கீச்வரன் எல்லாமும். அதனால் இவரை மாத்திரம் அன்யோன்யமாக உபாசிக்க வேண்டியது. இவரே கடைத்தேற்றிவிட்டுப் போகிறார்' என்று இருப்பது முழு பக்தியையும் குரு ஒருவருக்கே செலுத்துவது.
‘கடைத்தேறுவது என்பதைக்கூட நினைப்பதில்லை. குருவிடம் பக்தியாயிருந்து சுச்ருஷை பண்ணிக்கொண்டிருப்பதே ஆனந்தமாக இருக்கிறதோல்லியோ. அதற்காகவே அப்படிச் செய்வது. கடைத்தேற்றுகிறார், ஏற்றாமலிருக்கிறார், எப்படிச் செய்வாரோ செய்துவிட்டுப் போகட்டும். நமக்கு அதைப் பற்றி விசாரமில்லை. நாம் பக்தியோடு தாஸ்யம் செய்துகொண்டு அதிலேயே நிறைந்து கிடப்பது' என்று இருப்பது இன்னம் மேலே.
உபாத்தியாயர்
இக்காலத்தில், நமக்குத் தெரிந்த குரு, ஆசார்யர் எல்லாம் ஸ்கூலில், காலேஜில் பாடம் சொல்லித் தரும் டீச்சர்தான். அவரை ‘வாத்தியார்' என்று சொல்கிறோம். நமக்குக் கர்மாக்கள் பண்ணி வைக்கிற சாஸ்திரிகளையும் ‘வாத்தியார்' என்கிறோம். இவரைப் ‘புரோஹிதர்' என்றும் சொல்கிறோம். ‘வாத்தியார்', ‘புரோஹிதர்' என்ற வார்த்தைகள் பற்றிக் கொஞ்சம்.
‘உபாத்யாயர்' என்பது திரிந்துதான் ‘வாத்தியார்' என்று ஆகியிருக்கிறது. குருவுக்குத் தக்ஷிணை தர வேண்டும் என்று சத்சம்ப்ரதாயத்தில் இருக்கிறபோதிலும் நிஜமான குரு என்பவர் அதை நினைத்துப் பண்ணுகிறவரில்லை. அவர் ரேட் ஃபிக்ஸ் பண்ணிவைத்து அந்தப்படி வசூலித்தே மாணவனை வகுப்புக்கு அநுமதிப்பவர் இல்லை. வித்யை பரவவேண்டுமென்ற நோக்கத்திலேயே சொல்லிக் கொடுப்பவர்தான் ‘குரு', ‘ஆசார்யர்', ‘அத்யாபகர்', ‘அத்யக்ஷர்' என்றெல்லாம் கூறப்படுகிறவர்.
அப்படியில்லாமல் சம்பளத்திற்காகவே சொல்லிக் கொடுக்கிறவர்தான் ‘உபாத்யாயர்' என்று ஒரு டெஃபனிஷன் உண்டு. இங்கே பல விதமான டீச்சர்களில் ‘இன்ஃபிரிய'ரான (தாழ்வான) இடம் பெறுபவராகவே ‘உபாத்யாய'ரைத் தெரிந்துகொள்கிறோம். ஆனால் வேறே ஒருவிதமான ‘டெஃபனிஷன்' அவருக்கும் உசந்த இடமே கொடுக்கிறது. அது என்னவென்றால், ‘உபேத்ய தஸ்மாத் அதீயத இதி உபாத்யாய:' என்பது.
இந்த டெஃபனிஷனில் ஒரு ட்ராமாவையே அடைத்து வைத்திருக்கிறது Factual -ஆக மட்டும் அர்த்தம் பண்ணாமல் கதாபாத்திரங்களைக் காட்டி அவர்கள் மூலமாக அர்த்தம் தெரிவிக்கும் டெஃபனிஷன்.
ஒரு நல்ல குருவை, சம்பளத் தையே நினைத்துச் சொல்லித் தருகிற ஒருத்தர் இல்லை, உத்தமக் குரு ஒருவரை, ஒரு பிதா தன்னுடைய புத்திரனுக்குக் காட்டி அவரிடம் குருகுலவாசத்தில் விடுவதற்கு முன் புத்திரனிடம் சொல்லும் வாசகமாக இந்த டெஃபனிஷன் காட்டுகிறது.
‘உபேத்ய' என்றால் ‘கிட்டே போய் இருந்துகொண்டு', குருவைக் காட்டி ‘இவரிடம் போய்க் கூட இருந்துகொண்டு குரு குல வாசம் பண்ணிக்கொண்டு' என்று அப்பாக்காரர் சொல்கிற வார்த்தை. ஒரு பாலன் எவர் கிட்டே போயிருந்து கொண்டு, அதாவது சொந்த வீட்டில் வசிப்பதை விட்டுக் குருகுல வாசம் பண்ணி, வித்யாப்யாசம் பெறணுமோ அவரே 'உபாத்யாயர்' என்று இதற்கு நாம் பொருள் கொள்ள வேண்டும்.
- தெய்வத்தின் குரல் (ஐந்து மற்றும் ஆறாம் பகுதி)