ஆன்மிகம்

சமணத் திருத்தலங்கள்: பரிதி எழும் மலை - உதயகிரி, கண்டகிரி

விஜி சக்கரவர்த்தி

சமண ஆலயங்களுக்கும் மலைகளுக்குமுள்ள தொடர்பு தொன்மையானது. டர்பு ஒடிசா மாநிலத்திலுள்ள புவனேஸ்வர் அருகிலுள்ள உதயகிரி கண்டகிரி மலைகளிலும் சமணத்தின் சுவடுகளைக் காணமுடிகிறது. இம்மலைகளின் இடையே தான் உதயகிரியும் கண்டகிரியும் உள்ளன. உதயகிரி என்றால் சூரியஉதய மலை. கண்டகிரி என்றால் உடைந்தமலை. மக்களுக்குத் தொழில்களைக் கற்பித்த அறவாழி அண்ணல் ஆதிபகவன் இப்பகுதியைத் தொழில்பூமியாகக் கருதினார். பண்ணவன் பார்சுவநாத தீர்த்தங்கரபகவான் இங்கே பலமுறை வருகை தந்துள்ளதாகக் கூறப்படுகிறது. ஐம்பொறிகளை வென்ற மகாவீரரின் சமவசரண அறவுரை இங்கு நடைபெற்றுள்ளது.

இங்கே மலைகளைக் குடைந்து செய்யப்பட்ட சமண குடைவரைக் குகைகள் நிறைந்து காணப்படுகின்றன. கி.மு. இரண்டாம் நூற்றாண்டில் இவற்றை உருவாக்கியவர் மவுரிய மன்னன் கார்வேலன். சமண தவமுனிவர்கள் தங்கி தவம் நோற்பதற்காக இவை அமைக்கப்பட்டவை.

தேன்கூடுகளாகக் குகைகள்

குகைகளுக்குள் பல அறைகள் உள்ளன. கற்படுக்கைகளும் கல்வெட்டுகளும் காணப்படுகின்றன. குகைகளின் மேற்கூரை தாழ்வானவை. தாழ்வாரப்பகுதிகளும் அமைந்துள்ளன. குகைவாயில்களிலும் சுவர்ப் பகுதிகளிலும் அழகிய வளைவுகள், சமணக் கதைகள், தேவர்கள், பூவேலைப்பாடுகள் போன்ற கண்கவர் சிலைகள் செதுக்கப்பட்டுள்ளன. குடைவரைகள் தேன்கூடுபோல் தோன்றுகின்றன. இருமலைகளிலும் முப்பத்திமூன்று குடவறைகள் உள்ளன.

தாமரைப் பூக்களும் பாம்புச் சிலைகளும்

உதயகிரியில் பதினெட்டுக் குகைகள் உள்ளன. அவற்றில் ராணி கும்பா எனப்படும் இரண்டு அடுக்குக் குகை அழகானது. மேல் அடுக்கில் அருகக் கடவுளுக்குரிய தாமரை பூக்களும் பாம்புச் சிலைகளும் காணக் கிடைக்கின்றன. உதயகிரியின் உச்சியில் ஒரு சமணக் கோயில் உள்ளது.

அதில் எட்டடி உயரக் கருநிறக் கல்லில் உருவாக்கப்பட்ட பார்சுவநாதர் நின்று அருளுகிறார். அப்பகுதி முழுக்க குடைவரைகளின் இடிந்த மிச்சங்கள் தென்படுகின்றன. சில குகைகளின் சுவரில் தீர்த்தங்கரர்களின் சிலைகள் உள்ளன. ஓரிடத்தில் குகை இருந்த பாறை பிளந்து சரிந்திருக்க, எட்டா உயரத்தில் புடைப்பாகச் செதுக்கப்பட்ட தீர்த்தங்கரர் மற்றும் யட்சி சிலைகள் நம்மைப் பார்த்துக்கொண்டிருக்கின்றன. குகை விளிம்புகளிலும் நேர்த்தியான சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன.

சமணத்துறவிகளின் உறைவிடங்கள்

கண்டகிரி சமணக் குடைவரைகளை சாதவாகனர்களும் மற்ற மன்னர்களும் தொடர்ச்சியாக ஏழாம் நூற்றாண்டு வரை கட்டிக்கொடுத்திருக்கிறார்கள். எழுநூறுக்கும் மேற்பட்ட குடைவரைகள் இருந்துள்ளன. காலமாற்றத்தால் தற்போது பதினைந்தே உள்ளன. பெரிய குடைவரை யானைக்குகை என்று அழைக்கப்படுகிறது. இது முன்பு யானை முகத்தோடு இருந்துள்ளது. இதில் கார்வேல மன்னரின் கல்வெட்டு உள்ளது. இக்கல்வெட்டு இந்தியாவின் பழமையான விரிவான கல்வெட்டுகளில் ஒன்றாகும். சமணத்துறவிகளுக்கு உறைவிடங்கள் அமைத்ததை இக்கல்வெட்டு குறிப்பிடுகிறது.

எட்டடுக்கு மாளிகையான குடைவரை ஒன்று பூகம்பத்தால் பாதிக்கப்பட்டு இப்போது மூன்றடுக்குகளாகக் காணப்படுகிறது. குடைவரைக் கோயில்களின் மேல்விளிம்பில் நுணுக்கமாகச் சிலைகள் பொறிக்கப்பட்டுள்ளன. நவமுனி எனும் குகையில் ஒன்பது தீர்த்தங்கரர்களின் திருமேனிகள் வடிக்கப்பட்டுள்ளன. ஒரு குகையில் சுவஸ்திகம், ஸ்ரீவத்சம் போன்ற சமணத்தின் புனிதச் சின்னங்கள் செதுக்கப்பட்டுள்ளன.

மற்றொரு குகையில் முதற்கடவுள் விருஷபநாதரின் மூன்று சிலைகள் உள்ளன. கணேஷ் குகையில் பெருங்கதை நாயகன், கௌசாம்பி மன்னன் உதயணன், காதலி வாசவ தத்தையை நண்பன் வயந்தகன் உதவியுடன் கவர்ந்து செல்லும் காட்சி அருமையாக வடிக்கப்பட்டுள்ளது.

மலையின் உச்சியில் தீர்த்தங்கர மகான்கள் விருஷபதேவர், பாரீசர் கோயில்களும் 24 பேரின் திருவடிகளும் இருக்கின்றன. மலையடியில் கோயிலும் சத்திரமும் உள்ளன. வழிபாட்டுக்கு மட்டுமின்றித் தொன்மைக் காலத்து மனிதர்களின் தேடலையும் பயணத்தையும் உரைப்பதாக இக்குகை ஆலயங்கள் இருக்கின்றன.

SCROLL FOR NEXT