வாராஹி காயத்ரியை தினமும் சொல்லி வழிபட்டு வந்தால், வளமும் நலமும் தந்தருளுவாள் தேவி. தீயசக்திகளை விரட்டியடிப்பாள் அன்னை. பஞ்சமி திதியில் வாராஹி வழிபாடு மிகவும் விசேஷமானது. பலம் பொருந்தியது என்கிறார்கள் வாராஹி வழிபாட்டு பக்தர்கள்.
சப்த மாதர்களில் ஒருத்தியாகத் திகழ்கிறாள் வாராஹி தேவி. அசுரக்கூட்டத்தை அழிக்க பராசக்தி படைகளை உருவாக்கினாள். அந்தப் படைகளின் தலைவியாக, சேனைத் தலைவியாக விளங்கினாள்; அசுரக்கூட்டத்தை அழித்தொழித்தாள் என்கிறது புராணம்.
சும்ப - நிசும்ப அரக்கர்களை அழிக்க, ஆதிபராசக்தி முடிவெடுத்தபோது, அவளுக்குத் துணையாக, அவளுக்கு உதவியாக, அவளின் பக்கபலமாக, படையாக உருவெடுத்து வந்தவர்களே சப்தமாதர்கள் என்கிறது தேவி புராணம்.
இந்த ஏழு பேரில், வாராஹி தேவி, மகாசக்தி வாய்ந்தவள். இவளை வணங்கி ஆராதித்து வழிபட்டு வந்தால், எதிரிகள் தொடர்பான பயம் நீங்கும். எதிரிகளைத் தோல்வியுறச் செய்து எதிர்ப்புகளை தூள் தூளாக்குவாள் தேவி என்கின்றனர் பக்தர்கள்.
பஞ்சமி தினம் வாராஹி தேவிக்கான, அவளை வழிபடுவதற்கான, அவளை ஆராதிப்பதற்கான அற்புதமான நாள். வாராஹி தேவிக்கு அவளுக்கு செந்நிற மலர்கள் அணிவித்து வழிபடுவது மிகுந்த பலனைத் தரும். தன்னம்பிக்கையையும் தைரியத்தையும் தந்தருள்வாள் வாராஹி தேவி!
ஓம் ச்யாமளாயை வித்மஹே
ஹல ஹஸ்தாயை தீமஹி
தந்நோ வாராஹி ப்ரசோதயாத்
எனும் வாராஹி தேவியின் மந்திரத்தை தினமும் 54 முறை அல்லது 108 முறை ஜபித்து வருவது மிகுந்த நன்மையைக் கொடுத்தருளும். இல்லத்திலும் உள்ளத்திலும் நிம்மதியைத் தவழச் செய்யும்.
3ம் தேதி புதன் கிழமை, பஞ்சமி திதி. சப்தமாதர்களில் ஒருவராகத் திகழும் வாராஹிதேவியை வணங்குவோம். மனோபலம் பெருகும். தடைகள் அகலும். இதுவரை தடைப்பட்டு வந்த விசேஷங்களும் மங்கல காரியங்களும் இனிதே நடைபெறும். கடன் தொல்லையில் இருந்து மீளச் செய்வாள் வாராஹி அன்னை!