சென்னை திருவொற்றியூர் ஸ்ரீதியாகராஜ சுவாமி கோயிலில், மாசிப் பெருந்திருவிழா, 17ம் தேதி தொடங்கியது. இன்று 18ம் தேதி கொடியேற்ற வைபவத்துடன் தொடங்கப்பட்டு, வருகிற 28ம் தேதி வரை நடைபெறுகிறது.
சென்னைக்கு அருகே உள்ள புராண - புராதனச் சிறப்பு மிக்க தலங்களில், திருவொற்றியூர் திருத்தலமும் ஒன்று. தொண்டை நாட்டு 32 திருத்தலங்களில், இந்தத் தலமும் ஒன்று சொல்லி விளக்குகிறது ஸ்தல புராணம்.
இங்கே உள்ள சிவனாரின் ஆதிபுரீஸ்வரர், ஸ்ரீதியாகராஜ சுவாமி. அம்பாளின் திருநாமம் ஸ்ரீதிரிபுரசுந்தரி. ஆதிபுரீஸ்வரர் கோயில் என்றும் தியாகராஜ சுவாமி கோயில் என்றும் அழைக்கப்பட்டாலும் வடிவுடையம்மன் கோயில் என்பதுதான் மக்களிடையே வெகு பிரபலம்.
சக்தி நிறைந்த திருத்தலம். சாந்நித்தியம் நிறைந்த ஆலயம். வருடந்தோறும் மாசிப் பெருந்திருவிழா,பிரம்மோத்ஸவ விழாவாக வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி 17ம் தேதி புதன்கிழமை, விநாயகர் உத்ஸவம் மற்றும் வழிபாட்டுடன் பிரம்மோத்ஸவ விழா தொடங்கியது. என்றாலும் 18ம் தேதி பிரம்மோத்ஸவ விழாவானது கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இரவு 8.30 முதல் 10 மணிக்குள் கொடியேற்றம் மற்றும் பூஜைகள் நடைபெறுகின்றன.
19ம் தேதி வெள்ளிக்கிழமை காலையில் சூரிய பிரபையில் ஸ்ரீசந்திரசேகரர் உத்ஸவமும் மாலையில் சந்திர பிரபையில், ஸ்ரீசந்திரசேகரர் உத்ஸவமும் அன்றை நாளின் இரவில் ஸ்ரீதியாகராஜ சுவாமி உத்ஸவமும் விமரிசையாக நடைபெறுகிறது.
20ம் தேதி சனிக்கிழமை, காலையில் பூத வாகனத்தில் ஸ்ரீசந்திரசேகரர் உத்ஸவம், மாலையில் சிம்மவாகனத்தில் ஸ்ரீசந்திரசேகர் உத்ஸவமும் இரவில் தியாகராஜசுவாமியின் 3ம் பவனி வைபவமும் நடைபெறும்.
21ம் தேதி ஞாயிற்றுக்கிழமை, காலையில் நாகவாகனத்தில் புறப்பாடு, மாலையில் ரிஷப வாகனத்தில் புறப்பாடு, இரவில் தியாகராஜசுவாமியின் 4ம் பவனி வைபவம் மற்றும் பூஜைகள் நடைபெறுகின்றன.
22ம் தேதி திங்கட்கிழமை 5ம் நாள் பிரமோத்ஸவ விழாவாக, நந்தி வாகனத்தில் புறப்பாடு, மாலையில் அஸ்தமான கிரி வாகனத்தில் புறப்பாடு, இரவில் தியாகராஜர் 5ம் பவனி முதலானவை நடைபெறுகின்றன.
பிரம்மோத்ஸவத்தின் 6ம் நாளாக, 23ம் தேதி செவ்வாய்க்கிழமை, காலையில் யானை வாகனத்தில் சுவாமி புறப்பாடு, மாலையில் புஷ்பப் பல்லக்கில் புறப்பாடு இரவில் தியாகராஜ சுவாமியின் 6ம் பவனி வைபவங்கள் நடைபெறுகின்றன.
பிரம்மோத்ஸவத்தின் 7ம் நாளாக 24ம் தேதி புதன்கிழமை காலையில் 9 முதல் 10.30 மணிக்குள் ஸ்ரீசந்திரசேகர் அபிஷேக அலங்காரத்துடன் காட்சி அளிக்க, திருத்தேர் உத்ஸவம் நடைபெறும். மாலையில் திருத்தேரிலிருந்து சுவாமி ஆலயத்துக்கு வந்து எழுந்தருளல் நிகழ்ச்சியும் இரவில் தியாகராஜ சுவாமி உத்ஸவமும் நடைபெறும்.
பிரம்மோத்ஸவத்தின் 8ம் நாளாக, 25ம் தேதி வியாழக்கிழமை, காலையில் குதிரை வாகனத்தில் புறப்பாடு, மாலையில் இந்திர விமானத்தில் புறப்பாடு, இரவில் தியாகராஜ சுவாமியின் உத்ஸவ தரிசனம் முதலான நிகழ்வுகள் நடைபெறுகின்றன.
9ம் நாளான 26ம் தேதி வெள்ளிக்கிழமை, காலையில் 9 மணி முதல் 10.30 மணிக்குள், ஸ்ரீகல்யாண சுந்தரர் திருக்கல்யாண வைபவம் நடைபெறும். இந்த வைபவத்தைத் தரிசித்தால், தடைப்பட்ட திருமணம் முதலான விசேஷங்கள் இனிதே நடைபெறும் என்பது ஐதீகம்.
அன்றைய தினம் மாலையில், ரிஷபாரூடராகக் காட்சி தருவார் சிவனார். இரவில், குழந்தை ஈஸ்வரர் கல்யாண சுந்தரருக்கும் சங்கிலி நாச்சியாருக்கும் மகிழ மரத்தடியில் திருக்காட்சி தந்தருளல் எனும் நிகழ்ச்சி நடைபெறும். இரவில் தியாகராஜ சுவாமியின் உத்ஸ்வப் புறப்பாடு நடைபெறும்.
பத்தாம் நாள் விழாவாக, 27ம் தேதி சனிக்கிழமை காலையில் தீர்த்தவாரி உத்ஸவ நிகழ்வு நடைபெறும். மாலையில் பிட்சாடனர், ஸ்ரீதண்டபாணி உத்ஸவம் நடைபெறும். இரவில் தியாகராஜ சுவாமி உத்ஸவம் மற்றும் அவரோகணம் என்று சொல்லப்படுகிற கொடி இறக்குதல் வைபவம் நடைபெறும்.
11ம் நாளான 28ம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று இரவு தியாகராஜ சுவாமியின் 18 திருநடன வைபவம் சிறப்புற நடைபெறும்.
பிரம்மோத்ஸவ விழா ஏற்பாடுகளை தியாகராஜ சுவாமி ஆலய நிர்வாகத்துடன் இணைந்து, கோயில் பணியாளர்கள், திருவொற்றியூர் குப்பம் நிர்வாகிகள், சிவன் தாங்கிகள் மற்றும் திருவொற்றியூர் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.
தொண்டை நாட்டின் அற்புதக் கோயில்களில் ஒன்றான திருவொற்றியூர் ஸ்ரீதிரிபுரசுந்தரி சமேத ஸ்ரீதியாகராஜ சுவாமி கோயிலின் பிரம்மோத்ஸவ விழாவை, மாசிப் பெருந்திருவிழாவை கண்ணாரத் தரிசிப்போம். நம் பாவங்களையெல்லாம் போக்கி அருளுவார் தியாகராஜ சுவாமி.