ஆன்மிகம்

எருக்க இலை... அட்சதை... பசுஞ்சாணி; ரதசப்தமியில் தண்ணீரால் தர்ப்பணம்! 

செய்திப்பிரிவு

தை மாத அமாவாசைக்குப் பிறகு ஏழாம் நாள் சப்தமி. ரத சப்தமி. ​சூரிய பகவானுக்கு உரிய நாள் ரத சப்தமி. ஏழு வண்ணங்களைக் கொண்ட ஏழு குதிரைகள் பூட்டப்பட்ட ஒற்றைச் சக்கரம் கொண்ட தேரில் சூரிய பகவான் வானத்தில் வலம் வருவதாக ஐதீகம்.

சூரிய ஒளி இல்லாவிட்டால் பூவுலகில் எதுவுமே இருக்க முடியாது. எனவேதான் உயிர்களைக் காக்கும் பரம்பொருளான திருமாலும் சூரியனும் ஒன்றாகக் கருதப்படுகின்றனர் என விவரிக்கிறது புராணம். சூரிய பகவானின் ரதத்திற்கு அருணன் சாரதியாக உள்ளார் என விளக்குகிறது புராணம். .

ரதசப்தமியன்று எருக்க இலைகளை சிரசின் மேல் வைத்துக்கொண்டு, கிழக்கு நோக்கி நின்று நீராட வேண்டும். கொஞ்சம் அட்சதையும் சேர்த்து நீராட வேண்டும். பசுஞ்சாணியும் சேர்த்துக் கொள்வார்கள். பெண்கள் மஞ்சளும் சேர்த்துக் கொள்ளவேண்டும். ரதசப்தமி திருநாளில் சூரியனின் கிரணங்கள் எருக்க இலைகள் மூலம் ஈர்க்கப்பட்டு, உடலில் ஊடுருவிச் சென்று, வியாதிகளைப் போக்கி நமக்கு ஆரோக்கியத்தைத் தருகின்றன. அதேபோல், இந்த தினத்தில் ஆறு அல்லது குளம் முதலான நீர்நிலைகளில் நீராடுவது சிறப்பு! கடல் நீராடுவதும் மகத்துவம் வாய்ந்தது.

மாசி மாதம் விசேஷமான மாதம். தை மாத அமாவாசைக்குப் பின்னர் வரக்கூடிய சப்தமி, ரத சப்தமி என்று போற்றப்படுகிறது. ரதசப்தமி நாளில், வீட்டு வாசலை மெழுகி, தேர்க்கோலம் இட்டு அலங்கரிக்க வேண்டும். பிறகு, சூரிய பகவானுக்கு சர்க்கரைப் பொங்கல் நைவேத்தியம் செய்து பூஜிக்க வேண்டும். கோதுமை கலந்த உணவு அல்லது பாயசம் நைவேத்தியம் செய்யலாம். இந்தப் புண்ணிய தினத்தில், வீட்டு பூஜையறையிலும் சூரிய ரதம் போன்று கோலம் வரைந்து, உரிய ஸ்லோகங்கள் கூறி சூரியனை வழிபடுவதால், சகல நலன்களும் உண்டாகும். எதிர்ப்புகளெல்லாம் விலகும். தீய சக்திகள் அனைத்தும் அண்டாது என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.

தன்னுடய சுழற்சிப் பாதையில் ஆறு மாதமாகச் சூரியனிடமிருந்து தொலைவில் சுற்றிக் கொண்டிருந்த பூமி அடுத்த ஆறு மாதங்கள் சூரியனுக்கு நெருக்கமான பாதையில் சுற்ற ஆரம்பிக்கிறது. இதை தட்சிணாயனம், உத்திராயனம் என்கிறோம்.

ரத சப்தமி நாளில் (19.2.2021 வெள்ளிக்கிழமை), சூரியனைப் போற்றுவோம். வணங்குவோம். ரதசப்தமி தர்ப்பணம் செய்து வழிபடுவோம். ரதசப்தமி நாளில் தர்ப்பணம் என்பது, வழக்கமாக எள்ளும் தண்ணீரும் விடுவது போன்றது அல்ல. வெறுமனே தண்ணீரைக் கொண்டு அர்க்யமாக விடவேண்டும்.

ரதசப்தமி நாளில், சூரியனை வணங்குவோம். விடியலைத் தருவார் சூரிய பகவான்.

SCROLL FOR NEXT